கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்தியப் பிரதேச மாநிலம் மண்ட்சூரில் பெண் ஒருவரை கும்பல் ஒன்று அடித்து நிர்வாணப்படுத்திய சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. அதைத் தொடர்ந்து சமீபத்தில் அந்தப் பெண்ணின் கணவர் தனது இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டார்.
சம்பவம் நடந்த இடத்திற்கு பிபிசி குழு விரைந்தது. அங்கு எங்களது குழு கண்ட காட்சிகள் இங்கு விவரிக்கப்பட்டுள்ளன.
சாலையின் ஒருபுறம் அந்த கிராமத்தின் பேருந்து நிலையம் அமைந்துள்ளது. மறுபுறம் 500 மீட்டர் தொலைவில், மார்ச் 4 ஆம் தேதி காலை அந்த பெண்ணின் கணவர், அவரது பத்து வயது மகள் மற்றும் எட்டு வயது மகன் ஆகியோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்ட ஜாமுன் மரம் இருந்தது.
இறந்தவரின் மனைவியான மீனாதேவி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) கடந்த நவம்பர் 23ஆம் தேதி தாக்கப்பட்ட இடமும் இந்தப் பேருந்து நிலையத்துக்குப் பக்கத்தில்தான் உள்ளது. இந்தச் சம்பவம் குறித்தும், மீனாதேவியை தாக்கியவர்கள் யார் என்பது குறித்தும் இறந்தவரின் பாக்கெட்டில் கண்டெடுக்கப்பட்ட“தற்கொலை கடிதத்தில்” குறிப்பிடப்பட்டுள்ளது.
விளம்பரம்
அங்கிருந்து சிறிது தூரம் சென்றதும் இந்த கிராமத்தில் உள்ள சில வீடுகளில் இருந்து பெண்கள் அழும் குரல்கள் கேட்டன.
ராஜஸ்தானை ஒட்டிய இந்த பகுதியில் வசித்து வரும் இந்த மக்கள் ராஜஸ்தானி உச்சரிப்போடு, இறந்தவர்களின் இறுதிச் சடங்குகள் ஏற்கெனவே செய்யப்பட்டு விட்டதாகக் கூறினர்.
வீட்டில் ஒரு ஓரமாக இறந்தவரின் மனைவி மீனாதேவி அழுதுகொண்டிருந்தார். இதுபோன்ற சூழலில் அவரிடம் என்ன பேசுவது என்று தெரியாமல் தயங்கி நின்றோம்.
அங்கிருந்த ஒரு மூலையில் நாங்களும் ஒரு ஓரமாக சிறிது நேரம் அமர்ந்திருந்தோம். அப்போது அங்கிருந்தவர்கள் இறந்து போன குழந்தைகளின் புத்தகப் பைகள் மற்றும் சீருடைகளை எங்களிடம் எடுத்து வந்தார்கள். அவர்கள் தொடர்பான விஷயங்களை ஒவ்வொன்றாகக் காட்டத் தொடங்கினார்கள்.
காவல்துறை மீது குற்றம் சாட்டும் பாதிக்கப்பட்ட குடும்பம்
இறந்தவரின் பாக்கெட்டில் கிடைத்த தற்கொலை கடிதத்தை ஆதாரமாக காவல்துறை சேகரித்துள்ளது.
மீனாதேவிக்கு அங்கிருந்த பெண்கள் ஆறுதல் கூறினர். அவர்களில் பாதிக்கப்பட்டோரின் உறவினரான சுதா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) எங்கள் முன் கதறி அழுதார்.
“இரண்டு குழந்தைகளும் எனக்கு அருகில் தான் வசித்து வந்தனர். அவர்கள் என்னுடன்தான் எப்போதும் இருப்பார்கள். குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் இவர்களை மிக மோசமாக நடத்தினார்கள்.
எனது தங்கைக்குத்தான் அநீதி நடந்துள்ளது. ஆனால், காவல்துறை நாங்கள் சொல்வது எதையுமே கேட்கவில்லை. பணம் படைத்த குற்றவாளிகளின் பேச்சை கேட்டுக்கொண்டு எங்களது குரலை அவர்கள் தட்டிக்கழித்து விட்டார்கள். எங்களுக்கு நீதி வேண்டும்” என்று கூறினார்.
இறந்தவரின் பாக்கெட்டில் கிடைத்த தற்கொலை கடிதத்தை ஆதாரமாக காவல்துறை சேகரித்துள்ளது.
