ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே, மகளை திருமணம் செய்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை, ஆதிக்க சாதி பெண்ணின் தந்தை டெம்போ ஏற்றி ஆணவக்கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தனது மகனின் இருசக்கர வாகனத்தை டெம்போவால் இடித்துவிட்டு, உயிர் இருக்கிறதா என்பதை பெண்ணின் தந்தை இறங்கி வந்து பார்த்ததாக தாயார் மகேஷ்வரி கூறுகிறார். இந்தச் சம்பவம் குறித்துப் பேச முயன்றபோது குற்றம் சாட்டப்பட்ட பெற்றோரின் குடும்பத்தினர் பிபிசியிடம் பேச முன்வரவில்லை.
இதில், இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் படுகாயமடைந்து அவரின் தங்கை இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆணவக் கொலைக்கான காரணம் என்ன?
டெம்போ ஏற்றியதில் தங்கை பலி
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள எரங்காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த அரசு பஸ் டிரைவர் ஜெயபிரகாஷ் – மகேஸ்வரி தம்பதியின் மகன் சுபாஷ் (24). பட்டியலினத்தைச் சேர்ந்த சுபாஷ் 2023 அக்டோபர் மாதம், அருகிலுள்ள காந்தி நகரில் வசிக்கும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த விவசாயி சந்திரன் மகள் மஞ்சு (22) என்பவரைக் காதலித்து சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டார்.
சாதியரீதியில் பல தடைகளைத் தாண்டி திருமணம் செய்த சுபாஷ், எரங்காட்டூரில் வசித்து ஆம்புலென்ஸ் தொழில் செய்து வாழ்ந்து வருகிறார்.
எரங்காட்டூர் – சத்தியமங்கலம் ரோட்டில் இருவரும் இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது, திடீரென வேகமாக வந்த டெம்போ இவர்கள் மீது மோதியது.
இப்படியான நிலையில், மார்ச் 6ஆம் தேதி காலை சுபாஷ், 10ஆம் வகுப்பு பயின்று வந்த தனது தங்கை ஹாசினியை (15) பள்ளிக்கு அழைத்துச் சென்று கொண்டிருந்தார்.
எரங்காட்டூர் – சத்தியமங்கலம் ரோட்டில் இருவரும் இருசக்கர வாகனத்தில் பயணித்தபோது, திடீரென வேகமாக வந்த டெம்போ இவர்கள் மீது மோதியது. விபத்தில் தூக்கி வீசப்பட்ட இருவரும் படுகாயமடைந்த நிலையில், அப்பகுதியில் இருந்த மக்கள் இருவரையும் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தினர்.
அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் இருவரும் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஹாசினி மார்ச் 6ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக மரணித்தார், சுபாஷ் தீவிர சிகிச்சையில் உள்ளார்.
முதல்கட்டமாக வெறும் விபத்து வழக்காகப் பதிவு செய்யப்பட்ட நிலையில், விபத்து சம்பவம் நடக்கும்போது அருகில் இருந்தவர்கள் விபத்தை ஏற்படுத்தியது மஞ்சுவின் தந்தை சந்திரன் என சாட்சியம் கொடுத்துள்ளனர்.
அதன்பின், கொலை வழக்காகப் பதிவு செய்யப்பட்டு, அதில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட மஞ்சுவின் தந்தை சந்திரன், தாய் சித்ரா உள்பட ஆறு பேரை பவானிசாகர் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதற்கிடையில் சுபாஷின் உறவினர்கள், சிறுமி கொல்லப்பட்டதைக் கண்டித்து சந்திரனின் தோப்பிற்குள் இருந்த வீட்டையும், காரையும் சேதப்படுத்தியதால், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
‘கொன்றுவிட்டு உயிர் இருக்கிறதா என்று பார்த்தார்கள்’
ஹாசினியின் இறுதி அஞ்சலி நிகழ்வு
இந்தச் சம்பவம் தொடர்பாக, பிபிசி தமிழிடம் தொலைபேசி வாயிலாகப் பேசிய ஹாசினியின் தாய் மகேஷ்வரி, ‘‘என் பெண்ணுக்கு அன்று பள்ளிக்குப் போகத் தாமதமானதால் நானே சாப்பாடு ஊட்டிவிட்டு அனுப்பினேன்.
