இவ்வருடம் ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும் என்ற நம்பிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது மொட்டு கட்சியின் செல்வாக்கை மக்கள் மத்தியில் உயர்த்த பல முயற்சிகள் எடுத்து வருகின்றார்.

முதலாவதாக பாராளுமன்றத் தேர்தலையே நடத்த வேண்டும் என்ற பிடிவாதத்துடன் அமெரிக்காவிலிருந்து திரும்பிய பொது ஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பஸில் ராஜபக்சவின் சகல முயற்சிகளையும் தவிடு பொடியாக்கி விட்டார் ஜனாதிபதி ரணில்.

கட்சியை ஆரம்பித்ததிலிருந்து அதை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்கு பல மறைமுக பணிகளை ஆற்றிய பஸில் ராஜபக்ச தனது தவறான கொள்கைகளால் மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை சம்பாதித்துக்கொண்டிருக்கின்றார்.

கோட்டாபயவை ஜனாதிபதி வேட்பாளராக்கியதே மகிந்தவும் பஸிலும் செய்த தவறுகள். அதை நியாயப்படுத்துவதற்காக கோட்டாபய அரசாங்கத்தில் மகிந்த பிரதமராகவும் பஸில் நிதி அமைச்சராகவும் பொறுப்பேற்று மக்களை படுகுழிக்குள் தள்ளினர்.

கோட்டாபய ராஜபக்ச எடுத்த சில முடிவுகளை தட்டிக்கேட்க முடியாது மகிந்த விளங்கினார். ஏனென்றால் அவரது மகன் நாமலுக்கு கோட்டாபய விருப்பிமில்லாமலேயே அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுப் பதவியை வழங்கினார்.

மறுபக்கம் மொட்டு கட்சியின் தேசிய அமைப்பாளராக விளங்கிய பஸில், மகிந்த காலத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற பதவியில் அமர்ந்து அனைத்து அமைச்சுக்களையும் ஆட்டி வைத்தது போன்று செயற்பட ஆரம்பித்தார்.

இறுதியில் அனைவரையும் பதவியிறக்க அவர்களுக்கு வாக்களித்த மக்களே வீதிக்கு இறங்கினர். இந்நிலையில் மீண்டும் பொதுஜன பெரமுனவை கட்டியெழுப்பும் முயற்சிகளில் கட்சியின் தலைவரான மகிந்த ராஜபக்ச கடும் போராட்டம் செய்து வருகின்றார்.

தனது மகன் நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்கி அழகு பார்க்க வேண்டும் என்ற ஆசையில் மண்விழுந்து விட்டதால் குறைந்தது பிரதமராகவாவது ஆக்கி விட வேண்டும் என்று முயற்சியில் அவர் இறங்கியுள்ளார்.

அதற்காக கட்சியில் உயர் நிலை பதவியில் அவரை அமர்த்தி அழகு பார்க்க முடிவு செய்தார். அதன் படி கடந்த மாதம் 27 ஆம் திகதி இடம்பெற்ற கட்சியின் நிறைவேற்று சபை கூட்டத்தில் நாமல் ராஜபக்ச கட்சியின் தேசிய அமைப்பாளராக தெரிவு செய்யப்பட்டார்.

எனினும் அதற்கு ஆப்பு வைக்கும் முகமாக மகிந்தவின் நெருங்கிய ஆதரவாளரான அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, ‘நாமலுக்கு ஜனாதிபதியாவதற்கு இன்னும் காலம் இருக்கின்றது’ ஊடகங்களுக்கு கருதுத்து தெரிவித்து விட்டார்.

இது மகிந்தவுக்கும் நாமலுக்கும் கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் பிரசன்னவின் கருத்தை கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் வரவேற்றுள்ளனர். சுதந்திர கட்சியின் தலைவராக மகிந்த இருந்த காலத்தில் அவருக்கு ஆதரவாக செயற்பட்ட பலர் தற்போது பொதுஜன பெரமுனவில் உள்ளனர்.

