பூகோளம் முழுவதையும் தாக்கத்துக்கு உள்ளாக்க கூடியதாக ஏழு முக்கிய விவகாரங்கள் பிரதான வல்லரசுகளால் கவனத்தில் கொள்ளப்படுகிறது.
கிழக்கு ஐரோப்பிய விவகாரம், இந்தோ – பசுபிக் விவகாரம், மத்திய கிழக்கு விவகாரம், சாஹெல் பிராந்தியம் எனப்படும் மத்திய ஆபிரிக்க விவகாரம், இவை தவிர சிறிய நாடுகளின் பொருளாதார விவகாரம் காலநிலை மாற்றம் இறுதியாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த விவகாரம் ஆகிய ஏழு விடயங்களும் உலகம் எதிர்கொண்டிருக்கும் முக்கிய சவால்களாக கையாளப்படுகிறது.
கிழக்கு ஐரோப்பா நோக்கிய அமெரிக்க தலைமையிலான நேட்டோ நகர்வுகள், ரஷ்யாவை பல மைய உலக ஒழுங்கில் ஒரு தரப்பாக உருவாகுவதை தடை செய்வதாக அமைந்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஐரோப்பிய ஒன்றியமும் இன்னமும் இணைந்து கொள்ளாத நாடுகளை அந்த அமைப்புடன் இணைவதற்கான மனுதாரர்களாக சேர்த்து கொள்ளும் மூலோபாயம் கிழக்கு ஐரோப்பிய நாடுகளை ரஷ்ய அணியில் இருந்து பிரித்து விடும் நோக்கம் கொண்டதாக கருதப்படுகிறது.
உக்ரேன் யுத்தத்தில் கணிசமான மொத்த தேசிய உள்நாட்டு உற்பத்தி வருமானத்தைச் செலவு செய்யும் வகையில் ரஷ்யாவை வைத்திருப்பது ரஷ்ய வளர்ச்சி வேகத்தை குறைக்க உதவுவதாக உள்ள அதேவேளை அமெரிக்காவின் நீண்ட கால திட்டமான நிலஅளவில் பாரிய வளங்களை கொண்ட ரஷ்யாவை சிறு பகுதிகளாக உடைத்தல், ஜேர்மனியையும் ரஷ்யாவையும் மூலோபாய அடிப்படையில் இணைந்து செயற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்படாத வகையில் தடுப்பதன் மூலம் நில ஆதிக்க வல்லமையை கையாள கூடிய ரஷ்ய மூலோபாயத்தை நிர்மூலமாக்கும் நகர்வில் முனைப்பாக இருத்தல் அடிப்படை நோக்கமாகும்
அதேவேளை உக்ரேன் யுத்தத்தை நீண்ட கால யுத்தமாக கொண்டு நடாத்துவதற்குரிய செலவீனங்களை யார் கையாள்வது என்ற பொருளாதார பிரச்சினை நேட்டோ அங்கத்துவ நாடுகள் மத்தியில் ஏற்பட்டு வருகிறது . இதில் நேட்டோ அங்கத்துவ நாடுகளை தனிப்பட்ட ரீதியில் உக்ரேனுடன் இருதரப்பு பாதுகாப்பு உடன்படிக்கைகளில் சிக்க வைப்பது நேட்டோ நாடுகள் மத்தியில் உள்ள உள்ளக வியூகங்களாக உள்ளன. ரஷ்யா உக்ரேன் யுத்தத்தில் தலை எடுக்குமானால் நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அணியுடன் புதிதாக சேர்ந்து கொள்ளும் நாடுகள் மத்தியில் நேட்டோ அணியின் உத்தரவாதத்தில் சந்தேகம் உருவாக்கும் நிலை ஏற்படும்.
ஆக, கிழக்கு ஐரோப்பிய பிராந்திய நிலையில் அமெரிக்க தலைமையும் ரஷ்யாவின் நீண்ட காலத்துக்கு யுத்தம் செய்யகூடிய தன்மைக்கும் இடையில் உக்ரேன் சோர்வுநிலை ஏற்படாத வகையில் கவனிக்கப்பட வேண்டியிருந்தலும் நேட்டோ நாடுகள் தம் பொருளாதார நிலையை கணிப்பில் கொண்டுள்ளதை கவனிக்க கூடியதாக உள்ளது.
உலகின் அறுபது சதவீதமான சனத்தொகையை கொண்டுள்ள பிராந்தியமாகவும் அறுபது சதவீத உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களிப்பு செய்யும் பிராந்தியமாகவும் இந்தோ – பசுபிக் பிராந்தியம் கணிக்கப்படுகிறது.
