நைமா ராபிகுல் என்ற பலஸ்தீன பெண் தனது டிக்டொக் சமூக வலைத்தள காணொளி மூலம் அரபுலக சர்வாதிகாரிகளை கடுமையாக சாடியுள்ளார். அமெரிக்க – ஐரோப்பிய மற்றும் இஸ்ரேலிய தரப்பினரால் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ள காஸா பகுதி மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
கண்ணீருடன் அவர் வெளியிட்டுள்ள அந்தக் காணொளியில், சவூதி அரேபியா, ஜோர்தான், எகிப்து, ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரேன், குவைத் மற்றும் ஏனைய சர்வாதிகாரிகளே” என்று விழித்துள்ளதோடு“நீங்கள் எல்லோருமே மனிதப் பிறவிகள் தானா? உங்களுக்கு இதயமே இல்லையா? வெட்கம் இல்லையா? சுய கௌரவம் என்பது உங்களுக்கு பெயரளவுக்கு கூட இல்லையா? அல்லாஹ் மீது உங்களுக்கு அச்சம் கூட இல்லையா?” என்று அடுக்கடுக்கான கேள்விகளையும் முன் வைத்துள்ளார்
மத்திய கிழக்கின் ஆட்சிப் பீடங்களை அலங்கரிக்கும் வறண்ட உள்ளம் கொண்டவர்கள் 1914 ஜூலை 28க்கும் 1918 நவம்பர் 11க்கும் இடைப்பட்ட முதலாவது உலக மகா யுத்த காலப்பகுதியில் ஆட்சி பீடங்களில் அமர்த்தப்பட்டவர்கள்.
அதுவரை மத்திய கிழக்கு பிராந்தியம் துருக்கியப் பேரரசின் கீழ் இருந்தது. பிரித்தனியா, பிரான்ஸ் ஆகிய நாடுகளால் துருக்கிப் பேரரசு வீழ்த்தப்பட்டு இந்தப் பிராந்தியம் அவர்களது காலணித்துவ அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது.
இந்த இரண்டு காலணித்துவ ஆதிக்க சக்திகள் தான் மத்திய கிழக்கையும் வட அபிரிக்காவையும் துண்டு துண்டாகப் பிரித்தன. 493 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட 21 நாடுகள் இங்குள்ளன.
இஸ்லாம் என்பது பள்ளிவாசல்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற தெளிவான செய்தியுடனும் இந்தப் பிரதேசங்களின் ஆட்சியாளர்கள் தமது நலன்களைக் கருத்தில் கொண்டு மட்டுமே செயற்பட வெண்டும் என்ற நிபந்தனையுடனும் ஆட்சிப்பீடங்களை அலங்கரிப்பதற்கான அரச குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டன.
அடக்கி ஒடுக்கப்பட்ட மக்கள் குரல் அற்றவர்களாக்கப்பட்டனர். வறுமையும் அறிவீனமும் தான் அவர்களுக்கு மிஞ்சியது. இந்த சர்வாதிகார ஆட்சியாளர்கள் ஊழல் பேர்வழிகள். தமக்கு வழங்கப்பட்ட நாடுகளின் செல்வங்களையே அவர்கள் சூறையாடத் தொடங்கினர்.
2011 அரபு வசந்தத்தைப் போலவே அந்தக் காலத்தில் இருந்தே அவர்கள் மக்கள் எழுச்சியை நசுக்கத் தொடங்கினர். இந்தப் பிராந்தியத்துக்கு எதிரான அமெரிக்க, ஐரோப்பிய, இஸ்ரேல் கூட்டணியின் நிகழ்ச்சித் திட்டங்களை அமுல் செய்தவாறே அவர்கள் மக்கள் எழுச்சிகளையும் நசுக்கி வந்தனர்.
உதாரணத்துக்கு மேலைத்தேசத்துக்கு ஆதரவான ஜோர்தானின் முன்னாள் மன்னர் ஹ{ஸைன் “புத்திசாலித்தனமான குட்டி மன்னன்” என்று தனது எஜமானர்களால் செல்லமாக அழைக்கப்பட்டவர். இவர் 1970 செப்டெம்பரில் பலஸ்தீன விடுதலை இயக்கத்தின் முன்னாள் தலைவர் யசீர் அரபாத் செய்த சில காரியங்களை சாட்டாக வைத்து 30ஆயிரம் பலஸ்தீனர்களை கொன்று குவித்தார்.
பல தசாப்தங்களுக்கு முன்னர் அல்ஜீரியாவில் இம்பெற்ற சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலில் முஸ்லிம் கட்சியான எப்.ஐ.எஸ் கட்சிக்கு மக்கள் அமோக ஆதரவு வழங்கினர். ஆனால் பிரான்ஸ் உடனடியாகத் தலையிட்டு அங்கு மலரத் தொடங்கிய இஸ்லாமிய ஜனநாயகப் போக்கு சக்திகள் ஆட்சிபீடம் ஏறுவதை தடுத்தது.
1960 களில் மத்திய கிழக்கு பிராந்தியத்தின் பெற்றோலிய வளங்கள் கண்டு பிடிக்கப்பட்டதோடு வளைகுடாவின் பாலைவன நாடோடிக் கும்பல்களின் தலைவர்கள் முக்கியஸ்தர்களாக மாறத்தொடங்கினர்.
ஏதோ ஒரு வகையில் இந்த ஆட்சியாளர்களும் அவர்களுக்கு கிடைத்த வளங்களும் அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன.