என் மகன் சுபாஷும், ஹாசினியும் ஸ்கூட்டியில் புறப்பட்டிச் சென்றனர். அவர்கள் கிளம்பிய சில நிமிடங்களிலேயே விபத்து நடந்துவிட்டதாகத் தகவல் வந்தது,” என அன்று நடந்தவை குறித்துக் கூறினார்.
மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தபோதே தனது மகள் இறந்துவிட்டதாகக் கூறிய ஹாசினியின் தாய் மகேஷ்வரி, தனது மகனுக்கு இடுப்பில் அறுவை சிகிச்சை செய்திருப்பதாகவும் கண்ணீருடன் தெரிவித்தார்.
தனது மருமகளின் பெற்றோரான சந்திரன் – சித்ரா குடும்பத்தைத் தங்களுக்கு நன்றாகத் தெரியும் எனக் கூறும் மகேஷ்வரி, தனது மகள் ஹாசினியை சித்ராதான் பள்ளியிலேயே சேர்த்துவிட்டதாகவும் கூறுகிறார்.
இந்நிலையில், “என் மகளைப் பள்ளியில் சேர்த்த சித்ராவே அவளைக் கொலை செய்துவிட்டாரே!” என்று கூறிக் கண்ணீர்விட்டார்.
மஞ்சுவின் பெற்றோர் அவ்வப்போது தங்கள் வீட்டிற்கு வந்து தகராறு செய்து கொண்டிருந்ததாகக் கூறும் அவர், “மகளைப் பெற்றவர்கள் என்பதால் கோவம் இருக்கும் என நினைத்து விட்டுவிடுவோம்.
ஆனால், கொலை செய்யும் அளவுக்குச் செல்வார்கள் என்று நினைக்கவே இல்லை,” என்கிறார் சுபாஷின் தாய் மகேஷ்வரி.
சந்திரன் டெம்போவில் வந்து ஸ்கூட்டியை இடித்துவிட்டு, தனது மகனும் மகளும் இறந்துவிட்டார்களா என்பதை இறங்கி வந்து பார்த்துவிட்டு, மனைவி சித்ராவின் இருசக்கர வாகனத்தில் ஏறிச் சென்றதாகத் தெரிவித்தார் மகேஷ்வரி.
“கொன்றுவிட்டு உயிர் இருக்கிறதா என்பதை இறங்கி வந்து பார்த்திருக்கிறார்கள். இந்தத் தகவலை என் மகன் என்னிடம் சொன்னபோது உடைந்துவிட்டேன்,” என்றார் கண்ணீருடன்.
இந்தச் சம்பவம் குறித்துப் பேச மஞ்சுவின் பெற்றோர் தரப்பில் பேசப் பலமுறை முயன்றும் அவர்கள் பதில் அளிக்க முன்வரவில்லை.
ஹாசினியின் உடலை சுமந்து வந்த உறவினர்கள்
ஆணவக்கொலை செய்ததாகக் கைது செய்யப்பட்டுள்ள சந்திரன் வாக்குமூலத்தில் என்ன கூறினார் என்பது குறித்து சத்தியமங்கலம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் பிபிசி தமிழிடம் விளக்கினார்.
பட்டியல் சாதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட சுபாஷ், ஆதிக்க சாதியைச் சேர்ந்த சந்திரனின் ஒரே மகளான மஞ்சுவை திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில், “விவசாயம், ரியல் எஸ்டேட், ஃபைனான்ஸ் எனப் பல தொழில்களைச் செய்து வரும் சந்திரன், தனது மகள் மாற்று சாதியைச் சேர்ந்தவரைத் திருமணம் செய்துகொண்டதால் கோபத்தில் இருந்துள்ளார்.