இதுகுறித்து ஷாம்கரின் சந்த்வாசா காவல் நிலைய அதிகாரிகள் கூறுகையில், “இறந்தவர் தற்கொலைக் கடிதத்தில் தனது மனைவியை தாக்கியது மட்டுமின்றி, நிர்வாணப்படுத்தி தாக்கியதாகவும்” குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக மூன்று மாதங்களாக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், இறந்த நபரும் அவரது குடும்பமும் இந்த கிராமத்திற்கு வருவதையே நிறுத்தி விட்டதாக அங்கிருக்கும் சமுதாய மக்கள் கூறுகின்றனர்.
நவம்பர் 23 அன்று மீனா தேவி தாக்கப்பட்டபோது, புகார் பதிவு செய்ய காவல் நிலையத்திற்குச் சென்றதாகவும், அங்கு அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும், ஆனால், முதல் தகவல் அறிக்கையில் நிர்வாணப்படுத்தி தாக்கப்பட்டது குறித்த குறிப்பை காவல்துறை நீக்கிவிட்டதாகவும் அந்த மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
‘பெண்ணை நிர்வாணப்படுத்தி தாக்கிய கும்பல்’
தன்னை தாக்கியவர்களின் பெயரை மீனாதேவி காவல்துறையிடம் கூறியபோதும், அவர்கள் அவற்றைப் புகாரில் சேர்க்கவே இல்லை என்று கூறுகிறார் அவர்.
இதுகுறித்து இறந்தவரின் உறவினர் மகேஷ்வர் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) கூறுகையில், “மீனா தேவி தான் நிர்வாணப்படுத்தப்பட்டு தாக்கிய சம்பவம் குறித்து அனைத்து தகவல்களையும் காவல்துறையிடம் கூறினார். ஆனால், காவல்துறை ‘நிர்வாணமாக்கப்பட்டது குறித்து குறிப்பிடவில்லை’’ என்று அவர் குற்றம் சாட்டுகிறார்.
தன்னை தாக்கியவர்களின் பெயரை மீனாதேவி காவல்துறையிடம் கூறியபோதும், அவர்கள் அவற்றைப் புகாரில் சேர்க்கவே இல்லை என்றும், மூன்று மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறுகிறார் அவர்.
அப்படி அவர்கள் எடுத்திருந்தால் இந்த தற்கொலையும் நடந்திருக்காது, எங்கள் குடும்பம் சோகத்தில் மூழ்கியிருக்காது என்கிறார் மகேஷ்வர்.
இதுகுறித்து ஷாம்கர் காவல் நிலையப் பொறுப்பாளர் ராகேஷ் சௌத்ரியிடம் கேட்டபோது, “நவம்பர் 23ஆம் தேதி நடந்த சம்பவம் பெண்களுக்குள் மட்டுமே நடந்தது என்றும், அது முக்கிய குற்றவாளியின் மனைவிக்கும் மீனாதேவிக்கும் இடையே நடந்தது” என்றும் கூறினார்.
இதுகுறித்து விவரித்த அவர், “மூன்று மாதங்களுக்கு முன்பு இந்தப் பெண்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. மீனாதேவிக்கும் குற்றம் சாட்டப்பட்டவருக்கும் இடையே தொடர்பு இருப்பதாக அவரது மனைவிக்கு தகவல் கிடைத்தது.
இது தொடர்பாக குற்றவாளியின் மனைவிக்கும், மீனாதேவிக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. இரு பெண்களும் ஒருவருக்கொருவர் அடித்துக்கொண்டனர். இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில், ராஜு மீது எஃப்ஐஆர் பதிவு செய்தோம்” என்று கூறினார்.
தற்கொலை என்பது ஒரு தீவிரமான உளவியல் மற்றும் சமூகப் பிரச்னை. நீங்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்றால், இந்திய அரசாங்கத்தின் உதவி எண்ணான 18002333330-க்கு தொடர்பு கொண்டு உதவி பெறலாம். மேலும் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களிடமும் பேசுங்கள்.
மோதலை வேடிக்கை மட்டுமே பார்த்த மக்கள்
அவர்கள் தன்னை நிர்வாணப்படுத்தி தாக்கியதாகவும் கூறினார் மீனாதேவி
இறந்தவரின் இறுதிச் சடங்குகள் முடியும் வரை வீட்டில் உள்ள யாரும் படுக்கை, நாற்காலி போன்ற எதிலும் அமர மாட்டார்கள் என்ற மரபு இறந்தவரின் சமூகத்தில் உள்ளதால், அங்கு திரண்டிருந்த மக்கள் அனைவரும் தரையில் அமர்ந்திருந்தனர்.
மீனாதேவியையும் பெண்கள் சூழ்ந்திருந்தனர். அவர் மயக்க நிலையிலேயே இருந்தார். நீண்ட நேரம் கழித்து, அவர் நடந்த சம்பவம் குறித்து எங்களிடம் பேசினார்.
