போலி வெளிநாட்டு கடவுச்சீட்டை பயன்படுத்தி மலேசியா செல்ல முயன்ற இலங்கையர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நாட்டை விட்டு வெளியேற தடைவிதிக்கும் நீதிமன்ற உத்தரவும் அமுலில் உள்ளது.
எனவே தனிப்பட்ட தகவல்களை மாற்றி போலி வெளிநாட்டு கடவுச்சீட்டை அவர் தயார் செய்துள்ளார்.
யாழ்ப்பாணம் – சண்டிலிப்பாய் பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இன்று (10) காலை மலேசியாவின் கோலாலம்பூருக்கு செல்லவிருந்தார்.
அனுமதி வழங்கும் பணியை முடித்துவிட்டு பயணிகள் அமர்ந்திருந்தபோது, அதிகாரிகளுக்கு அவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தின் அடிப்படையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
கடந்த 2012ஆம் ஆண்டு படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குறித்த நபரை நாட்டை விட்டு வெளியேறுவதற்கு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபரை மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய குற்றப் புலனாய்வு திணைக்கள மனித கடத்தல் விசாரணை மற்றும் கடல்சார் குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைக்க குடிவரவு திணைக்கள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.