நம்முடைய உடல் மொழியை நாம் தெரிந்து கொண்டால், நம் உடலை பற்றி சரியாக கணிக்க முடியும்.
மன அழுத்தம் ஏற்பட்டு, வாழ்வில் எந்த விஷயத்திலும் முடிவுகள் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
வாசகர்களே, பிராணாயாமம் யோகம் என்பது ஒரு கணிதம் ஆகும். கணிதம் என்பது என்றும் மாறாது. இந்த பிராணாயாமம் என்பது நமக்கு எப்படி உதவி செய்யும் என்பதை பார்ப்போம். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஐசக் நியூட்டன், கணித மேதை ராமானுஜம் ஆகியவர்கள் ஆல்பா நிலைக்கு வந்துதான் சாதனைகள் படைத்தனர் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
பொதுவாக யோகம் என்றால் உடல் மனம், உயிரை இணைத்தல் அல்லது உள்வாங்குதல் என்று பொருள். நம்முடைய உடல் மொழியை நாம் தெரிந்து கொண்டால், நம் உடலை பற்றி சரியாக கணிக்க முடியும்.
உதாரணத்திற்கு நாம் உற்சாகமாக இருந்தால், அதே நேரம் நமது மூச்சை கவனித்தால், உடல் செல்கள் நடனமாடுவதை உணரலாம். ஆனால் நாம் சோகமாக இருக்கும்போது நமது செல்களும் சோகமாக இருக்கும்.
சோகமாக இருக்கும்போது, அதே நிலை தொடர்ந்தால், மன அழுத்தம் உருவாகும். இதனால் நம் உடலில் வளர்சிதை மாற்றம் (மொட்டபாலிசம்) சரிவர இயங்காது. அந்த நேரத்தில் உடலில் நச்சுக்கள் உருவாகும்.
நச்சுக்கள் என்பது செல்கள் உடைதல் என்று பொருள். அதாவது 4 ஆக்சிஜன் அணுக்கள் இரண்டாக உடைய ஆரம்பிக்கும். இதனால் இருக்கின்ற செல்கள் வேலை செய்யாமல், மற்ற புதிய செல்களையும் உருவாக்காது.
இதனால் உயிரகந்தடுப்பிகள் (Antioxidant) உருவாக்காது. இதன் விளைவு தான் நமக்கு கோபம், மறதி, மன அழுத்தம் ஏற்பட்டு, வாழ்வில் எந்த விஷயத்திலும் முடிவுகள் எடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது தான் முதல் நிலை ஆகும்.
இதன் காரணமாக, இரண்டாம் நிலையாக உடல்வலி, நடந்தால் படி ஏறினால் மூச்சு திணறல் ஏற்படும். இதனால் மூன்றாம் நிலையாக ஜீரண மண்டலம் பாதிக்கப்பட்டு வயிற்று புண் (அல்சர்) ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை குறைபாடு போன்ற பிரச்சினைகள் நம்மை தேடி வரும்.
அடுத்து நான்காம் நிலையாக உடலில் உள்ள ராஜ உறுப்புக்களான, சிறுநீரகங்கள், கண்கள், நுரையீரல், கல்லீரல், இருதயம் போன்றவை பாதிக்கப்படுகிறது.
எனவே, முதல் நிலை வரும் போதே உடற்பயிற்சி பிரணாயாமம் செய்தால் நாம் இந்த பிரச்சினைகளில் இருந்து தப்பித்து கொள்ளலாம்.
எனவே நாம் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு வீதம் இயக்கினால் நமது ஆயுள் கூடும் என்பது சித்தர்களின் கூற்று ஆகும். இந்த நிலையில் நாம் சுவாசித்தால், 24 மணி நேரத்திற்கு 21600 மூச்சுக்கள் விடுவோம்.
