ஐக்கிய நாடுகள் சபையில் முழுமையான அங்கத்துவம் பெறுவதற்கான முயற்சிகளை பலஸ்தீனம் மீண்டும் ஆரம்பித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையில் தற்போது ‘பார்வையாளர் நாடு’ எனும் அந்தஸ்தில் பலஸ்தீனம் உள்ளது.
ஐ.நாவில் முழுமையான அங்கத்துவம் பெறுவதற்கான பலஸ்தீனத்தின் 2011 ஆம் ஆண்டு விண்ணப்பத்தை மீளாய்வு செய்யுமாறு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரெஸுக்கு ஐ.நாவுக்கான பலஸ்தீன தூதுவர் ரியாத் மன்சூர் கடந்த செவ்வாய்க்கிழமை (02) எழுதிய கடிதத்தில் கோரியுள்ளார்.
140 நாடுகள் ஆதரவு
“பலஸ்தீனத்தில் இரு நாடுகளை ஸ்தாபிப்பதற்கு சர்வதேச சமூகம்தான் 1947 ஆம் ஆண்டில் தீர்மானித்தது. பலஸ்தீனத்துக்கு ஐ.நாவின் அங்கத்துவத்தைப் பெறும் நடவடிக்கையை பலஸ்தீனர்களுடன் இணைந்து பூர்த்தி செய்வது சர்வதேச சமூகத்தின் கடமையாகும்” என தூதுவர் ரியாத் மன்சூர் கூறியுள்ளார்.
காஸா நிலைமைகள் தொடர்பில் ஏப்ரல் 18 ஆம் திகதி பாதுகாப்பு சபை கூடவுள்ள நிலையில், இக்கடிதம் தொடர்பில் அச்சபை செயற்படும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
ஐ.நா. பாதுகாப்புச் சபையின் சுழற்சிமுறை தலைமைப் பதவியை தற்போது மால்டா வகிக்கிறது. இந்நிலையில், தூதுவர் மன்சூரின் கடிதம் பாதுகாப்புச் சபைக்கு கிடைத்துள்ளதாகவும், அது சபையின் அங்கத்தவர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் மால்டா தெரிவித்துள்ளது.
22 நாடுகள் அங்கம் வகிக்கும் அரபு லீக், 57 நாடுகள் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, 120 நாடுகள் அங்கம் வகிக்கும் அணிசேரா இயக்கம் ஆகியனவும் பலஸ்தீனத்தின் முழு அங்கத்துவ விண்ணப்பத்துக்கு ஆதரவு தெரிவித்து ஐ.நா. செயலாளர் நாயகத்துக்கு கூட்டாக கடிதம் அனுப்பியுள்ளன.
‘’ஐக்கிய நாடுகளில் அங்கம் வகிக்கும் 140 நாடுகள் இப்போது பலஸ்தீன நாட்டை அங்கீகரித்துள்ளன என்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வர விரும்புகிறோம்’’ என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐ.நா. அங்கத்துவம்
ஐக்கிய நாடுகளில் தற்போது 193 நாடுகள் முழுமையான அங்கத்தவர்களாக உள்ளன. பலஸ்தீனம், வத்திகான் ஆகியன பார்வையாளர் அந்தஸ்துள்ள நாடுகளாக உள்ளன.
புதிதாக ஒரு நாடு ஐ.நாவில் முழுமையான அங்கத்துவம் பெற வேண்டுமாயின் அதற்கான விண்ணப்பம் முதலில், ஐ.நா. பாதுகாப்புச் சபையினால் புரிந்துரைக்கப்பட வேண்டும்.
அதன்பின் ஐ.நா. பொதுச் சபையில் மூன்றில் இரண்டு பங்கு நாடுகளால் அங்கீகரிக்கப்பட வேண்டும். பொதுவாக, பாதுகாப்புச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமாயின் 15 அங்கத்துவ நாடுகளில் குறைந்தபட்சம் 9 நாடுகள் ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.
அத்துடன் பாதுகாப்புச் சபையின் 5 நிரந்தர அங்கத்துவ நாடுகளான பிரிட்டன், பிரான்ஸ், ரஷ்யா, சீனா, அமெரிக்கா ஆகியனவற்றில் எந்தவொரு நாடும் எதிர்த்து வாக்களிக்கக் கூடாது.
பலஸ்தீனத்துக்கு ஐ.நா.வில் முழு அங்கத்துவம் வழங்குமாறு பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் 2011 ஆம் ஆண்டு கோரிக்கை விடுத்தார். ஐ.நா.வில் முழு அங்கத்துவத்துக்கான இத்திட்டம் ‘பலஸ்தீன் 194’ என குறிப்பிடப்படுகிறது.
