• வடக்கு காசாவுக்கான உதவி வாகனங்களுக்கு முட்டுக்கட்டை

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்ந்து நீடிப்பதோடு, போர் நிறுத்தம் ஒன்றுக்கான பேச்சுவார்த்தைகள் எகிப்து தலைநகர் கெய்ரோவில் நான்காவது நாளாக நேற்றும் தொடர்ந்த சூழலில் வடக்கு காசாவுக்கு உணவு உதவிகளை எடுத்துச் சென்ற உலக உணவுத் திட்டத்தின் முயற்சியை இஸ்ரேலிய படை தடுத்துள்ளது.

கடந்த இரண்டு வாரங்களில் முதல் முயற்சியாகவே வடக்குக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல உலக உணவுத் திட்டம் முயன்றது.

அவ்வாறான 14 லொறிகள் சோதனைச் சாவடியில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டதோடு பின்னர் அவை பாதிப்புக்கு உள்ளான மக்களால் களவாடப்பட்டது என்று அந்த ஐ.நா நிறுவனம் தெரிவித்துள்ளது.

வடக்கு காசாவில் பட்டினியால் குழந்தைகள் மரணித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு கூறிய நிலையிலேயே அந்தப் பகுதிக்கு உதவிகள் செல்வது தடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது வீதி காசா சோதனைச் சாவடியில் மூன்று மணி நேரம் காக்க வைக்கப்பட்ட உதவி லொறிகள் பின்னர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன.

தொடர்ந்து அந்த லொறிகள் வேறு பாதைக்கு மாற்றப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்ட பெரும் எண்ணிக்கையானோர் லொறிகளில் இருந்து சுமார் 200 தொன் உதவிப் பொருட்களை திருடிச் சென்றதாக உலக உணவுத் திட்டம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக வடக்கு காசாவுக்கான உணவு விநியோகத்தை இடைநிறுத்துவதாக உலக உணவுத் திட்டம் கடந்த பெப்ரவரி 20 ஆம் திகதி அறிவித்தது. அந்த அமைப்பின் உதவி லொறிகள் களவாடப்பட்டு சமூக ஒழுங்கு சீர்குலைந்திருப்பதை காரணமாகக் கூறியே அந்த அமைப்பு இந்த அறிவிப்பை வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த வாரம் காசா நகரில் உதவிக்காக காத்திருந்த பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ஜோர்தானுடன் ஒருங்கிணைந்து வடக்கு காசாவுக்கு கடந்த செவ்வாயன்று 36,000 உணவுப் பொதிகளை வானில் இருந்து வீசியதாக அமெரிக்கா கூறியுள்ளது. காசாவில் அமெரிக்கா வானில் இருந்து உதவிகளை போடும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

எந்த நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் காசாவில் பஞ்சம் ஏற்படுவது தவிர்க்க முடியாதது என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் காசாவில் ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நீரிழப்பினால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று கூறியது.

உயிரிழப்பு 30,717 ஆக உயர்வு

காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் 86 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மேலும் 113 பேர் காயமடைந்திருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று (06) வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி இன்று ஐந்து மாதங்களை தொடும் காசா போரில் கொல்லப்பட்ட பலஸ்தீனர் எண்ணிக்கை 30,717 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 72,156 பேர் காயமடைந்துள்ளனர். இதில் கொல்லப்பட்டவர்களில் 70 வீதத்துக்கும் அதிகமானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களாவர்.

இதில் தெற்கு நகரான கான் யூனிஸ் மற்றும் ரபாவில் இஸ்ரேல் நேற்று நடத்திய சரமாரித் தாக்குதல்களில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட பலர் கொல்லப்பட்டாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது.

இதில் ரபாவின் கிழக்கே உள்ள அல் ஷோகா பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற பீரங்கி தாக்குதல் ஒன்றின் காரணமாக பல பொதுமக்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

அதேபோன்று மத்திய காசாவின் டெயிர் அல் பலாஹ்வில் உள்ள வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் வீசிய குண்டில் மூவர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்துள்ளனர். இதில் அல் அத்தார் குடும்பத்திற்கு சொந்தமான வீட்டின் மீதே இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக வபா கூறியது.

தொடரும் பேச்சு

அமெரிக்கா, எகிப்து மற்றும் கட்டரின் மத்தியஸ்தத்துடன் கெய்ரோவில் புதிய சுற்று பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதோடு அதில் பங்கேற்றிருக்கும் ஹமாஸ், போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கு தொடர்ந்து முயன்று வருவதாக நேற்று (06) கூறியது. எனினும் இந்தப் பேச்சுவார்த்தைகளில் இஸ்ரேல் பங்கேற்கவில்லை.