திருமணம் ஆனதில் இருந்தே சுபாஷின் வீட்டுக்குச் சென்ற சந்திரன் மற்றும் சித்ரா தம்பதி தகராறு செய்து, சாபம் விடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
கைதான பின் கொலை செய்ததற்கான காரணமாக இதைத்தான் வாக்குமூலத்திலும் தெரிவித்துள்ளனர்,” என்று கூறுகிறார் டி.எஸ்.பி சரவணன்.
சம்பவம் நடந்த அன்று, “கோபத்தில் இருந்த சந்திரன் தனது டெம்போவை வைத்து சுபாஷின் இருசக்கர வாகனத்தில் இடித்துக் கொலை செய்ய முயன்றதில் சுபாஷ் படுகாயமடைந்து அவரின் தங்கை ஹாசினி இறந்துள்ளார்,’’ என்றார்.
மேலும், தனது சாதியைச் சேர்ந்தவர்களை அவரால் எதிர்கொள்ள முடியவில்லை என்ற காரணதால் சந்திரன் கடும் கோபத்தில் இருந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்ததாக டி.எஸ்.பி சரவணன் கூறுகிறார்.
இந்த நிலையில், “பல நாட்கள் காத்திருந்து, சுபாஷின் செயல்பாடுகளைக் கண்காணித்து, கொலை செய்ய நினைத்தவர், சுபாஷுடன் சிறுமி இருந்ததைப் பற்றிப் பொருட்படுத்தவில்லை எனவும்” டி.எஸ்.பி சரவணன் கூறினார்.
‘கர்ப்பமாக இருக்கும் மனைவி’
கைது செய்யப்பட்ட குற்றவாளிகள்
‘5 மாதமாகங்களாக சுபாஷிற்கு கொலை மிரட்டல் வந்துள்ளதாக கூறப்படுகிறதே, போலீஸார் பாதுகாப்பு கொடுக்கவில்லையா?’ என்ற கேள்வியை முன்வைத்தோம்.
கடந்த 5 மாதங்களாக சுபாஷிற்கு கொலை மிரட்டல் வந்திருந்தபோதிலும், போலீசார் ஏன் பாதுகாப்பு கொடுக்கவில்லை எனக் கேட்டபோது, “பல முறை கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்பட்ட போதிலும், அதுதொடர்பாக சுபாஷ் தரப்பில் புகார் அளிக்கப்படவில்லை,” என்றார்.
மேலும் விசாரணையின்போது, சுபாஷின் மனைவி மஞ்சு கர்ப்பமாக இருப்பதாகவும் குழந்தை பிறந்தால் பிரச்னை சரியாகிவிடும் என்று நம்பியதாலும் வழக்குப் பதிவு செய்யவில்லை என்று சுபாஷ் குடும்பத்தினர் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.
‘அசாதாரண சூழல் ஏதும் இல்லை – கண்காணிக்கப்படுகிறது!
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர்
பிபிசி தமிழிடம் பேசிய ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர், ‘‘ஆணவக்கொலை தொடர்பாக விசாரணை நடத்தி கொலையில் ஈடுபட்ட சந்திரன், அவரது மனைவி சித்ரா உள்பட ஆறு பேரை உடனடியாகக் கைது செய்துள்ளோம்.
எந்தப் பிரச்னையுமின்றி சிறுமியின் சடலத்தை உடற்கூராய்வு செய்து ஒப்படைத்து, உடல் நல்லடக்கமும் முடிந்துள்ளது.
பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு அரசின் நிவாரணம் பெற்றுத் தரப்பட்டுள்ளது. இந்தக் கொலை சம்பவத்தைப் பொறுத்தவரையில் அசாதாரண சூழல் ஏதும் இல்லை. இரு குடும்பத்தினரின் வீடுகள் மற்றும் கிராமத்தில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்,’’ என்றார்.
சாதி மனிதனை கொடூர ஆணவக்கொலைகளைச் செய்யும் அளவுக்குத் தூண்டுவதாகக் கூறும் சமூக ஆர்வலர்கள், “தமிழ்நாடு அரசு ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் உருவாக்கி, கடும் தண்டனை கொடுத்தால் ஒழிய சாதிய படுகொலைகள் குறையாது,” எனவும் வலியுறுத்துகின்றனர்.