அது எப்படி உருவாகிறது என்பதை கீழ்க்காணும் அட்டவணையில் பார்ப்போம்…
மூச்சு செயல்படும் விதத்தின் நேரம் மற்றும் மூச்சு எண்ணிக்கை:
மூலாதாரம்:
6.00 முதல் 6.40 மணி வரை
600 எண்ணிக்கை
சுவாதிஷ்டானம்:
6.40 முதல் 1.20 மணி வரை
6000 எண்ணிக்கை
மணிபூரகம்:
1.20 முதல் 8.00 மணி வரை
6000 எண்ணிக்கை
அனாகதம்:
8.00 முதல் 2.40 மணி வரை
6000 எண்ணிக்கை
விசுக்தி:
2.40 முதல் 3.46 மணி வரை
1000 எண்ணிக்கை
ஆக்கினை:
3.46 முதல் 4.53 மணி வரை
1000 எண்ணிக்கை
சகஸ்ராதாரம்:
4.53 முதல் 6.00 மணி வரை
1000 எண்ணிக்கை
இது மனிதர்களுடைய மூச்சு கணக்கு என்றால், ஐந்தறிவு படைத்த விலங்குகள் எப்படி உயிர் வாழ்கிறது என்பதை ஆராய்ந்து அதன் ஆயுட்காலத்தை கண்டுபிடித்தார்கள்
(1 நிமிடத்திற்கு)
விலங்குகளின் மூச்சு எண்ணிக்கை மற்றும் ஆயுள் காலம்:
முயல்:
38-39 மூச்சு எண்ணிக்கை / 8 ஆண்டு
புறா:
36-37 மூச்சு எண்ணிக்கை / 8-9 ஆண்டு
குரங்கு:
31-32 மூச்சு எண்ணிக்கை / 13-14 ஆண்டு
நாய்:
28-29 மூச்சு எண்ணிக்கை / 20-21 ஆண்டு
குதிரை:
18 மூச்சு எண்ணிக்கை / 48-50 ஆண்டு
யானை:
11-12 மூச்சு எண்ணிக்கை / 160 ஆண்டு
சர்ப்பம்:
7-8 மூச்சு எண்ணிக்கை / 250 ஆண்டு
ஆமை:
3-4 மூச்சு எண்ணிக்கை / 450 ஆண்டு
பேராசிரியர்கள் கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்
இதிலிருந்து நமக்கு என்ன தெரிகிறது என்றால், வேகமாக சுவாசிக்கும் பிராணிகளின் வாழ்நாள் குறையும் என்பதும், மெதுவாக சுவாசிக்கும் பிராணிகளின் வாழ்நாள் கூடும் என்பதும் புலனாகிறது.
மனிதர்களை பொறுத்தவரை, ஒரு நிமிடத்திற்கு 15 சுவாசம் செய்தால் 120 ஆண்டுகள் உயிர் வாழலாம். ஆனால் நாம் இந்த யோகத்திற்கு சிறு வயதில் இருந்தே வரவில்லை. நடுத்தர வயதில்தான் உணர்ந்து வருகிறோம். எனவே நாம் விட்ட மூச்சுக்களை பிடிக்க வேண்டும் என்றால் இந்த மூச்சு பயிற்சி மற்றும் நாடி சுத்தி பிராணாயாமம் செய்து 100 வயது வரையாவது வாழலாம். ஆனால் கர்மா என்கின்ற விதி நம்மை விடாது. அது மிகவும் ஆபத்தானது. நம்மை அச்சப்பட வைத்து தேவையற்ற பயத்தை ஏற்படுத்திவிடும். நமது இந்த அச்ச உணர்வில் இருந்து விடுபட வேண்டும் என்றால், நமது சுவாசம் மெதுவாக இருக்க வேண்டும். அப்படி செய்தால்தான் ஆயுள் அதிகம் ஆகும். எனவே நாம் முறையாக சுவாசித்தால் எல்லாம் முறையாக நடைபெறும். இல்லையென்றால் தேவையற்ற குழப்பங்களுக்கு வழி வகுக்கும்.
பொதுவாக நாம் ஆக்சிஜன் வாயுவை மற்ற வாயுக்களோடு உள்ளே இழுத்து நச்சு வாவுவான கார்பன்-டை-ஆக்சைடை மற்ற வாயுக்களோடு வெளிவிடுகிறோம். ஆனால் தாவரங்களை பார்த்தால் நமக்கு நேர்மாறாக கார்பன்-டை-ஆக்சைடு உள்ளே இழுத்து, ஆக்சிஜனை வெளிவிடும். இந்த முறை சூரியன் மறைகின்ற வரை நடக்கும்.
மாலை, சூரியன் மறைவுக்கு பிறகு தாவரங்கள், நம்மை போல, ஆக்சிஜனை உள் இழுத்து, நச்சு வாயுவை வெளிவிடும். எனவேதான் நம் முன்னோர்கள் பகலில் மரங்களின் அடியில் படுக்கலாம். இரவில் படுக்கக்கூடாது என்று சொன்னார்கள். அதே போல் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பிராண சக்தி குறைவாக இருக்கும்.
எனவே தான் நம் முன்னோர்கள் கூட்டம் வரும் விஷேச நாட்களில், மாவிலை தோரணம் கட்டுவார்கள். காரணம், என்னவென்றால், மாவிலை நச்சுவாயுவை உள் இழுத்து, தன்னிடம் உள்ள பிரோஹிஸ்பிடின் என்ற வாயுவை காற்றில் பறக்க விடும். இது, காற்றில் கலந்து உள்ள நோய் கிருமிகளையும் பாக்டீரியாக்களையும் அழித்துவிடும். மேலும், மாவிலைக்கு பக்தி மார்க்கதிலே, துர்தேவதைகளை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கும் சக்தி உள்ளது என்று கூறுவார்கள்.
பொதுவாக நாம் சுவாசத்தை உள் இழுக்கும் போது பிராண சக்தி மட்டும் இன்றி, பிரபஞ்ச சக்தியையும் சேர்த்து தான் உட்சுவாசம் செய்கிறோம். எனவே பிராண சக்திக்கு கட்டுப்பாடு எதுவும் இல்லை. அது நம் உடலின் ஒவ்வொரு செல்லுக்கும் ஊடுறுவி செல்கிறது. எனவே தான் நாம் மூச்சை மெதுவாக உள்இழுத்து மெதுவாக வெளிவிட வேண்டும் என்று கூறுகிறோம்.
