நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிப்பு மற்றும் செப்டெம்பர் மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் என்று பல்வேறு கருத்துக்கள் அரசியல் மட்டங்களில் பேசப்பட்டு வருகின்ற நிலையில், மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) இந்திய விஜயத்தை தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதியின் அமெரிக்க விஜயம் தொடர்பில் பல்வேறு கிசுகிசுக்கள் நாட்டில் உலாவுகின்றன.
அதாவது ‘அரசியல் கூட்டணி’ ஒன்று குறித்து மைத்திரிபால சிறிசேன அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகளுடன் பேசினாரா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மறுபுறம் சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் டளஸ் அழகப்பெரும, பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் உள்ளிட்ட முக்கிய தரப்புகளுடன் கலந்துரையாடியுள்ளார்.
இதேவேளை எதிர்க்கட்சியின் முக்கிய நான்கு பேருக்கு ஏப்ரல் மாதத்தில் அமைச்சு பதவிகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஆளும் கட்சியின் தகவல்கள் கூறுகின்றன.
கரு ஜயசூரிய – மத்தும பண்டார உரையாடல்
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிப்பு தொடர்பில் மீண்டும் நாட்டில் பேச்சுக்கள் அடிப்படுகின்ற நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு கரு ஜயசூரிய கலந்துரையாடியுள்ளார்.
அதாவது ‘நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிப்பு’ தொடர்பில் கருத்தரங்கு ஒன்றை சமூக நீதிக்கான மக்கள் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளதாகவும் அந்த நிகழ்வுக்கு தலைமை தாங்குமாறும் இதன்போது கரு ஜயசூரிய கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆனால் கரு ஜயசூரியவின் ‘நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிப்பு’ திட்டத்திற்கு தற்போது ஒத்துழைப்பு வழங்குவது உத்தேச தேர்தல்களில் பாதிப்புகளை ஏறபடுத்தும் என்ற விடயத்தை ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களுக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கூறியிருந்தார்.
இதனை கருத்தில் கொண்டே ரஞ்சித் மத்தும பண்டார, கரு ஜயசூரியவுக்கு மறுமொழியளித்தார். அதாவது ‘நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிப்பது எமது கட்சியின் நிலைப்பாடு என்றாலும்’ அதற்கு உகந்த சூழல் இதுவல்ல என்று மத்தும பண்டார பதிலளித்தார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிப்பதற்கு பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி பிரேரணை ஒன்றை முன்வைத்துள்ளது. எனவே, பாராளுமன்றத்தில் இதற்கு தீர்வு காணப்பட வேண்டும். மறுபுறம் ஜனாதிபதி தேர்தல் நடைப்பெற இன்னும் 6 மாத காலமே உள்ளது.
இவ்வாறானதொரு நிலையில் ‘நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிப்பு’ குறித்து தற்போது பேசுவது நடைமுறையில் சாத்தியமில்லை என்றும் மத்தும பண்டார கூறினார்.
இதனை கருத்தில் கொண்ட கரு ஜயசூரிய, ‘எமது அமைப்பு முன்னெடுக்க உள்ள கருத்தரங்கில் பங்கேற்க ஐக்கிய மக்கள் சக்தியை அழைப்பதாக’ கூறினார். கட்சி தலைமைகளுடன் பேசி இறுதி தீர்மானத்தை கூறுவதாக இதன்போது ரஞ்சித் மத்தும பண்டார கூறினார்.
சூழ்ச்சி வேண்டாம்
இவ்வாறானதொரு நிலையில், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸை தொடர்புகொண்ட கருஜயசூரிய, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிப்பு தொடர்பான கருத்தரங்கு குறித்து தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளிக்கையில், ‘6 மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கப் போவதாக தற்போது கூறுவது, தேர்தலை பிற்போடுவதற்கான சூழ்ச்சியாக காண முடிகிறது’ என பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கூறினார்.
‘உத்தேச ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் இதனை செய்ய முடியாது என்று எனக்கும் தெரியும். தேர்தலின் பின்னர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்ற கருத்தையே நான் கூறுகிறேன்’ என தெரிவித்தார்.
மைத்திரி அமெரிக்காவில் பேசியது என்ன?
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். அவர் இந்தியாவுக்கும் செல்ல திட்டமிட்டிருந்தார்.
அமெரிக்க விஜயம் குறித்து சில செய்திகள் வெளிவந்திருந்த போதிலும் மைத்திரிபால சிறிசேனவின் அமெரிக்க விஜயம் தொடர்பில் மர்மங்கள் அதிகமாக காணப்படுகின்றன.