பலஸ்தீனத்தின் 2011 ஆண்டு விண்ணப்பம் ஒருபோதும் பாதுகாப்புச் சபையினதோ பொதுச் சபையினதோ வாக்கெடுப்புக்கு வரவில்லை.
அவ்விண்ணப்பம் தொடர்பாக ஆராய்வதற்கு பாதுகாப்புச் சபை குழுவொன்றை நியமித்திருந்தது. பலஸ்தீனத்தின் விண்ணப்பத்துக்கு பாதுகாப்புச் சபையில் போதிய ஆதரவு கிடைக்கவில்லை.
2012 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகளில் ‘பார்வையாளர் நாடு’ எனும் அந்தஸ்தை பலஸ்தீனம் பெற்றது. அதற்கு முன், ஒரு ‘பார்வையாளர் அமைப்பு’ என்ற நிலையில் பலஸ்தீனம் இருந்தது.
6 மாதங்கள் பூர்த்தி
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையில் ஒக்டோபர் 7 ஆம் திகதி ஆரம்பித்த யுத்தத்துக்கு இன்று ஏப்ரல் 7 ஆம் திகதியுடன் 6 மாதங்கள் பூர்த்தியாகுகின்றன.
ஹமாஸின் தாக்குதல்களில் இஸ்ரேலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டு, சுமார் 250 பேர் பணயக் கைதிகளாக்கப்பட்டதை அடுத்து காஸாவில் இஸ்ரேல் நடத்தும்
இந்த யுத்தத்தினால் காஸாவில் சுமார் 33,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். காஸாவில் வைத்தியசாலைகள், அம்பியூலன்ஸ்கள், மனிதாபிமான தொண்டுப் பணியாளர்களின் வாகனங்களும் இஸ்ரேலியப் படைகளினால் தாக்கப்பட்டுள்ளன.
இதனால், வழக்கமாக இஸ்ரேலுக்கு ஆதரவாக இருக்கும் அமெரிக்கா முதலான மேற்கு நாடுகளும் தற்போது இஸ்ரேலுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றன.
பிரிட்டன், பிரான்ஸ், ஸ்பெய்ன் உட்பட பல ஐரோப்பிய நாடுகள், பலஸ்தீன நாட்டை தாம் அங்கீகரிப்பதற்கான சாத்தியங்களை வெளிப்படுத்தியுள்ளன.
அமெரிக்காவின் வீட்டோ
எனினும், இம்முறையும் பலஸ்தீனத்தின் முழு அங்கத்துவ விடயம், பாதுகாப்புச் சபைக்கு அப்பால் செல்லுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஏனெனில், இஸ்ரேலின் தற்போதைய நடவடிக்கைகளுடன் அமெரிக்காவுக்கு முரண்பாடுகள் இருப்பினும்கூட, இஸ்ரேல் விரும்பாத எதனையும் அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தின் மூலம் தடுக்க முடியும்.
இஸ்ரேல் தற்போது இரு நாடுகள் தீர்வை நிராகரிக்கின்றது. பலஸ்தீன நாட்டை ஒருதலைபட்சமாக அங்கீகரிப்பதற்கு எதிராக இஸ்ரேலிய பாராளுமன்றம் கடந்த பெப்ரவரி மாதம் வாக்களித்தது.
இஸ்ரேலின் அங்கத்துவம்
பிரித்தானிய ஆணை அதிகாரத்துக்கு உட்;பட்டிருந்த பலஸ்தீனத்தை இரண்டாகப் பிரித்து, யூதர்களுக்கு ஒரு நாடும், பலஸ்தீன அரேபியர்களுக்கு ஒரு நாடும் உருவாக்குவதற்கான 181 ஆம் இலக்க தீர்மானத்துக்கு ஆதரவாக 1947 நவம்பர் 29 ஆம் திகதி ஐ.நா. பொதுச் சபை வாக்களித்தது.