இடையில் அரசியலுக்கு வந்த நாமல் ராஜபக்சவை அடுத்த மகிந்தவாக ஏற்றுக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை. மிக முக்கியமாக பஸில் ராஜபக்சவே நாமலை எதிரியாகத்தான் பார்க்கின்றார்.

மகிந்த அரசியலில் இருக்கும் வரை தான் நாமலுக்கு மரியாதை. அவர் ஓய்வு பெற்று விட்டால் கட்சிய. பஸில் ஆக்ரமிப்பார் அல்லது கலைத்து விடுவார். எனவே தள்ளாட்டத்துடன் பாராளுமன்றில் வலம் வருகின்றார் மகிந்த.

தொடர்ந்தும் அரசியலில் ஈடுபடுவேன் என்றும் ஊடகங்களுக்கு கூறி வருகின்றார். பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டவுடன் நாமல் ராஜபக்ச தன்னை முழுவதுமாக மாற்றிக்கொண்டுள்ளார். தனது நடை உடை பாவனை மற்றும் தலை அலங்காரம் அனைத்திலும் மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். எந்த உடை அணிந்தாலும் மறக்காமல் சிவப்பு சால்வையை கழுத்தில் போட்டுக்கொள்கின்றார்.

தன்னுடன் ஒரு கூட்டத்தை வைத்துக்கொண்டு கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் கூட்டங்களை நடத்துகின்றார்.

கம்பஹா மாவட்டம் பஸிலின் கட்டுப்பாட்டில் இருந்தது. அரகலய போராட்டத்துக்குப்பின்னர் , மொட்டு கட்சியில் யார் சென்றாலும் மக்கள் அக்கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை.

அம்மாவட்டத்தில் மொட்டு கட்சி பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றது. இந்நிலையில் தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள நாமல் மீண்டும் கட்சியை கட்டியெழுப்பும் முழுமூச்சில் இறங்கியுள்ளார். ஆனால் அது எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பது தெரியவில்லை.

முன்னாள் தேசிய அமைப்பாளர் பஸிலே இதற்கு முட்டுக்கட்டை போடக்கூடும். நாமலின் கூட்டங்களுக்கு செல்ல வேண்டாம் என தனது ஆதரவாளர்களுக்கு அவர் உத்தரவு போடலாம்.

மகன் நாமலை அரசியலில் உச்ச இடத்துக்கு கொண்டு செல்வதற்கு மகிந்த எடுத்த இறுதி முயற்சியே தேசிய அமைப்பாளர் பதவி. ஆனால் மகிந்த தனது ஆட்சி காலத்தில் தனது புதல்வர்களின் சுகபோக வாழ்வு, ஆடம்பரம், வீண் செலவு போன்றவற்றை கண்டு கொள்ளாமல் இருந்து விட்டார்.

அந்த ஆடம்பர வாழ்க்கையின் வீடியோக்கள் படங்கள் இப்போது வலம் வந்து நாட்டு மக்களை எரிச்சலில் தள்ளியுள்ளன. எனவே அதற்கு நாமல் எந்த கருத்தையும் தெரிவிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.

எல்லாவற்றையும் விட ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க தயாராகும் ரணில் விக்ரமசிங்க இந்த நகர்வுகளை அவதானித்துக்கொண்டிருக்கின்றார்.

எந்த சந்தர்ப்பத்திலும் அவர் மகிந்த தரப்பினரை எதிர்கால அரசியலில் ஊக்குவிக்க விரும்பாதவராகவே உள்ளார்.

தேசிய அமைப்பாளராக பொறுப்பேற்றுள்ள நாமலுக்கு இந்நாட்டின் தேசிய அந்தஸ்த்துள்ள ஒரு தலைவராக உருவெடுப்பது சவாலான காரியம் என்றே கூறத் தோன்றுகிறது.

 

-தேசியன்

Share.
Leave A Reply