‘அரேபிய சர்வாதிகாரிகள் இஸ்ரேலுடன் உறவாடிக்கொண்டிருந்தபோது தீக்குளித்துக்கொண்ட அமெரிக்க இராணுவ வீரர்’
டெக்சாஸின் சான் அன்டோனியோவைச் சேர்ந்த இருபத்தைந்து வயது ஆரோன் புஷ்னெல், அமெரிக்க விமானப்படையில் கடமையாற்றுபவராவார்.
அவர் 2024 பெப்ரவரி 25 அன்று ஞாயிற்றுக்கிழமை வொஷிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே தனக்குத்தானே தீ வைத்துக்கொண்ட நிலையில் “பலஸ்தீனை விடுவி” எனக்கூச்சலிட்டார்.
‘பலஸ்தீனை விடுவி’ என்பது காஸாவின் அப்பாவி பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் கொடூரமான இனப்படுகொலைக்கு எதிராக போராடி வரும் உலகின் மில்லியன் கணக்கான மக்களின் உணர்வை உள்ளடக்கிய ஒரு சொற்றொடராகும்.
ஆரோன் புஷ்னெல், தீக்குளிப்பதற்கு முன் ‘இனப்படுகொலைக்கு இனிமேலும் உடந்தையாக இருக்கப்போவதில்லை” எனக் குறிப்பிட்டார்.
காணொளிக் காட்சிகளின்படி, விமானப்படை வீரர் புஷ்னெல் இஸ்ரேலிய தூதரகம் வரை அமைதியாக நடந்து சென்று பலஸ்தீன மக்களை இனப்படுகொலை செய்வதற்கு எதிராக தீவிர எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடப் போவதாக கூறுவதாகவும், தொடர்ந்து அவர் குடிநீர் போத்தலில் இருந்து திரவ எரிபொருளொன்றை அவரது தலை மீது ஊற்றிக் கொள்வதாகும், பின்னர் அவர் தன்னைத்தானே தீமூட்டிக்கொள்வதையும் விபரிக்கின்றது. ஈற்றில் அவர் “பலஸ்தீனை விடுவி” என்று பலமுறை உரத்துக்கூச்சலிட்டவாறு எரிந்து தரையில் சரிந்தார்.
மறுதினமன்று மாலையில், நூற்றுக்கணக்கான பலஸ்தீன சார்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே அவரது நினைவேந்தலுக்காக ஒன்றுகூடினர். ஆர்ப்பாட்டக்காரர்களுள் ஒருவரான கேப்பி, ‘எங்களுக்கு உடனடியாக போர்நிறுத்தம் வேண்டும்’ என்றார்.
“அருவருப்பாக இருக்கிறது. நான் கோபமாக இருக்கிறேன். நான் மிகவும் வருத்தப்படுகிறேன். இந்த மாதிரியான விடயத்தை நாடுவதற்கு எங்களுக்கு மக்கள் தேவையில்லை. கடந்த காலத்தில் வியட்நாமில் இதே அநியாயத்தைப் பார்த்தோம், நான் ஒரு அமெரிக்கனாக இருக்க வெட்கப்படுகிறேன்.” என்றார் ஆர்ப்பாட்டக்காரர் சமி கியு.
ஆரோன் புஷ்னெலின் விடயம் தனித்துவமானது. ஏனெனில் அவர் காஸாவில் இனப்படுகொலை பற்றிய திகில் விடயங்களை நேரடியாகக் காண்பதிலிருந்தும் துன்புறுத்தப்பட்ட பலஸ்தீனியர்கள் இனரீதியாக அகற்றப்படுவதைக் காண்பதிலிருந்தும் புவியியல் ரீதியாக தொலைவில் இருக்கிறார்.
ஆனாலும் மனிதர்களில் அரிதாக இருக்கும் கருணை கொண்ட இதயம் அவருக்கு இருந்ததை இது காட்டுகிறது.
உலகிற்கு தான் வழங்கும் தனது கடைசி செய்தியில், அவர் ‘இனப்படுகொலைக்கு உடந்தையாக’ இருக்க விரும்பவில்லை என்று வெளிப்படையாகக் கூறியதோடு அதனை ‘சாதாரணமாக்குவதற்காக’ ஆளும் வர்க்கத்தை குற்றஞ்சாட்டினார்.