அப்போதைய பலஸ்தீனத்தின் 11,100 சதுரகிலோமீற்றர் (42 சதவீதம்) பரப்பளவில் அரேபியர்களுக்கான நாடொன்றும், 14,100 சதுரகிலோமீற்றர் (56 சதவீதம்) பரப்பளவில் யூதர்களுக்கான நாடொன்றும் உருவாக்குவதற்கு இத்தீர்மானம் பரிந்துரைத்தது. ஜெருஸலேம், பெத்லஹேம் உள்ளடங்கிய எஞ்சிய 2 சதவீத பகுதி சர்வதேச வலயமாக இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அப்போது பலஸ்தீனத்தில் யூதர்களைவிட பலஸ்தீன அரேபியர்களின் எண்ணிக்கை சுமார் இரு மடங்காக இருந்தநிலையில் அவர்களுக்கு 42 சதவீதமான நிலப்பரப்பு மாத்திரம் ஒதுக்கப்பட்டதை பெரும்பாலான அரேபியர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
பலர், எந்த அளவிலும் அங்கு யூத நாடொன்று உருவாக்கப்படுவதை விரும்பவில்லை. அதனால், பலஸ்தீன அரேபியர்கள் ஐ.நா.வின் மேற்படி தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஆனால், மறுபுறம் யூதர்கள் தயக்கத்துடன் அத்திட்டத்தை ஏற்றுக்கொண்டனர். ‘இப்போது கிடைத்த நாட்டை ஏற்றுக்கொள்வோம், பின்னர் அதை விஸ்தரித்துக் கொள்ளலாம்’ என்பது அவர்களின் திட்டமாக இருந்தது.
1948 மே 14 ஆம் திகதி இஸ்ரேல் சுதந்திரப் பிரகடனம் செய்தது. ஐ.நா. பாதுகாப்புச் சபை 1949 மார்ச் 4 ஆம் திகதி 69 ஆவது தீர்மானத்தின் மூலம் ஐ.நா.வில் இஸ்ரேலுக்கு அங்கத்துவம் அளிக்க ஒப்புதல் அளித்தது. 1949 மே 11 ஆம் திகதி ஐ.நா. பொதுச் சபையின் 273 ஆவது தீர்மானத்தின் மூலம் ஐ.நாவின் 59 ஆவது அங்கத்துவ நாடாக இஸ்ரேல் இணைந்தது.
ஐ.நா.வில் பலஸ்தீனம்
ஐ.நா. பொதுச் சபையின் செயற்பாடுகளில் ஒரு பார்வையாளர் ‘அமைப்பாக’ பங்குபற்ற பலஸ்தீன விடுதலை இயக்கத்துக்கு 1974 நவம்பர் 22 ஆம் திகதி, 3237 ஆம் இலக்க தீர்மானம் மூலம் ஐ.நா. பொதுச் சபை அழைப்பு விடுத்தது.
1988 நவம்பர் 15 ஆம் திகதி அல்ஜீரியாவின் தலைநகர் அல்ஜீயர்ஸில் வைத்து, பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவர் யஸீர் அரபாத், பலஸ்தீன சுதந்திரத்தைப் பிரகடனப்படுத்தினார். அதற்குமுன் பலஸ்தீன தேசிய பேரவையும் இப்பிரகடனத்தை ஏற்றுக்கொண்டிருந்தது.
பலஸ்தீன தேசிய பேரவையினால் பலஸ்தீன நாடு பிரகடனப்படுத்தப்பட்டதை ஐ.நா. பொதுச் சபை 1988 டிசெம்பர் 15 ஆம் திகதி, 43/177 ஆம் இலக்கத் தீர்மானம் மூலம் அங்கீகரித்தது. ஐ.நா. முறைமையில் பலஸ்தீன விடுதலை இயக்கம் என்பதற்கு பதிலாக பலஸ்தீனம் என்ற சொல்லை பயன்படுத்துவதையும் இத்தீர்மானம் அங்கீகரித்தது.
1989 ஏப்ரலில் யஸிர் அரபாத்தை, பலஸ்தீன ஜனாதிபதியாக பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் மத்திய பேரவை தெரிவு செய்தது.
பலஸ்தீனத்துக்கு ஐ.நா. பொதுச் சபையில் ‘பார்வையாளர் நாடு’ எனும் அந்தஸ்து, பொதுச் சபையில் 2012 நவம்பர்29 ஆம் திகதி 67/19 எனும் தீர்மானத்தின் மூலம் வழங்கப்பட்டது.
பிரித்தானிய ஆணை அதிகாரத்துக்கு உட்பட்ட பலஸ்தீனத்தில் இரு நாடுகளை ஸ்தாபிப்பதற்கான, ஐ.நா. பொதுச் சபையின் 181 ஆம் இலக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் 65 ஆண்டு நிறைவு தினத்தில் ‘பார்வையாளர் நாடு’ எனும் அந்தஸ்து அளிக்கப்பட்டது.
(ஆர்.சேதுராமன்)