ஈரானின் தாக்குதலை எதிர்கொள்வது குறித்து ஆராய்வதற்காக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு முக்கிய அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்.

இஸ்ரேலிய பிரதமர் தனது யுத்தகால அமைச்சரவையை சந்திக்கவுள்ளார்.

இஸ்ரேலின் தாக்குதலில் ஈரானின் இராணுவதளபதிகள் கொல்லப்பட்டமைக்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் ஈரான் எந்தவேளையிலும் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுக்கலாம் என வெளியாகும் தகவல்களால் மத்திய கிழக்கில் பதட்டநிலை காணப்படுகின்றது.

எவ்வேளையிலும் இஸ்ரேல்மீதான தாக்குதல் இடம்பெறலாம் என அமெரிக்க அதிகாரிகள் சிபிஎஸ் நியுசிற்கு தெரிவித்துள்ளனர்.

ஈரான் 100க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் குரூஸ் ஏவுகணைகள் மற்றும் கண்டங்களிற்கு இடையிலான ஏவுகணைகளை பயன்படுத்தலாம் என அமெரிக்க அதிகாரிகள் சிபிஎஸ் நியுசிற்கு தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேலின் இராணுவ கட்டமைப்புகளை ஈரான் இலக்குவைக்கலாம் அதனை எதிர்கொள்வதற்கு இஸ்ரேலிற்கு மிகவும் சவாலான விடயமாக காணப்படும் எனவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் ஈரான் தாக்குதலை கைவிடுவதற்கான வாய்ப்புகளும் உள்ளன என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இன்று இந்த தாக்குதல் இடம்பெறலாம் என தெரிவித்துள்ள விடயமறிந்த வட்டாரங்கள் ஈரான் 150 குரூஸ் ஏவுகணைகளை பயன்படுத்தலாம் எனவும் தெரிவித்துள்ளன.

ஈரான் தனது தாக்குதல் திட்டத்தை மிகப்பெரியதாக்கியுள்ளது தனது ஏவுகணைகள் ஆளில்லா விமானங்களில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவை இலக்குகளை அடையவேண்டும் என கருதும் ஈரான் அதற்காகவே மிகப்பெரிய எண்ணிக்கையில் ஆளில்லா விமானங்கள் ஏவுகணைகளை அதிகளவில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Share.
Leave A Reply