தான் பக்கத்து ஊருக்கு கோதுமை அரைக்கச் சென்றிருந்ததாக அவர் கூறினார்.
அன்று நடந்த சம்பவம் குறித்து விரிவாகப் பேசிய அவர், “அன்று ஒரு 11:10 மணி இருக்கும். நான் குறுக்குச் சாலையில் அமர்ந்திருந்தேன்.
அப்போது இவர்கள் இப்படி வந்து சண்டையிடுவார்கள் என்று எனக்குத் தெரியாது. நான் தனியாக இருப்பதைப் பார்த்ததும் அவர்கள் வந்து என்னைத் தாக்கினர். என்னிடம் இருந்த பணம், நகை என அனைத்தையும் பிடுங்கிக் கொண்டனர்” என்று தெரிவித்தார்.
மேலும், அவர்கள் தன்னை நிர்வாணப்படுத்தி தாக்கியதாகவும் கூறினார் அவர். தாக்கப்பட்டபோது அங்கிருந்த யாருமே தங்களைக் காப்பாற்ற முயலவில்லை என்று மீனாவும் உடனிருந்த பெண்களும் கூறினார்கள்.
அதுகுறித்துப் பேசிய மீனா, “இது வெளிப்படையாக பொதுவெளியில் நடந்த தாக்குதல். ஆனால், அங்கிருந்த யாருமே என்னைக் காப்பாற்ற முன்வரவில்லை.
தாக்கியவர்களின் குடும்பம் அங்குதான் இருந்தது. எங்கள் கிராமத்தின் படேல்களும் அங்குதான் இருந்தார்கள். அவர்கள்கூட எங்களைக் காப்பாற்ற முன்வரவில்லை” என்று கூறினார் அவர்.
அந்த நேரம் அங்கிருந்த மீனாவின் மாமியார், தனது மருமகள் தாக்கப்பட்டபோது அங்கு ஒரு பயணிகள் பேருந்தும், டிப்பர் வாகனமும்கூட நின்றுகொண்டிருந்தது. ஆனால், யாருமே உதவ முன்வரவில்லை என்று கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய மீனா, “பின்னர் நான் ஓடிச்சென்று குற்றம் சாட்டப்பட்டவர்களின் உறவினர்களுக்குச் சொந்தமான வீட்டிற்குள் நுழைந்தேன்.
அவர்களும்கூட எனக்கு ஆடை கொடுக்கவில்லை. அங்கே தொங்கிக் கொண்டிருந்த ஆடைகளை வலுக்கட்டாயமாகப் பிடுங்கி அணிந்தேன்.
அதன் பிறகு, என் அக்கா மற்றும் மாமியார் இருவரும் வந்தனர். அவர்களும் தாக்குபவர்கள் மீது கற்களை வீசத் தொடங்கினர். நாங்கள் தனியாக இருந்தோம்,” என்று கூறினார்.
தென்னிந்தியாவில் வேலை
ஆண்கள் பலரும் கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திராவுக்கும் சில நேரங்களில் கூலி வேலைக்காகச் செல்வதாக அவர் கூறுகிறார்.
மீனாவின் கணவர் தென்னிந்தியாவிற்குச் சென்று போர்வை விற்கும் தொழில் செய்து வந்தவர். சம்பவம் நடந்த நேரத்தில் அவர் ஊரில் இல்லை. இந்தச் சம்பவம் நடந்த பிறகு அவர்கள் மிகுந்த சோகத்தில் இருந்ததாகவும், அதற்கு பின் மூன்று மாதங்களாக கிராமத்திற்கு வரவில்லை என்றும் அவரது சமூக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இறந்தவரின் சகோதரர் மகேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது சகோதரர் மார்ச் 3ஆம் தேதி ஷாம்கருக்கு வந்ததாகக் கூறுகிறார்.
“பின்னர் அவர் இருந்த இடத்திற்கு குழந்தைகளையும் வரவழைத்துள்ளார். குழந்தைகளுடன் நேரம் கழித்த அவர் அவர்களுக்கு உடைகளும், பொம்மைகளும் வாங்கிக் கொடுத்துள்ளார். அடுத்த நாள் காலை அவர்கள் மரத்தில் தூக்கில் தொங்குவதை ஊர் மக்கள் பார்த்துள்ளனர்.”
