டெல்லி: கச்சத்தீவு விவகாரத்தில் காங்கிரஸ் அலட்சியமாகச் செயல்பட்டதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் சாடிய நிலையில், அதற்கு முன்னாள் அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.

கச்சத்தீவு விவகாரம் கடந்த சில நாட்களாக மீண்டும் பூதாகரமாகி இருக்கிறது. முதலில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இது தொடர்பாக ஆர்டிஐ மூலம் பெற்ற தகவல்களைப் பகிர்ந்து இருந்தார். அதைப் பிரதமர் மோடியும் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.

இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெய்சங்கர் இது குறித்து சில கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

காங்கிரஸ் செயல்பாடுகளாலேயே கச்சத்தீவு இலங்கைக்குத் தாரைவார்க்கப்பட்டதாக அவர் சாடினார்.

அவரது குற்றச்சாட்டுகளுக்குக் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப சிதம்பரம் பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மொத்தம் மூன்று ட்வீட்களை பதிவிட்டுள்ளார். தமிழில் ஒரு ட்வீட்டும் ஆங்கிலத்தில் இரண்டு ட்வீட்களையும் பதிவிட்டு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

ப. சிதம்பரம்: தனது முதல் ட்வீட்டை தமிழில் பதிவிட்டுள்ள ப சிதம்பரம், “1974ஆம் ஆண்டில் இரு நாடுகளிடையே நடந்த பரிமாற்றத்தை மோடி இப்பொழுது ஏன் கிளப்புகிறார்?

கச்சத்தீவின் பரப்பளவு 1.9 சதுர கி.மீ. அதனைத் தந்து 6 லட்சம் இலங்கைத் தமிழர்களை மீட்டு அவர்களுக்குச் சுதந்திரமும் புது வாழ்வும் தந்தவர் இந்திரா காந்தி.. மோடி செய்தது என்ன?

2000 சதுர கி.மீ இந்தியப் பூமியைச் சீனா அபகரித்திருக்கிறது. “எந்தச் சீனத் துருப்புகளும் இந்திய மண்ணில் இல்லை” என்று சொல்லி சீனாவின் ஆக்கிரமிப்பை மோடி நியாயப்படுத்தினார்.

மோடியின் பேச்சைச் சீனா உலகமெங்கும் பரப்பியது. சீனா அபகரித்துள்ள நிலம் ஒரு சிறிய தீவை விட 1000 மடங்கு பெரியது.. நல்லுணர்வுடன் பரிமாற்றம் வேறு, காழ்ப்புணர்வுடன் அபகரிப்பது வேறு” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

அந்தர் பல்டி: அடுத்த இரண்டு ட்வீட்களை அவர் ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர், “பழிக்கு பழி என்பது பழசு.. ட்வீட்டிற்கு ட்வீட் என்பது தான் புதிய ஆயுதம்.

. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் 27-1-2015 தேதியிட்ட ஆர்டிஐ பதிலைப் பார்க்க வேண்டும். அப்போது ஜெய்சங்கர் தான் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தார் என்று நான் நம்புகிறேன்.

அந்த ஆர்டிஐ பதில் அந்த சிறிய தீவு இலங்கைக்குச் சொந்தமானது என்பதை இந்தியா ஒப்புக்கொண்ட சூழ்நிலையை நியாயப்படுத்தியது.

ஆனால் இப்போது வெளியுறவுத் துறை அமைச்சரும் அவரது அமைச்சகமும் இப்போது அந்தர் பல்டி அடிப்பது ஏன்.. மக்கள் எவ்வளவு விரைவாக மாறுகிறார்கள் பாருங்கள்.

. சுறுசுறுப்பான வெளியுறவுத் துறை அதிகாரி முதல் புத்திசாலித்தனமான வெளியுறவுச் செயலாளர் வரை திறமையான அதிகாரியாக இருந்தவர் இப்போது ஆர்எஸ்எஸ்-பாஜகவின் ஊதுகுழலாகவே மாறிவிட்டார்.

ஜெய்சங்கரின் வாழ்க்கையும் நேரமும் அக்ரோபாட்டிக் விளையாட்டுகளின் வரலாற்றில் பதிவு செய்யப்படும்.

என்ன மாற்றம்: அவர் தனது மற்றொரு ட்வீட்டில், “கடந்த 50 ஆண்டுகளில் மீனவர்கள் இலங்கையில் தடுத்து வைக்கப்படுவது உண்மைதான்.

அதேபோன்று பல இலங்கை மீனவர்களை இந்தியாவும் கைது செய்துள்ளது.. ஒவ்வொரு அரசும் இலங்கையுடன் பேச்சுவார்த்தை நடத்தி நமது மீனவர்களை விடுவித்துள்ளன ஜெய்சங்கர் வெளியுறவுத் துறை அதிகாரியாக இருந்தபோதும், வெளியுறவுச் செயலராக இருந்தபோதும், வெளியுறவு அமைச்சராக இருந்தபோதும் இது நடந்துள்ளது.

ஜெய்சங்கர் காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் எதிராகப் பேசுவதற்கு இதில் இப்போது என்ன மாற்றம் ஏற்பட்டது? வாஜ்பாய் பிரதமராக இருந்தபோதும், பாஜக ஆட்சியில் இருந்தபோதும், தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளுடன் கூட்டணியில் இருந்தபோதும் மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்படவில்லையா? 2014 முதல் மோடி ஆட்சியில் இருந்தபோது மீனவர்கள் இலங்கையால் கைது செய்யப்படவில்லையா?” என்று அவர் மிகக் காட்டமாக விமர்சித்துள்ளார்.

இந்தியாவுக்குச் சொந்தமான கச்சத்தீவை இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது அதை அவர் இலங்கைக்குக் கொடுத்தார்.

கச்சத்தீவு விவகாரத்தில் என்ன நடந்தது.. அப்போது ஆளும் கட்சியாக இருந்த திமுக உள்ளிட்ட கட்சிகள் மத்திய அரசை முடிவை எதிர்க்கவே செய்தது.

கச்சத்தீவு விவகாரத்தில் 2 ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது. 1974இல் போடப்பட்ட முதல் ஒப்பந்தத்தில் மீன்பிடி உரிமம் இருப்பதாகக் கூறப்பட்டு இருந்தது.

இருப்பினும், இரண்டு ஆண்டுகளில் 1976இல் போடப்பட்ட மற்றொரு ஒப்பந்தத்தில் அந்த உரிமை பறிக்கப்பட்டு விட்டதாக அமைச்சர் ஜெய்சங்கர் குற்றச்சாட்டு

கச்சத்தீவு விவகாரத்தில் இத்தனை காலமாக அமைதியாக இருந்துவிட்டுத் தேர்தல் நெருங்கும் போது திடீரென அதைக் கையில் எடுத்துள்ளது ஏன் என்று முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.

 

Share.
Leave A Reply