இப்பிராந்தியத்தின் முக்கிய வியாபார நீரோட்டத்தில் உள்ள மலாக்கா நீரினையூடாக மட்டும் உலகின் 25 சதவீத வர்த்தக பண்டங்கள் பரிமாற்றத்திற்கு உள்ளாகிறது.
இத்தகைய வர்த்தக முக்கியத்தவம் வாய்ந்த அமைதியும் சமாதானமும் நிலவ வேண்டியதாக இந்து சமத்திர பிராந்தியமுள்ளது. ஆனால் நடைமுறையில், சீன, அமெரிக்க வல்லரசுகளின் ஆதிக்க போட்டிக்கான முன்னனி அரங்கமாக அமைந்துவிட்டது.
கடல் ஆதிக்கத்தை மையமாக கொண்டு நகரும் சீனா, ‘ஆசியர்களால்-ஆசியர்களுக்கு’ என்ற கோட்பாட்டின் அடிப்படையில் வெளிப்பிராந்திய வல்லரசுகளுக்கு இந்து சமுத்திரத்தில் இடமில்லை என்று தன்னை மையப்படுத்திய நகர்வுகளை நோக்காக கொண்டு செயற்படுகிறது.
இதனையே அமெரிக்கத் தரப்பு காரணமாக சுட்டிக்காட்டி தனது பாதுகாப்புக் கட்டமைப்புகளை நிலை நிறுத்துவதிலும் கூட்ட நாடுகளைச் சேர்த்து கொள்வதிலும் நாடுகளில் உள்நாட்டு விவகாரங்களில் தலையீடு செய்து நிகழ்வுகளை உருவாக்குவதிலும் செல்வாக்கு செலுத்தவதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
சீனா, ‘பாதை மற்றும் மண்டலம் முன்முயற்சி’ என்ற நகர்வு திட்டத்தை முன்நிறுத்தி தனது பொருளாதார கட்டமைப்பு திட்டங்களை இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் உள்ள பல சிறிய அரசுகள் மத்தியில் அறிமுகம் செய்து விட்டிருக்கிறது.
ஆனால் அமெரிக்கத் தரப்பு இதற்கு மறுதலிப்பாக தாராள பொருளாதார திட்டங்களை ஏற்றுக்கொள்ளும் நாடுகளை அணுகி வருவதுடன் அவற்றில் இராணுவ கட்டமைப்பகளையும் இணைத்து முன்நிறத்தி வருகிறது. ‘சுதந்திரமான திறந்த இந்தோ – பசுபிக்’ என்ற திட்டத்தின் அடிப்படையில் தனது பிரசன்னத்தை நிலைநிறுத்திக்கொள்வதில் அமெரிக்கா கவனமாக செயற்பட்டு வருகிறது.
சீனாவின் பொருளாதார கட்டமைப்புகளின் வளர்ச்சி அமெரிக்க மேலாண்மைக்கு ஆபத்தானது என்ற பார்வையில் அமெரிக்கா செயற்பட்டு வருகிறது.
இதனடிப்படையில் ஒவொரு இந்தோ -பசுபிக் நாடுகளிலும் சீனச் செல்வாக்கு வளர்வதை சிதைப்பது என்று அடிப்படை நோக்கத்துடன் அமெரிக்க மூலோபாயம் தற்பொழுது நகர்த்தப்படுகிறது.
ஆனால் இந்தோ – பசுபிக் பிராந்தியத்தின் விதியை சீனாவும் அமெரிக்காவும் மட்டும் நிர்ணயிப்பதாக எடுத்துக்கொள்ள முடியாது.
இதர பாத்திரங்களான பிராந்திய வல்லரசுகள் சர்வதேச ஒழுங்குகளின்படி நகரும் நாடுகளாக அல்லாது ஒழுங்குகளை வடிவமைக்கும் சக்திகளாக இருப்பதை சீன, அமெரிக்க தரப்புகள் நன்குணர்ந்துள்ளன.
ஆரம்பத்தில் ஆசிய – பசுபிக் என்ற பெயர் பலகையில் தூரகிழக்கு நாடுகளை முதன்மையாகக் கொண்டு நகர்வுகள் இருந்த போதிலும் சீன எழிச்சியை யப்பான் இந்திய கூட்டின் முலம் பதிலீட்டு செய்து சமநிலை உருவாக்கும் வகையில் இருசமுத்திரங்களை மையமாக கொண்ட மூலோபாயமாக இந்தோ,பசுபிக் பிராந்தியமாக பெயர் மாற்றம் பெற்றது.