‘பலஸ்தீனில் மக்கள் தங்கள் காலனித்துவவாதிகளின் கைகளில் அனுபவிக்கும் துன்பங்களோடு ஒப்பிடும்போது, எனது செயல் பெரிதல்ல’ என்று அவர் கூறியபோது அவரது பணிவும் தன்னடக்கமும் பெரியதாக வெளிப்பட்டன.
அவரது மறைவு உலகத்திற்கே ஒரு பேரிழப்பு. நல்லிணக்கத்தை நோக்கி செயற்படுவதாக கூறிக்கொண்டு காஸாவில் இஸ்ரேலின் இனப்படுகொலைத் தாக்குதலுக்கு பொய்கள் மற்றும் வஞ்சகத்தின் ஊடாக மேற்கத்திய ஆதரவு வழங்கப்படுவதை அவரால் இணங்கண்டு கொள்ள முடிந்தது.
மேற்கத்திய உலகின், குறிப்பாக அமெரிக்காவின் உறுதியான ஆதரவுடன் மட்டுமே இஸ்ரேலால் காஸாவில் மரண வெறியாட்டத்தையும் வெட்கக்கேடான அழிவையும் மேற்கொள்ள முடிகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.
மனிதாபிமான போர்நிறுத்தத்தை வெளிப்படையாகக் கோரும் ஐ.நா.சபையின் பல்வேறு தீர்மானங்களுக்கு எதிராக இப்போது அமெரிக்கா வீட்டோவை பயன்படுத்தியுள்ளது. பல பில்லியன் டொலர்கள் மற்றும் எண்ணற்ற ஆயுதங்கள் இஸ்ரேலுக்கு அமெரிக்காவிலிருந்தும் அதன் பங்காளர்களிடமிருந்தும் தொடர்ந்தும் அனுப்பப்படுகின்றன.
அறிக்கைகளின்படி, இஸ்ரேலிய இனப்படுகொலை பெரிதளவு கவனத்தை கொண்டு வருவதால், ஆரோன் புஷ்னெலின் தியாகம் வீண் போகாது என்று தீவிரமாக நம்பலாம். கடந்த மார்ச் 3ஆம் திகதி நிலவரப்படி, அகதிமுகாம்கள் மற்றும் மருத்துவமனைகளில் கூட இஸ்ரேலியப் படைகள் தீவிரமாக குண்டுவீசி வருவதால் இலட்சக்கணக்கான பலஸ்தீனர்கள் பட்டினிச் சாhவின் விளிம்பில் உள்ளனர். டெய்ர் அல் பலாஹ் கடற்கரையில் உணவுப் பொருட்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் பலஸ்தீனர்களுக்கு இறக்கிவிடப்படும் காட்சிகள் நெஞ்சை பதற வைக்கின்றன.
தற்போதுவரையில் கொல்லப்பட்ட 30 ஆயிரம் பலஸ்தீனர்களில் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆரோனின் மரணம், அமெரிக்காவுக்கு 21ஆம் நூற்றாண்டின் இனப்படுகொலையை ஆதரிப்பதை நிறுத்தும் நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும்.
உலகின் வேறு சில பகுதிகளில், பல முக்கிய பிரச்சினைகளுக்கு கவனம் செலுத்துவதற்காக மக்கள் தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொண்டனர்.
2010 டிசம்பர் 17 அரபு வசந்தம் அன்று 26 வயதான மொஹமட் பௌஅஸிஸி என்ற தெரு துனிஷிய நடைப்பாதை வியாபாரி தனது உணவு விற்பனை வண்டி பறிமுதல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து தன்னைத்தானே தீ வைத்துக்கொண்டார்.
அவர் தனது குடும்பத்திற்காக உழைக்கும் ஒரே நபராக இருந்தார், மேலும் அவரது வண்டியைப் பயன்படுத்தி உழைப்பதற்காக போலீஸாருக்கு அடிக்கடி இலஞ்சம் கொடுக்க வேண்டியிருந்தது.
அவரது மரணம் மத்திய கிழக்கு முழுவதிலும் உள்ள குடிமக்களுக்கு அவர்களின் கொடுங்கோல் அரசாங்கங்களுக்கெதிராக சவால் விடத் தூண்டியது. 23 ஆண்டுகளாக இரும்புக்கரம் கொண்டு ஆட்சி செய்த துனிசிய ஜனாதிபதி ஸைனுல் ஆபிதீன் பின் அலி உட்பட குடிமக்களால் சில அரசாங்கங்கள் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டன.
