: “டெல்அவில்:பாலஸ்தீனத்தின் காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீதான இஸ்ரேலின் போர் 6-வது மாதத்தை நெருங்கியுள்ளது.
இதில் காசாவில் குழந்தைகள், பெண்கள் உள்பட 32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.இதற்கிடையே ஹமாஸ் அமைப்பினரிடம் உள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகளை மீட்டு கொண்டு வரக்கோரி இஸ்ரேலில் பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்நிலையில் இஸ்ரேலில் நேற்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக பெரும் போராட்டம் நடந்தது.டெல்அவில், ஜெருச லேம், சிசேரியா ரானானா, ஹெர்ஸ்லியா ஆகிய நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் சாலைகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காசாவில் உள்ள அனைத்து பிணைக் கைதிகளை மீட்டு கொண்டு வர கோரியும், பிரதமர் நெதன்யாகு பதவி விலக கோரியும் கோஷங்களை எழுப்பினார்கள்.
பொதுத் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாக சென்றனர்.
அவர்கள் அரசு அலுவலகங்களை முற்றுகையிட முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.ஜெருசலேமில், பிரதமர் நெதன்யாகு வீடு முன்பு ஏராளமானோர் திரண்டு போராட்டம் நடத்தினர்.
அப்போது பிணைக் கைதிகளை மீட்க தவறிவிட்டதாக குற்றம் சாட்டினர். சில இடங்களில் போராட்டக்காரர்கள், போலீசார் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.சாலையில் பொருட்களை போட்டு தீ வைத்து போராட்டக்காரர்கள் கொளுத்தினர்.
இந்த போராட்டங்கள் காரணமாக இஸ்ரேலில் நேற்று இரவு பரபரப்பு நிலவியது.டெல்அவிலில் இன்று அதிகாலை போராட்டம் முடிவுக்கு வந்ததாகவும், 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே இன்று மீண்டும் போர் நிறுத்தத்திற்கான பேச்சு வார்த்தை எகிப்தில் தொடங்குகிறது.”,