புத்தாண்டை தொடர்ந்து ஈரான் இஸ்ரேல் மீது மேற்கொண்டுள்ள தாக்குதல் பிராந்தியத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளத்துடன், மற்றுமொரு பேரழிவுக்கு வழிவகுக்கப் போகின்றதா ? என்ற சந்தேகத்தையும் தோற்றுவித்துள்ளது.
இஸ்ரேல் – காசா மோதல் ஒருபுறம் தொடர ஈரான் இஸ்ரேல் மீது மேற்கொண்டுள்ள ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் சர்வதேச ரீதியில் மிகுந்த கவனத்தை ஈர்த்துள்ளன.
கடந்த சனிக்கிழமை ஈரானால் ஏவப்பட்ட 300 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளில் பெரும்பாலானவற்றை ஒரே இரவில் இடைமறித்து அழித்து விட்டதாக இஸ்ரேல் கூறுகிறது. ஈரான் தனது சொந்த மண்ணில் இருந்து நேரடியாக இஸ்ரேலை குறிவைத்தது இதுவே முதல் முறையாகும். மறுபுறம் குறித்த தாக்குதல்கள் சர்வதேச ரீதியில் கண்டனத்துக்கு உள்ளாகி உள்ளது .
ஐரோப்பிய நாடுகள் பலவும் இஸ்ரேலுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டு வரும் நிலையில், சில மத்திய கிழக்கு நாடுகள் ஈரானுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டுள்ளன. இந்தியா குறித்த நிலைமை தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளது.
இதேவேளை ,இஸ்ரேலிய இராணுவம் தெற்கு இஸ்ரேலில் உள்ள ஒரு தளம் உட்பட அதன் பிரதேசத்தில் சிறிய அளவிலான தாக்குதல்கள் இருந்ததாக கூறுகிறது.
இந்த மாத ஆரம்பத்தில் டமாஸ்கஸில் ஈரானிய இராணுவத் தளபதிகள் இருவர் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டமைக்கு ஈரான் பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் எச்சரித்து வந்தது. அதன்தொடர்ச்சியாகவே இந்த சம்பவம் அமைந்துள்ளது.
இந்த நிலையில், இஸ்ரேலை குறிவைத்த ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் அனைத்தையும் வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு அமெரிக்காஉதவியதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார். மேலும் இஸ்ரேலின் பாதுகாப்பை உறுதி செய்யஅமெரிக்காவுடன் பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளும் உதவி வருகின்றன.
தொடர்ந்து இஸ்ரேல் எவ்வாறு பதிலளிக்கதிட்டமிட்டுள்ளது என்பது தெளிவாக இல்லை, ஆனால் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் Yoav Gallant தனது நாடு ஒவ்வொரு சூழ்நிலைக்கும் தயாராக இருக்க வேண்டும் என்றும் தயராக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதேவேளை ,நிதானத்தைகடைபிடிக்க வேண்டும் என்று உலகத்த தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில், இஸ்ரேலின் எந்தவொரு “பொறுப்பற்ற” பதிலடிக்கும் “மிகவும் வலுவான பதிலடி” கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
நூற்றுக்கும்மேற்பட்ட ஆளில்லா விமானங்கள் தாக்கியழிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனையடுத்து இஸ்ரேல் பிரதமர் போர்க்கால அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இஸ்ரேல் மீது ஈரான் நள்ளிரவில் நடத்திய தாக்குதலுக்கு எதிராக பிரான்ஸ் கடும் தாக்குதலை தொடுத்ததாக இஸ்ரேல் இராணுவம் கூறுகிறது.பிரான்ஸ் வசம் நவீன ஏவுகணை எதிர்ப்பு ஆயுதங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது .
மேலும், அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலின் செய்தித் தொடர்பாளர் ஏட்ரியன் வாட்சன், இஸ்ரேலை பாதுகாப்பதில் பைடன் உறுதியாகஇருப்பதாகக்கூறியுள்ளார். பிரட்டன் பிரதமர் ரிஷிசுனக், ஈரானின் தாக்குதல்களுக்குகண்டனம் தெரிவித்துள்ளதோடு, இஸ்ரேல் மற்றும் அதன் அனைத்து பிராந்திய நட்பு நாடுகளின் பாதுகாப்பிற்கும் துணை நிற்பதாக உறுதியளித்துள்ளார்.