எகிப்தில் ஹுஸ்னி முபாரக்கின் முப்பது ஆண்டுகால கொடுங்கோல் ஆட்சியை அரபு வசந்தம் வீழ்த்தியது. 60 ஆண்டுகளுக்குப் பின் நடந்த சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலில் இஸ்லாமிய சகோதரத்துவ இயக்கம் சார்ந்த முஹம்மது முர்சி ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முஹம்மது முர்சி
எவ்வாறாயினும், அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இஸ்ரேல் சார்பாக சவுதி அரேபியா, குவைத் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியோரால் 11 பில்லியன் டொலர்கள் செலவில் முர்சி பதவி கவிழ்க்கப்பட்டார். அமெரிக்கா, இஸ்ரேலுக்கு சேவகம் புரியும் அப்துல் பத்தாஹ் அல் சிசி பதவியேற்றார்.
அப்துல் ஃபத்தாஹ் அல் சிசி
சமீபத்திய அறிக்கைகளின்படி, சர்வாதிகாரி அப்துல் ஃபத்தாஹ் அல் சிசி, பலஸ்தீனர்கள் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு எதிரான அவர்களின் தீய நடவடிக்கைகளுக்கு இஸ்ரேலுக்கும் மேற்கு நாடுகளுக்கும் உதவுகிறார்.
காஸாவில் பலஸ்தீனர்கள் அழிக்கப்படும் போது அவரது மகன் பலஸ்தீனர்களின் துயரத்திற்காக பணம் அச்சிட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது.
அல் சிசி இஸ்ரேலுடன் கைகோர்த்து இஸ்ரேலின் நிகழ்ச்சி நிரலை செயற்படுத்துகின்றார். மறுபுறம் சவுதி அரேபியாவும் ஐக்கிய அரபு இராச்சியமும் பலஸ்தீனர்களின் படுகொலையைத் தடுக்கவோ அல்லது நீர், உணவு, மருந்து இன்றி தவித்த அவர்களுக்கு குறைந்தபட்சம் ஒரு போத்தல் குடிநீர் அல்லது உணவுப் பொதியை வழங்கவோ எதற்குமே முன்வரவில்லை.
அதற்குப் பதிலாக சவுதி அரேபியா பல மில்லியன் டொலர்கள் செலவு செய்து மேற்கத்திய இசை விழாவை தனது பூமியில் ஏற்பாடு செய்தது, இது இஸ்லாத்தின் பிறப்பிடமான இந்த நாட்டின் மேற்கத்தியமயமாக்கலின் ஒரு பகுதியாகும்.
மேற்கத்திய ஏகாதிபத்திய ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்டு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் பாதுகாக்கப்படும் சவுதி ஆட்சி,இஸ்லாமியக் கொள்கைகள், போதனைகளுக்கெதிரான போக்கினை விமர்சனத்திற்கு உள்ளாக்கும் இஸ்லாமிய அறிஞர்களை தடுத்து வைத்துள்ளது. எதிர்வரும் புனித ரமழான் மாதத்தில் மதுபானக் கடைகளைத் திறந்து முஸ்லிம்கள் நோன்பு நோற்பதற்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது
இதனுடன் ஐக்கிய அரபு இராச்சியமானது இஸ்ரேலால் படுகொலை செயற்படும் பலஸ்தீனர்களுக்கு உதவுவதற்குப் பதிலாக, இனப்படுகொலையை எளிதாக்க உதவும் வகையில், பத்து டிரக்குகளில் புத்தம் புதிய உணவுகளை இஸ்ரேலுக்கு அனுப்பியது.
இந்த கொடுங்கோலர்கள் தம் மக்களை கொடூரமாக அடக்கி வைத்திருக்கிறார்கள். அடக்குமுறையை முறியடித்து, எல்லைகள் திறக்கப்பட்டால், மத்திய கிழக்கு முழுவதும் விரக்தியடைந்த மக்கள் இஸ்ரேலையும் அதன் அமெரிக்க, ஐரோப்பிய ஆதரவாளர்களையும் பொருத்தமான விதத்தில் கையாள்வார்கள்.
(லத்தீப் பாரூக்)
தமிழில் : பிஷ்ருன் நதா மன்சூர்