‘எமது மக்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பை முழுமையாக நிறுத்தும் நோக்கில் தேவையான நெகிழ்வுப்போக்கை நாம் காட்டுகின்றபோதும் ஒப்பந்தத்தை எட்டுவதை ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ந்து தடுக்கின்றனர்’ என்று ஹமாஸ் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் 10 அல்லது 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள முஸ்லிம்களின் புனித ரமழான் மாதத்திற்கு முன்னர் இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையே 40 நாள் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கே கெய்ரோவில் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

காசாவில் பிடிக்கப்பட்டிருக்கும் பணயக்கைதிகளை விடுவிக்கும் கைதிகள் பரிமாற்ற உடன்வடிக்கை மற்றும் போர் நிறுத்தம் ஒன்றுக்காக முன்வைக்கப்பட்டிருக்கும் உடன்படிக்கையை ஹமாஸ் ஏற்பதிலேயே இந்தப் போர் நிறுத்தம் தங்கி இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் செவ்வாயன்று (05) கூறியிருந்தார்.

ஹமாஸுக்கு முன்வைக்கப்பட்டிருக்கும் உடன்படிக்கையில் பணயக்கைதிகள் சிலரை விடுவிப்பது மற்றும் காசாவில் பஞ்சத்தை தடுப்பதற்கு அங்கு உதவிகளை அதிகரிப்பது ஆகியவை உள்ளடங்கும்.

இதில் ஹமாஸ் காசாவில் உள்ள அனைத்து பணயக்கைதிகளின் விபரங்களையும் வெளியிட கோரப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க பாதுகாப்புச் சபைக்கு முன்வைக்க தீர்மானித்திருக்கும் வரைவு தீர்மானத்தின் மொழியில் மாற்றத்தை கொண்டுவந்திருப்பதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதில் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிப்பதுடன் சேர்த்து காசாவில் கிட்டத்தட்ட ஆறு வாரங்கள் அவசர போர் நிறுத்தம் ஒன்றுக்கு கோரப்பட்டுள்ளது.

எனினும் வரைவுத் திர்மானத்தை பாதுகாப்புச் சபையில் கொண்டுவருவதற்கான விபரம் இன்னும் வெளியாகவில்லை.

எவ்வாறாயினும் இந்தப் போர் தொடர்பில் அமெரிக்கா ஏற்கனவே மூன்று பாதுகாப்புச் சபை தீர்மானங்கள் மீது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்திய சூழலில் அமெரிக்காவின் இந்தத் தீர்மானம் மீது ரஷ்யா மற்றும் சீனா வீட்டோவை பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

ஏற்கனவே போர் நிறுத்தம் தொடர்பில் ஹமாஸின் பிரதான கோரிக்கை பற்றி லெபனானில் உள்ள ஹமாஸ் அதிகாரியான ஒசாமா ஹம்தான் வலியுறுத்தி இருந்தார்.

அதில் காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டு இஸ்ரேலியப் படை அங்கிருந்து வாபஸ் பெற வேண்டும் என்றும் வெளியேற்றப்பட்ட அனைத்து காசா மக்களும் தமது வீடுகளுக்கு திரும்ப வேண்டும் என்று கோரியிருந்தார்.

எனினும் ஹமாஸை ஒழிக்கும் வரை போரை நிறுத்தப்போவதில்லை என்று இஸ்ரேல் கூறி வருகிறது.

மெரிலாண்டில் நேற்று முன்தினம் பேசிய பைடன் கூறியதாவது, ‘ரமழான் காரணமாக போர் நிறுத்தம் எட்டப்பட வேண்டும். ரமழான் வரை தொடரும் நிலைக்கு நாம் வந்தால், இஸ்ரேல் மற்றும் ஜெரூசலம் மிக மிக அபாயகரமானதாக இருக்கும்’ என்றார்.

இது தொடர்பில் அவர் விரிவாகக் கூறாதபோதும் ஜெரூசலம் அல் அக்ஸா பள்ளிவாசலில் முஸ்லிம்கள் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று இஸ்ரேலுக்கு அமெரிக்கா கடந்த வாரம் அழுத்தம் கொடுத்திருந்தது.

இந்தப் பள்ளிவாசல் வளாகத்தை ஒட்டி ரமழாம் மாதத்தில் தொடர்ச்சியாக பதற்ற சூழல் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடந்த ஆண்டுக்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையான வழிபாட்டாளர்கள் பள்ளிவாசல் வளாகத்திற்குள் இம்முறையும் அனுமதிக்கப்படுவார்கள் என்று இஸ்ரேல் அரசு குறிப்பிட்டுள்ளது.

Share.
Leave A Reply