அஹமதாபாத் நரேந்திர மோடி விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (04) நடைபெற்ற மிகவும் பரபரப்பான இண்டியன் பிறீமியர் லீக் போட்டியில் ஷஷான்க் சிங் குவித்த அதிரடி அரைச் சதத்தின் உதவியுடன் குஜராத் டைட்டன்ஸை ஒரு பந்து மீதமிருக்க 3 விக்கெட்களால் பஞ்சாப் கிங்ஸ் வெற்றிகொண்டது.
இந்தியாவில் தற்போது நடைபெற்றுவரும் 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 17ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 200 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 19.5 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 200 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.
ஷஷாங்க சிங் குவித்த ஆட்டம் இழக்காத அரைச் சதம், ப்ரப்சிம்ரன் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகியோரின் திறமையான துடுப்பாட்டங்கள் என்பன பஞ்சாப் கிங்ஸின் வெற்றியை உறுதிசெய்தன.
இதன் காரணமாக குஜராத் டைட்டன்ஸ் அணித் தலைவர் ஷுப்மான் கில் ஆரம்ப வீரராக களம் இறங்கி கடைசிவரை ஆட்டம் இழக்காமல் குவித்த அரைச் சதம் வீண்போனது.
அணித் தலைவர் ஷிக்கர் தவான் 2ஆவது ஓவரில் ஒரு ஓட்டத்துடன் ஆட்டம் இழந்ததால் பஞ்சாப் கிங்ஸின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை.
தொடர்ந்து ஜொனி பெயாஸ்டோவ் (22), ப்ர்ப்சிம்ரன் சிங் (35) ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிய போதிலும் நீண்ட நேரம் அவர்களால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.
சாம் கரன் (5) களம் புகுந்த சொற்ப நேரத்தில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.
ஸிம்பாப்வே சகலதுறை வீரர் சிக்கந்தர் ராசா நிதானமாகத் துடுப்பெடுத்தாடி 15 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது ஆட்டம் இழந்தார். (111 – 5 விக்.)
இந் நிலையில் ஷஷாங்க் சிங், ஜிட்டேஷ் ஷர்மா ஆகிய இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 6ஆவது விக்கெட்டில் 19 பந்துகளில் 39 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
ஜிட்டேஷ் ஷர்மா 8 பந்துகளில் 2 சிக்ஸ்களுடன் 16 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்ததும் பஞ்சாப் கிங்ஸுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
ஆனால், ஷஷாங் சிங், அஷுட்டோஷ் ஷர்மா ஆகிய இருவரும் அதிரடியில் இறங்கி 22 பந்துகளில் பகிர்ந்த 43 ஓட்டங்கள் பஞ்சாப் கிங்ஸின் வெற்றிக்கான திருப்பு முனையாக அமைந்தது.
17 பந்துகளில் 31 ஓட்டங்களைப் பெற்ற அஷுட்டோஷ் ஷர்மா கடைசி ஓவரின் முதல் பந்தில் ஆட்டம் இழந்தார்.
அடுத்த பந்து வைட் ஆனதுடன் 2ஆவது பந்தில் ஹாப்ரீட் சிங்கினால் ஓட்டம் பெறமுடியவில்லை.
கடைசி 4 பந்துகளில் பஞ்சாப் கிங்ஸின் வெற்றிக்கு 6 ஓட்டங்கள் தேவைப்பட்டது. 3ஆவது பந்தில் ஹாப்ரீட் சிங் ஒற்றை ஒன்றை எடுத்து ஷஷாங்க் சிங்குக்கு துடுப்பெடுத்தாட வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்தார்.
அடுத்த பந்தை பவுண்டறி நோக்கி விசுக்கிய ஷஷாங்க் சிங், வெற்றி ஓட்டத்தை லெக் பை மூலம் பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் நூர் அஹ்மத் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டும் இழந்து 195 ஓட்டங்களைக் குவித்தது.
ஆரம்ப வீரர் அணித் தலைவர் ஷுப்மான் கில் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் பெற்றதுடன் 4 இணைப்பாட்டங்களில் பங்காற்றி குஜராத் டைட்டன்ஸின் மொத்த எண்ணிக்கைக்கு பலம் சேர்த்தார்.
ஆரம்ப வீரர் ரிதிமான் சஹா 11 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தபோது குஜராத் டைட்டன்ஸின் மொத்த எண்ணிக்கை 29 ஓட்டங்களாக இருந்தது.
அதன் பின்னர் கேன் வில்லியம்ஸனுடன் 2 ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களையும் சாய் சுதர்ஷனுடன் 3ஆவது விக்கெட்டில் 53 ஓட்டங்களையும் விஜய் ஷன்கருடன் 4ஆவது விக்கெட்டில் 42 ஓட்டங்களையும் ஷுப்மான் கில் பகிர்ந்தார்.
கேன் வில்லியம்சன் 26 ஓட்டங்களையும் சாய் சுதர்ஷன் 33 ஓட்டங்களையும் விஜய் ஷன்கர் 8 ஓட்டங்களையும் பெற்றனர்.
தொடர்ந்து பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் ராகுல் தெவாட்டியாவுடன் மேலும் 35 ஓட்டங்களைப் ஷுப்மான் கில் பகிர்ந்தார்.
ஆரம்ப வீரராக களம் இறங்கி கடைசிவரை ஆட்டம் இழக்காமல் இருந்த ஷுப்மான் கில் 43 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 89 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்த எண்ணிக்கையே இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் தனி நபர் ஒருவரால் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களாகும்.
டெல்ஹி கெப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர் புதன்கிழமை பெற்ற 85 ஓட்டங்களே இதற்கு முன்னர் தனிநபருக்கான அதிகூடிய எண்ணிக்கையாக இருந்தது.
ராகுல் தெவாட்டியா 8 பந்துகளில் 23 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் கெகிசோ ரபாடா 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.