ஜெய்பூர் சவாய் மான்சிங் விளையாட்டங்கில் புதன்கிழமை (10) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பிறீமியர் லீக் அத்தியாயத்தின் 24ஆவது போட்டியில் ராஷித் கானின் அதிரடி ஆட்டத்தின் உதவியுடன் ராஜஸ்தான் றோயல்ஸை கடைசிப் பந்தில் 3 விக்கெட்களால் குஜராத் டைட்டன்ஸ் வெற்றிகொண்டது.
இந்த வருட இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் றோயல்ஸ் அடைந்த முதலாவது தோல்வி இதுவாகும்.இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தபோதிலும் அணிகள் நிலையில் தொடர்ந்தும் ராஜஸ்தான் றோயல்ஸ் 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது.
19ஆவது ஓவரில் ஆவேஷ் கான் வைட்கள், நோபோலுடன் கொடுத்த 20 ஓட்டங்களே குஜராத் டைட்டன்ஸின் வெற்றிக்கு திருப்பு முனையாக அமைந்தது.
ராஜஸ்தான் றோயல்ஸினால் நிர்ணயிக்கப்பட்ட 197 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
கடைசிவரை மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப் போட்டியில் ராகுல் தெவாட்டியாவும் ராஷித் கானும் 7ஆவது விக்கெட்டில் 14 பந்துகளில் 38 ஓட்டங்களை விளாசியதன் மூலம் குஜராத் டைட்டன்ஸ் வெற்றியீட்டியது.
கடைசிக்கு முந்தைய பந்தில் தெவாட்டியா ரன் அவுட் ஆன போதிலும் கடைசிப் பந்தில் ராஷித் கான் வெற்றியை உறுதிசெய்தார்.
குஜராத் டைட்டன்ஸ் சார்பாக சாய் சுதர்மன், அணித் தலைவர் ஷுப்மான் கில் ஆகிய இருவரும் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி ஆரம்ப விக்கெட்டில் 50 பந்துகளில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
சாய் சுதர்மன் 29 பந்துகளில் 35 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழந்தார்.
குஜராத் டைட்டன்ஸ் 10 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 77 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை பெய்ததால் ஆட்டம் தடைப்பட்டது.
அப்போது டக்வேர்த் லூயிஸ் முறைமையின் பிரகாரம் குஜராத் டைட்டன்ஸ் 7 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்தது.
எனினும் சுமார் 5 நிமிடங்களில் மீண்டும் ஆட்டம் தொடர்ந்தபோது குஜராத் டைட்டன்ஸுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
11ஆவது ஓவரின் முதல் பந்தில் மெத்யூ வேடையும் 4ஆவது பந்தில் அபினாவ் மனோஹரையும் குல்தீப் சென் ஆட்டம் இழக்கச் செய்தார்.
மெத்யூ வேட் 4 ஓட்டங்களையும் அபினாவ் மனோகர் ஒரு ஓட்டத்தையும் பெற்றனர்.
அடுத்து களம் புகுந்த விஜய் ஷன்கர் 16 ஓட்டங்களை மாத்திரம் பெற்று ஆட்டம் இழந்தார்.
அணித் தலைவர் ஷுப்மான் கில் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 44 பந்துகளில் 6 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 72 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது யுஸ்வேந்த்ர சஹாலின் புத்திசாலித்தனமான வைட் பந்தில் சஞ்சு செம்சனினால் ஸ்டம்ப் செய்யப்பட்டு களம் விட்டு வெளியேறினார்.
அடுத்து களம் நுழைந்த ஷாருக் கான் அதிரடியாக 14 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழந்து சென்றார்.
கடைசி 2 ஓவர்களில் குஜராத் டைட்டன்ஸின் வெற்றிக்கு மேலும் 35 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
ஆவேஷ் கானின் அந்த ஓவரில் வைட்கள், நோ போல் உட்பட 20 ஓட்டங்கள் பெறப்பட கடைசி ஓவரில் குஜராத் டைட்டன்ஸின் வெற்றிக்கு மேலும் 15 ஓட்டங்கள் தேவைப்பட்டது.
கடைசி ஓவரை ஆவேஷ் கான் வீச அதனை ராஷித் கான் எதிர்கொண்டார். முதல் 4 பந்துகளில் 11 (4, 2, 4, 1) ஓட்டங்களை ராஷித் கான் பெற்றார்.
அடுத்த பந்தில் 3ஆவது ஓட்டத்தைப் பெற முயற்சித்த ராகுல் தெவாட்டியா 22 ஓட்டங்களுடன் ரன் அவுட் ஆனார். ஆனால் கடைசிப் பந்தில் பவுண்டறியை விளாசிய ராஷித் கான் வெற்றியை உறுதிசெய்தார்.
ராஷித் கான் 11 பந்துகளில் 4 பவுண்டறிகள் அடங்கலாக 24 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் குல்தீப் சென் 41 ஓட்டங்களுக்கு 3 விககெட்களையும் யுஸ்வேந்த்ர சஹால் 43 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ராஜஸ்தான் றோயல்ஸ் 50 ஓவர்களில் 3 விக்கெட்களை மாத்திரம் இழந்து 196 ஓட்டங்களைக் குவித்தது.
ரியான் பராக், அணித் தலைவர் சஞ்சு செம்சன் ஆகிய இருவரும் ஆக்ரோஷத்துடன் துடுப்பெடுத்தாடி சரமாரியாக ஓட்டங்களைக் குவித்தனர்.
ஆரம்ப வீரர் அதிரடி நாயகன் யஷஸ்வி ஜய்ஸ்வால் இன்றைய போட்டியிலும் பிரகாசிக்கத் தவறினார்.
இதற்கு முன்னர் விளையாடிய 4 போட்டிகளில் 39 ஓட்டங்களை மாத்திரம் பெற்ற யஷஸ்வி ஜய்ஸ்வால் இந்தப் போட்டியில் 24 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
ஜொஸ் பட்லர் 8 ஓட்டங்களுடன் 2ஆவதாக ஆட்டம் இழந்தார். (42 – 2 விக்.)
இந் நிலையில் ஜோடி சேர்ந்த சஞ்சு செம்சனும் ரியான் பராகும் 3ஆவது விக்கெட்டில் 78 பந்துகளில் 130 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் மொத்த எண்ணிக்கையை 172 ஓட்டங்களாக உயர்த்தினர்.
ரியான் பராக் 48 பந்துகளை எதிர்கொண்டு 5 சிக்ஸ்கள், 3 பவுண்டறிகளுடன் 76 ஓட்டங்களைக் குவித்தார்.
மறுபக்கத்தில் சஞ்சு செம்சன் 38 பந்துகளில் 7 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 68 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்த வருட ஐ பி எல் போட்டிகளில் சஞ்சு செம்சன் குவித்த 3ஆவது அரைச் சதம் இதுவாகும்.
ஷிம்ரன் ஹெட்மயர் 5 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 13 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் ராஷித் கான், உமேஷ் யாதவ், மோஹித் ஷர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.