அதாவது மைத்திரிபால சிறிசேனவை அமெரிக்கா அழைத்திருக்கவில்லை. மாறாக, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் ஊடக இராஜாங்க திணைக்கள அதிகாரிகளை சந்திக்க ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால், அமெரிக்க தூதரகம் இந்த தகவலை இராஜாங்க திணைக்களத்துக்கு அறிவித்திருந்த போதிலும் அங்கிருந்து உடன் மறுமொழி கிடைக்கப்பெறவில்லை.
மீண்டும் மைத்திரிபால சிறிசேன முயற்சிகளை முன்னெடுத்திருந்த நிலையில், ‘என்ன விடயத்துக்காக சந்திக்க வேண்டும்’ என்ற நேரடி கேள்வியை அமெரிக்க இராஜாங்க தினைக்களம் அமெரிக்க தூதரகம் ஊடாக எழுப்பியது.
இதன்போது ‘அரசியல் கூட்டணி’ என்ற காரணம் குறிப்பிடப்பட்டதாக முக்கியஸ்தர் ஒருவர் தகவல் கூறினார்.
அமைச்சரவை கூட்டத்தில் மாணவிகள்
அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்துக்கு சென்றார்.
இதன்போது வரவேற்பறையில் இருந்த பாடசாலை மாணவிகள் அருகில் சென்ற ஜனாதிபதி, ‘பழைய பாராளுமன்ற கட்டத்தை பார்த்தீர்களா?’ என கேட்டார்.
‘ஆம்’ என பதிலளித்த மாணவிகள், ஜனாதிபதியிடம் ‘நீங்கள் எங்கே போகின்றீர்கள்’ என சிரிப்பொலியுடன் கேள்வியெழுப்பினர். ‘நான் அமைச்சரவை கூட்டத்துக்கு செல்கின்றேன். நீங்களும் வருகின்றீர்களா?’ என மாணவிகளிடம் ஜனாதிபதி கேட்டார்.
‘உண்மையாகவா? அப்போ நாங்களும் வரலாமா’ என பாடசாலை மாணவிகள் அனுமதியை கோர, அவர்களை அமைச்சரவை கூட்டம் இடம்பெற்ற இடத்துக்கு ஜனாதிபதி அழைத்துச் சென்றார்.
பாடசாலை மாணவிகளை ஜனாதிபதி அழைத்து வருவதை கண்ட அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றிருந்த அமைச்சர்கள், ‘ஏன் பாடசாலை மாணவிகள்’ என கேள்வியெழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி ‘அமைச்சரவை குறித்து மாணவிகளுக்கு விளக்கமளிக்குமாறு’ அமைச்சரவை செயலாளரிடம் கூறினார்.
இதனை தொடர்ந்து, மாணவிகளுடன் ஜனாதிபதி உட்பட அமைச்சர்கள் சம்பாஷனையில் ஈடுபட்டனர்.
ஐ.தே.க நிர்வாக குழுவில் ஜனாதிபதி ஆவேசம்
செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு சபை கூட்டத்தை நிறைவு செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசிய கட்சியின் நிர்வாக குழு கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.
உத்தேச ஜனாதிபதி தேர்தலை மையப்படுத்தி நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் மீளாய்வு அறிக்கையை பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார இதன்போது ஜனாதிபதியிடம் கையளித்தார்.
அந்த அறிக்கையை அவதானித்த ஜனாதிபதி, சில தொகுதிகளில் காணப்படுகின்ற குறைகளை சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சித்தார்.
‘அனைவரும் பேசுவதில் மாத்திரமே ஆர்வமாக உள்ளீர்கள். செயலில் ஒன்றும் இல்லை. கட்சி வழங்கிய பொறுப்புகளை செய்ய யாரும் கிராமங்களுக்கு செல்வதில்லை.
இவ்வாறு செயற்பட்டால் கட்சியை ஒருபோதும் முன்னோக்கி கொண்டு செல்ல இயலாது’ என ஜனாதிபதி ரணில், நிர்வாகக் குழு உறுப்பினர்களை கடுமையாக சாடினார்.
மேலும், ஐக்கிய தேசிய கட்சியின் பதவி நிலைகள் குறித்தும் இந்த கூட்டத்தில் சலசலப்புகள் ஏற்பட்டது. இதனை அவதானித்த ஜனாதிபதி, கட்சியின் பதவிகளை இங்கு தீர்மானிக்க இயலாது.
எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தில் அவற்றை பேசலாம் என கூறி அங்கிருந்து ஜனாதிபதி விடைபெற்றார்.