சவூதி அரேபியாவை பொறுத்தமட்டில் அந்த காலப் பகுதியில் துருக்கிப் பேரரசின் ஆளுநராக இருந்த ஷரீப் ஹ{ஸைன் என்பவர் பலஸ்தீனத்தில் இஸ்ரேலிய நாடு ஸ்தாபிக்கப்பட வேண்டும் என்ற பிரித்தானியாவின் யூத முன்மொழிவை மிக வன்மையாக எதிர்த்தார்.
அப்போதுதான் அவரை எதிர்க்கவும் தீர்த்துக் கட்டவும்; ரியாத்தில் மையம் கொண்டிருந்த அன்றைய பழங்குடி தலைவர் அல் சவூதை பிரித்தானியா தெரிவு செய்தது.
அவருக்கு தேவையான பணம், ஆயுதம் ஆள்பலம் எல்லாமே வழங்கப்பட்டன. இந்தக் குழு தான், துருக்கிப் பேரரசின் ஆளுநராக இருந்த ஷரீப் ஹ{ஸைனையும அவரது படைகளையும் துரத்தி அடித்தனர். அதன் பிறகு தான் ‘சவூதிகளின் இல்லம்’ ஸ்தாபிக்கப்பட்டு, அந்தத் தலைமுறைதான் தற்போது வரை ஆட்சிப்பீடத்தையும் தக்க வைத்துள்ளது.
மக்கா மற்றும் மதீனா
மக்கா மற்றும் மதீனா ஆகிய புனித தலங்களின் கட்டுப்பாடு, தொடர்ச்சியாகக் கிடைக்கப் பெற்ற பெற்றோலிய செல்வம் என்பன இந்த சவூதிகளின் இல்லத்தை அதிகாரத்தின் கேந்திர நிலையமாக மாற்றின.
கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டு கழிந்துள்ள நிலையில் இந்த சவூதிகளின் இல்லம் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இஸ்ரேல் ஆகிய தீயசக்திகளின் “செய்மதி தேசமாக” மாறியுள்ளது.
சவூதி அரேபியாவையும், குவைத்தையும் ஐக்கிய அரபு இராச்சியத்தையும் மேற்குலம் தனது சதித் திட்டத்துக்கு துணையாக அழைத்துக் கொண்டது.
ஜனநாயக ரீதியாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட முர்ஷியை பதவியில் இருந்து கவிழ்த்தி, எகிப்தின் ஆட்சி பீடத்தை அலங்கரிக்கும் இராணுவ சர்வாதிகாரியான அப்துல் பத்தாஹ் அல் சிசியை பதவியில் அமர்த்த மேற்படி மூன்று நாடுகளும் இணைந்து சுமார் 11 பில்லியன் டொலரை செலவிட்டுள்ளதாக மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
பலஸ்தீனத்தில் இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இனப்படுகொலைகளுக்கு அதே ஆட்சியாளர் ஆதரவு வழங்கி வரும் நிலையில், ஜனநாயகம், சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளுக்கான காவலர்களாக தம்மை அழைத்துக் கொள்ளும் ஐரோப்பிய ஒன்றியம் எகிப்துக்கு 7.4பில்லியன் யூரோ பெறுமதியான நிவாரண உதவிப் பொதியை வழங்கியுள்ளது.
1979இல் முன்னாள் சோவியத் யூனியன் சிதைவுக்குப் பின்னர் அமெரிக்கா இஸ்ரேலுக்கு இராஜதந்திரம் உள்ளிட்ட அனைத்து வகையான உதவிகளையும் வழங்கி பக்கபலமாக இருந்து வருகின்றது.
இவ்வாறான நிலையில் சவூதி அரேபிய சமூகத்தை மேலைத்தேச மயப்படுத்தும் திட்டத்தை இளவரசர் சல்மான் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் ஒருவகை மிதவாத இஸ்லாம் பின்பற்றப்படுமென அவர் அறிவித்துள்ளார். ஆனால் ஒரேயொரு வகை இஸ்லாம் தான் உள்ளது. அது நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் ஊடாக முழு மனித குலத்துக்கும் வழங்கப்பட்டதாகும்.
இதனிடையே ஜெரூஸலத்தில் உள்ள சியோன் பாரம்பரிய மையத்தின் நண்பர்கள் என்ற அமைப்பின் ஸ்தாபகர் மைக் இவான்ஸ் என்பவர் விடுத்துள்ள அறிவித்தலில் சவூதி அரேபியா, ஒமான், ஐக்கிய அரபு இராச்சியம், பஹ்ரேன், மொரோக்கோ என்பன சியோனிஸத்தின் சிறந்த நண்பர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் யூதர்களுக்கும் இஸ்ரேலியர்களுக்கும் உதவியவர்கள் என்ற ரீதியில் அவர்களுக்கு “சியோன் நண்பர்கள்” என்ற விருது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
“இந்த விருதுக்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அனைவரும் தங்களது தூதரகங்களை ஜெரூஸலத்துக்கு இடம்மாற்றுவர். ஏனைய சகல முஸ்லிம் தலைவர்களும் காலப் போக்கில் அவர்களைப் பின்பற்றுவர்” என மைக் இவான்ஸ் தனது அறிவிப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கின் வெட்கக்கேடான யதார்த்த நிலைஇது தான். மக்கள் கொந்தளிக்கின்றனர். ஆனால் அதை வெளிப்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். ஈரானின் பூரண ஆதரவு பெற்ற ஹ{திகள் மட்டுமே துணிச்சலாக பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இருக்கின்றனர்.
-லத்தீப் பாரூக்-