இதற்கு, இந்திய பொருளாதார வளர்ச்சி முக்கிய காரணமாக அமைந்தது. இப்பெயர் மாற்றும் மேலும் பதற்ற நிலையை அதிகரிக்கும் பிராந்தியமாக இந்து சமுத்திர பிராந்தியத்தையும் பசுபிக் பிராந்தியத்தையும் உருவாக்கியுள்ளது.
குறிப்பாக பிராந்திய வல்லரசுகளும் சிறிய நாடுகளும் சீன அமெரிக்க இழுபறியின் மத்தியில் சிக்கித் திணறும் நிலைக்கு இட்டுச் சென்றுள்ளது. பெரும்பாலான நாடுகள் தமது உறவை இருதரப்புடனும் வைத்து கொள்வதற்கே விரும்புகின்ற போதிலும் குறிப்பாக கேந்தர முக்கியத்துவம் வாய்ந்த நாடுகள் உள்ளக அரசியல் அமைதியை இழந்துள்ளன.
சீனா ஆரம்பம் முதல் தனது மாநிலமாக கூறிவரும் தாய்வான் அமெரிக்கச் செல்வாக்கில் அதியுச்ச பொருளாதார வளர்ச்சியை கண்டிருக்கிறது. ஆனால் ஏற்கனவே அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ள ‘ஒரே சீன ஒப்பந்தம்’ காரணமாக தாய்வான் தலைநகர் ‘தாய்பே’ சுதந்திர பிரகடனம் செய்ய முடியாத நிலையில் உள்ளது.
இத்தீவை தனது முழுமையான கட்டுபாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு பெரும் முயற்சி செய்தது வரும் சீனா, பொருளாதார, இராணுவ உதவிகள் செய்து வரும் அமெரிக்க தலையீட்டின் காரணமாக தயக்க நிலையில் உள்ளது.
தாய்வான், சீனா இருதரப்பும் இராணுவ செலவீனங்களை அதிகரித்து வருவது மேற்குலக ஆயுத உற்பத்தி சந்தைக்கு பெரும் வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.
இதர அரசுகளான இந்தோனேஷியா, மாஷல், மைரொனிசியா, பலாவு, பப்புவா-நியூகினியா போன்ற தீவுகளும் அமெரிக்க தரப்புடன் இணைந்து செயலாற்ற முன்வந்துள்ளன.
அதேவேளை அமெரிக்க அவுஸ்திரேலிய பிரித்தானிய நாடுகளால் உருவாக்கப்பட்ட ‘ஆக்கஸ்’ அமைப்பும் அமெரிக்க, யப்பான், இந்திய, அவுஸ்திரேலிய ஆகியவற்றின் நாற்கர கூட்டும் சீனா மீதான பதற்ற நிலைய உருவாக்கும் தன்மை கொண்டனவாகவே உள்ளன.
ஆக வியாபார பண்டங்களின் பரிமாற்றத்திற்கும் ஆயுத விற்பனைக்கான சந்தையாகவும் தற்பொழுது திகழும் இந்தோ, பசுபிக் பிராந்தியம் எந்தத் தரப்பிற்கும் சார்பாக பாதுகாப்பு ஒப்பந்தங்கள் செய்துகொள்ளாத வரையில் தமது நிலையை பாதுகாத்துக் கொள்வதற்கு வாய்ப்புக்கள் உள்ளன.
இந்தோ-பசுபிக் பிராந்திய நாடுகளை சீன வளர்ச்சியில் அதிகம் தங்கியிருக்க முடியாத வகையில் அமெரிக்க மூலோபாய நகர்வுகள் புதிய இந்தோ – பசுபிக் பொருளாதார அமைபுக்களை உருவாக்கியுள்ளது.
அப்பிராந்தியத்தில் தனது தலைமைத்துவத்தை சிறிய நாடுகள் ஏற்றுக்கொள்ளும் வகையில் நகர்த்துகிறது.
ஆனால் சிறிய நாடுகள் தமது உற்பத்திப் பொருட்களை அமெரிக்காவில் சந்தைப்படுத்துவதற்கு போடப்பட்டுள்ள நிர்வாகக் கட்டுப்பாடுகளால் அமெரிக்கப் பொருளாதார திட்டத்தின் மீது சிறிய நாடுகளுக்கு சந்தேகம் ஏற்பட்டு வருகிறது.
அடுத்த வாரம் ஏனைய ஐந்து சர்வதேச விவகாரங்களையும் அவற்றிலுள்ள மூலோபாயச் சிக்கல்களையும் பார்க்கலாம்.
-லோகன் பரமசாமி-