இந்திய பணக்காரர்கள் என்ற உடன் நம் நினைவுக்கு வருவது அம்பானி குடும்பம் தான். அண்மையில் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு நடந்த பிரம்மாண்ட திருமணத்துக்கு முந்தைய நிகழ்ச்சி இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது.
இந்நிலையில் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீதா அம்பானி நிகழ்ச்சி ஒன்றுக்கு அளித்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரிலையன்ஸ் எனும் தொழில் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய திருபாய் அம்பானியின் மகன் முகேஷ் அம்பானிக்கும், மும்பையை சேர்ந்த நீதா அம்பானிக்கும் 1985ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.
இருவரின் குடும்பமும் நண்பர்களாக இருந்தாலும், முகேஷ் – நீதா அம்பானி திருமணம் ஒரு காதல் திருமணம்.
சொல்லப்போனால் இவர்களின் திருமணத்தின் போது திருபாய் அம்பானி விடவும், நீதா அம்பானியின் தந்தை பணக்காரர்,
பிர்லா குழுமத்தில் மூத்த பதவியில் இருந்த முக்கிய அதிகாரி ஆவார். ஆனாலும் இருவரின் வீட்டிலும் இவர்களின் காதலுக்கு ஒப்புதல் அளித்து திருமணம் செய்து வைத்தனர்.
முகேஷ் அம்பானியை திருமணம் செய்வதற்கு முன்பு, நீதா அம்பானி பள்ளி ஆசிரியராக பணியாற்றி வந்தார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்தாலும், திருமணத்திற்கு முன்பே மாமனார் அதாவது திருபாய் அம்பானியிடம் திருமணத்திற்கு பின்பு தான் தன்னுடைய பணியை தொடர வேண்டும் அதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று அனுமதி கோரியுள்ளது சுவாரஸ்யமான விஷயம்.
திருபாய் அம்பானியும் சிரித்துக்கொண்டே ஒப்புதல் அளித்தாராம், இதன் வாயிலாக முகேஷ் அம்பானி உடனான திருமணத்திற்கு பின்னரும் நீதா அம்பானி ஆசிரியை பணியை தொடர்ந்ததாக பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி ஆகியோர் அளித்த பேட்டியின் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் திருமணத்திற்கு பின்னர் சன்பிளவர் நர்சரி எனும் பள்ளியில் தான் ஆசிரியர் பணியை தொடர்ந்ததாக நீதா கூறியுள்ளார்.
அப்போது அவரது மாத சம்பளம் 800 ரூபாய். பெரிய குடும்பத்தில் மருமகளான பின்னரும் இப்படி சொற்ப ஊதியத்திற்கு வேலைக்கு வருவதாக கூறி தன்னை சுற்றி இருப்பவர்கள் கிண்டல் செய்தாலும், ஆசிரியர் பணி தனக்கு மனநிறைவை தந்ததால் அதை கைவிடவில்லை என தெரிவித்துள்ளார்.
தன்னுடைய 800 ரூபாய் ஊதியம் அனைவரின் இரவு உணவுக்கு செலவிடப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்போது ரிலையன்ஸ் அறக்கட்டளையின் கீழ் 13 பள்ளிகளை நீதா அம்பானி நடத்தி வருகிறார்.
ஜாம்நகர், சூரத், வதோதரா, லோதிவலி, நாகோதானே, தஹேய், நாக்பூர் மற்றும் நவி மும்பை ஆகிய இடங்களில் இவர்களின் பள்ளி செயல்பட்டு வருகிறது.
அது மட்டுமல்ல மும்பையில் திருபாய் அம்பானி பெயரில் ஒரு பள்ளியை செயல்படுத்தி வருகிறார்.
மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் அணியின் உரிமையாளர், நடன கலைஞர் என பன்முகம் கொண்ட நீதா அம்பானி தற்போது பல கோடிகளுக்கு அதிபதி ஆவார்