எனவே, நாடி சுத்தி பிராணாயாமத்தை அதிகாலை எழுந்தவுடன் செய்ய வேண்டும். இரவு படுக்கும்முன், நாளை காலை பயிற்சி செய்ய வேண்டும் என்று மனதிற்கு கட்டளை இட்டால், அதிகாலை எழும்போதே பயிற்சி செய்ய வேண்டும் என்கின்ற நினைப்பு வரும். நம் மனதை விட நமக்கு ஒரு விஷயத்தை நினைவூட்டும் கருவி இந்த உலகத்தில் வேறு எதுவும் இல்லை.
மனம் என்பது உயிரின் படர்கை நிலை என்பதை வேதாந்திரி மகரிஷி மிகவும் எளிதாக எல்லோருக்கும் புரியும்படி கூறுகிறார். எனவே நாம் நமது மனக் கதவை திறக்க வேண்டும் என்றால் இந்த பயிற்சி அவசியம் ஆகிறது.
உன் மனக் கதவை திறந்த பின், நீ இறைவனிடம் கேட்க வேண்டியது எதுவும் இல்லை. ஏனெனில் எனக்கு தேவை எதுவும் இல்லை. அப்படி என்றால் என் வாழ்க்கையையும் குடும்பத்தையும் நடத்துவதற்கு பொருள்வேண்டமா என்கின்ற கேள்வி எழும். மனக் கதவை திறந்து விட்டால், உனக்கு தேவையானதை எப்போது எங்கு, யார் மூலமாக, எவ்வளவு எப்படி கொடுக்க வேண்டும் என்பது இறைவனுக்கு தெரியும்.
ஏன் இப்படி குறிப்பிடுகிறோம் என்றால் நாம் தாயின் வயிற்றில் கருவாக உருவாகும் போதே அந்த நொடி பொழுதினிலே நாம் யாருக்கு பிறக்க வேண்டும் என்னவாக பிறக்க வேண்டும் எங்கு பிறக்க வேண்டும் என்கின்ற எட்டு கட்டளைகள், கருவிலே கர்மவினை பதிவுகளாக பதிவாகிறது. எனவே அது அது நடக்க வேண்டிய நேரத்தில் நடக்கும் என்பதை நாம் ஏற்று கொள்ள வேண்டும்.
எனவே நாடி சுத்தி பிராணாயாமம் என்பது மனதை அறியும் ஒரு பயிற்சி. நம் மனதில் இருந்து எழுகின்ற எண்ணங்கள் மூலமாக வருகின்ற செயல்களின் விளைவு ஒன்று இன்பமாகவோ அல்லது துன்பமாகவோ அமையும்.
இன்பம் அதிகமாக வரும்போது நமக்கு இன்பத்தை மேலும் பெருக்கி கொள்ள வேண்டும் என்ற எண்ணங்கள் தோன்றும். அதே சமயம் அந்த இன்பமே நமக்கு அதிகமாகும்போது அதுவே நமக்கு துன்பத்தை கொடுக்கும். இப்போது இன்பத்தை பெருக்கும் எண்ணங்கள் மறைந்து துன்பத்தை போக்கி கொள்ள வேண்டிய எண்ணங்கள் தோன்றும்.
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் மனதில் உதிக்கின்ற எண்ணங்கள் மூலமாக வரும் விளைவு ஒன்று இன்பமாகவோ அல்லது துன்பமாகவோ அமையும். இருக்கின்ற ஒரு மனம் எப்படி இன்பம் மற்றும் துன்பமாக இரட்டை வேடம் போடுகிறது. என்பதை பற்றி நாம் சிந்திப்பது இல்லை.
அப்படி என்றால் என் மனதில் உதிக்கின்ற எண்ணங்கள் இன்பத்தை மட்டும் கொடுக்க வேண்டும் துன்பத்தை கொடுக்கக் கூடாது என்று மனதிற்கு கட்டளை இட்டால் போதுமா என்றால் போதாது.
துன்பமே இல்லாத இன்பம் எங்கு உள்ளது என்பதை ஆராய்சி செய்ய வேண்டும். அந்த தன்பம் இல்லாத இன்பத்தை நாம் வெளியில் தேடினால் கிடைக்காது. அது நமக்கு உள்ளேயே உள்ளது என்பதை நாம் உணர வேண்டும்.
இதற்கு நம் ஆராய்ச்சி அகம் நோக்கிய பயணம் மேற்கொள்ள வேண்டும். அதற்கு, புறஉல கோடு தொடர்பில் இருக்கின்ற நமது ஞான இந்திரியங்கள் என்கின்ற தோல், நாக்கு, மூக்கு, கண், காது இந்த ஐந்து புலன்களை புற உலகோடு உள்ள தொடர்பை துண்டித்து அக உலகிற்கு திருப்பி விட வேண்டும். இந்த மடை மாற்றும் வித்தையை பற்றி ஆராய்ச்சி செய்வோம்.