பேனையை மறந்த ஜானக வக்கும்புர
இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புரவுக்கு சுற்றாடல் இராஜாங்க அமைச்சின் பொறுப்புக்களை வழங்க ஜனாதிபதி செயலகத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் வகித்த அமைச்சு என்பதால் அதனை அதே கட்சி உறுப்பினருக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் சுற்றாடல் இராஜாங்க அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்ய வருகை தந்த ஜானக வக்கும்புர, கையொப்பமிட பேனையை கொண்டு வர மறந்துவிட்டுள்ளார்.
நியமன பத்திரத்தில் கையொப்பமிட இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர பேனையை சட்டை பையில் தேடுவதை அவதானித்த ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்க தனது பேனையை வழங்கினார்.
பதவிப்பிரமாண நிகழ்வு முடிந்தவுடன் இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புரவை அழைத்த ஜனாதிபதி, ‘மணமகனாக செல்லும் போதும், திருமண நிகழ்வில் சாட்சி கையெழுத்திட செல்லும்போதும் அல்லது பதவிப்பிரமாணம் செய்யப் போகும்போதும் இனி பேனையை மறந்துவிட வேண்டாம். ஏனெனில், அவை அனைத்தும் வாழ்க்கையில் முக்கியமான தருணங்கள்’ என கூறினார்.
இலங்கையில் இஸ்ரேல் – ஈரான் அமைச்சர்கள்
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இஸ்ரேல் போக்குவரத்து அமைச்சர் பிரிகேடியர் மிரி ரிகேவ் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியிருந்த நிலையில், ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் – அப்துல்லாஹியனும் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இரு முரண்பாட்டு கொள்கைகளை கொண்ட நாடுகளின் முக்கிய பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருப்பது கருத்தில் கொள்ளப்பட வேண்டியதாகும் என அமைச்சர் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டினர்.
பிராந்திய அரசியல், உலக அரசியல் என பல்வேறுபட்ட நெருக்கடிகள் இலங்கையை சூழ உள்ளன.
இவற்றுக்கிடையில் மிகவும் நிதானத்துடன் நாம் பயணிக்க வேண்டும் என்ற விடயத்தையும் அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் எடுத்துரைத்த நிலையில், அவை அனைத்துக்குமே வெறும் புன்னகையில் ஜனாதிபதி பதிலளித்திருந்தார்.
இந்திய கொடியுடன் ஜனாதிபதி
10ஆவது சாரணர் – ஜம்போரி நிகழ்வை ஆரம்பித்து வைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த புதன்கிழமை திருகோணமலைக்கு சென்றிருந்தார்.
இந்த நிகழ்வில் பங்கேற்பதற்காக பல நாடுகளை பிரதிநிதித்துவம் செய்து சாரணர்கள் வருகை தந்திருந்தனர்.
பங்கேற்ற நாடுகளின் சாரணர்களுடன் ஜனாதிபதி சம்பாஷணைகளில் ஈடுபட்டதுடன், அவர்களுடன் ‘செல்பி’ புகைப்படங்களையும் எடுத்துக்கொண்டார்.
இதன்போது இந்தியாவிலிருந்து வருகை தந்திருந்த சாரணர்களுடன் சம்பாஷணையில் ஜனாதிபதி ஈடுபட்டார்.
இந்திய சாரணர்கள் ஜனாதிபதியுடன் ‘செல்பி’ எடுக்க விருப்பம் தெரிவித்தனர். அதற்கு அனுமதியளித்த ஜனாதிபதி ‘செல்பி’ எடுக்க முற்படுகையில் அந்த இடத்தில் கட்டப்பட்டிருந்த இந்திய தேசியக்கொடி இடையூறாக இருந்தது.
இதனை அவதானித்த ஜனாதிபதி இந்திய தேசிய கொடியை தன் கரத்தில் எடுத்து வைத்துக்கொண்டு இந்திய சாரணர்களுடன் ‘செல்பி’ படங்களை எடுத்துக்கொண்டார்.
வியாழக்கிழமை சந்திப்பு
வியாழக்கிழமை தோறும் அமைச்சர்களுடன் இடம்பெறும் கலந்துரையடலில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் நிதியமைச்சுக்கு சென்றார்.
மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் இதன்போது ஜனாதிபதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
‘மத்திய வங்கி அதிகாரிகள் சம்பளத்தை அதிகரித்தக் கொண்டமை அநீதியானது. பொருளாதார ரீதியில் மக்கள் அசௌகரியங்களை எதிர்கொள்கையில், மத்திய வங்கி அதிகாரிகள் சம்பளத்தை உயர்த்தினால் வீண் பிரச்சினைகளே ஏற்படும்’ என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறினார்.
இவை அனைத்தையும் மௌனமாக கேட்டிருந்த ஜனாதிபதி ரணில் எந்த கருத்தையும் கூறவில்லை.
(லியோ நிரோஷ தர்ஷன்)