அவருடைய சமூகத்தைச் சேர்ந்த ஆண்கள் பலரும் கேரளா, தமிழ்நாடு, தெலுங்கானா ஆந்திராவுக்கும் சில நேரங்களில் கூலி வேலைக்காகச் செல்வதாக அவர் கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “எங்களிடம் எங்கே நிலம் இருக்கிறது? இங்கு எங்களிடம் துண்டு நிலம்கூட இல்லை. பணம் சம்பாதிப்பதற்காக அங்கு செல்கிறோம். ஒரு நாளைக்கு 200 முதல் 500 ரூபாய் வரை சம்பாதிக்கிறோம். பின் இங்கு வந்து எங்கள் குடும்பத்தை பார்த்துக் கொள்கிறோம்,” என்று கூறினார்.
இந்தச் சம்பவம் நடந்ததற்குப் பிறகு, தனது சகோதரருக்கு சில அச்சுறுத்தல்கள் வந்ததாகவும் குறிப்பிடுகிறார் மகேஷ்.
இதுகுறித்து இறந்தவரின் உறவினர் புனேஷ்வர் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பேசுகையில், “மீனா தேவியை ஆடைகளைக் கழற்றி தாக்கியுள்ளனர்.
அப்போது குற்றம் சாட்டப்பட்டவர் அதை வீடியோ எடுத்துள்ளார். மீனாவின் கணவருக்கு தொடர்ந்து போன் செய்து, இந்த கிராமத்திற்கு மீண்டும் வரக்கூடாது என மிரட்டி வந்துள்ளார். நீங்கள் கிராமத்திற்கு வந்தால் அந்த வீடியோவை வைரலாக்குவேன்” என்றும் அவர் மிரட்டியதாக தெரிவிக்கிறார்.
பாதிக்கப்பட்ட பெண்ணை வெளியேற்ற நினைக்கும் கிராமப் பஞ்சாயத்து
காவல்நிலையம்
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 7 பேரை காவல்துறை கைது செய்துள்ளது.
தொடர் சம்பவங்களுக்குப் பிறகு, இந்தச் சமுதாய மக்கள் தற்போது கிராமத்தை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளனர். இருப்பினும், அவர்கள் குற்றம் சாட்டுகின்ற சமூகத்தின் மக்களும் இவர்களின் சமூகத்தில் இருந்து வந்தவர்கள்தான். ஆனால் அவர்களின் கோத்திரம் வேறு.
தாங்கள் ஒரே சமுதாயத்தில் இருந்து வந்தாலும், வெவ்வேறு கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் ஒவ்வொரு நாளும் பாகுபாடுகளைச் சந்திக்க நேரிடுவதாக அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இவ்வளவு பெரிய சம்பவம் நடந்த போதிலும்கூட, குற்றம் சாட்டப்பட்டுள்ள கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இவர்களை சமாதானப்படுத்தக்கூட முயலவில்லை என்று கூறுகின்றனர்.
மதன்லாலும் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இந்த சமூகத்தைச் சேர்ந்தவர் தான் மற்றும் இறந்தவரின் உறவினரும்கூட.
பிபிசியிடம் பேசிய அவர், “நாங்கள் எப்படி வாழ்வது?” இங்கு எங்கள் மக்கள் யாரும் இல்லை. நான்கைந்து வீடுகள் மட்டுமே இங்கு உள்ளது.
ஆனால் அந்த பிரிவை சேர்ந்தவர்களின் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. அவர்கள் அதிகாரம் மிக்கவர்கள். நாங்கள் என்ன செய்வது? எப்படி சாப்பிடுவது? எப்படி சம்பாதிப்பது? எங்களது பெண்கள் இங்கு பாதுகாப்பாக உணரவில்லை” என்று கூறினார்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பாக மொத்தம் 7 பேரை காவல்துறை கைது செய்துள்ளது. இறந்தவரின் பாக்கெட்டில் இருந்த ‘தற்கொலைக் குறிப்பில்’ குறிப்பிடப்பட்டிருந்த அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஷாம்கர் காவல் நிலைய பொறுப்பாளர் ராகேஷ் சௌத்ரியின் கூற்றுப்படி, இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக பிரிவு 306இன் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது. இது தற்கொலைக்கு தூண்டுவதற்கான சட்டப்பிரிவாகும்.
முதல் தகவல் அறிக்கையில் ஏழு பேர் மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளனர். அவர்களில் மூவர் பெண்கள் மற்றும் இருவர் சிறுவர்கள். அனைவரும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இவ்விரு சம்பவங்கள் குறித்தும் இந்த சமூகத்தின் பஞ்சாயத்து இருமுறை கூட்டப்பட்டுள்ளது. இந்த பஞ்சாயத்துகளில், குற்றம் சாட்டப்பட்டவர் குடும்பத்தை ஒதுக்கி வைப்பது மற்றும் பாதிக்கப்பட்ட பெண்ணை கிராமத்தில் இருந்து வெளியேற்றுவது குறித்துப் பேசப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மக்களிடையே பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.