கொள்கலன் கப்பல் கடத்தல்
இந்த வகையான பின்னணியில், அடுத்து நடக்கப் போவது என்ன? என்று பார்ப்போம். ஈரான் தாக்குதலுக்கு முன்னர், பாரசீக வளைகுடா விற்கும் ஓமன் வளைகுடா விற்கும் இடையில் ஹார்முஸ் ஜலசந்தி அருகே இஸ்ரேலுடன் ஒன்றிணைந்த கொள்கலன் கப்பலை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையினர் ஏப்ரல் 13 அன்று கைப்பற்றினர்.
குறித்த கொள்கலன் கப்பலில் 25 பணியாளர்கள் இருந்ததாக இத்தாலிய – சுவிஸ் கப்பல் குழு வான எம்.எஸ்.சி தெரிவித்துள்ளது. மேலும், 17 இந்தியர்கள் அதில் இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இஸ்ரேல் ஈரானை எச்சரித்துள்ளது. இந்த நிலைமை தொடர்ந்தால் அதன் பிரதி பலன்களை எதிர்நோக்க நேரும் என்று இஸ்ரேல் கூறுகிறது.
ஈரானின் உயர் தலைவர் அலி கொமேனி
ஈரானின் உயர் தலைவர் எச்சரிக்கை
இந்நிலையில், எவரும் எதிர்பார்க்காத வகையில், ஏப்ரல் முதலாம் திகதி சிரியாவில் இருந்த ஈரான் தூதரகம் மீது இஸ்ரேல் வான் வாழி தாக்குதலை நடத்தியது. இதில் இரண்டு ராணுவ ஜெனரல்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் சிலர் படுகொலை செய்யப்பட்டனர்.
இதையடுத்து டமாஸ்கஸில் உள்ள ஈரான் துணைத் தூதரகத்தைத் தாக்கி ஜெனரலைக் கொன்றதன் மூலம் இஸ்ரேல் தவறு செய்துவிட்டதாக ஈரானின் உயர் தலைவர் அலி கொமேனி கடந்த புதன்கிழமை தெரிவித்தார். இஸ்ரேல் தண்டிக்கப்பட வேண்டும், அவர்கள் தங்கள் தவறுகளுக்கு உரிய விலை செலுத்துவார்கள்,” என்றும் அவர் எச்சரித்திருந்தார்.
லெபனான் மற்றும் சிரியாவில் ஈரானின் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான உயர்மட்ட ஈரானிய குட்ஸ் படைத் தளபதி ஜெனரல் முகமது ரெசா ஜாஹேடி என்பவரே இஸ்ரேல் வான் வாழி தாக்குதலில் கொல்லப்பட்ட வராவார்.
2020 இல் காசிம் சுலைமானியை அமெரிக்கா படுகொலை செய்த பின்னர் கொல்லப்பட்ட மிக மூத்த இஸ்லாமிய புரட்சிகர காவல் படை அதிகாரி ஜாஹிதி ஆவார். இதன் தொடர்ச்சியாக நிலைமை மோசமடைந்து வருகின்றது.
இதேவேளை, தாக்குதல் நடந்த கட்டிடம் ஒரு தூதரகம் என்று ஈரான் தரப்பினர் கூறுகின்றனர். மற்றும் சர்வதேச சட்டத்தை மீறி அதன் மண்ணில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.
ஆனால் இஸ்ரேலிய அதிகாரிகள் இது ஒரு தூதரக வசதி அல்ல, ஆனால் இராணுவ நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டகட்டிடம் என்று கூறுகின்றனர். இவ்வாறு இரு தரப்பினரும் முரண்படுகின்றனர்.
இந்தவிதமான சூழலில் , ஈரான் எப்போது வேண்டுமானாலும் இஸ்ரே ல் மீது தாக்குதல் நடத்தலாம், எனவே உஷாராக இருக்க வேண்டும் என அமெரிக்கா எச்சரித்திருந்தது.
மேலும் ஈரானின் தாக்குதலிலிருந்து இஸ்ரேலை பாதுகாக்க ‘அயன் டோம்’ அமைப்பை கூடுதலாக வழங்குவதாகவும் அமெரிக்கா உறுதியளித்திருக்கிறது.
இவற்றுக்கு மத்தியில் மத்திய கிழக்கில் மற்றொரு போர் வெடித்து விடக்கூடாது, அது ஹமாஸின் கரங்களை எந்த வகையிலும் பலப்படுத்தி விடக் கூடாது என்பதில் அமெரிக்கா முனைப்பு காட்டி வந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஈரானுக்கு பொது எச்சரிக்கை
இதேவேளை, கடந்த புதன்கிழமை ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் சந்திப்பொன்றை மேற்கொண்ட பின்னர் செய்தியாளர் சந்திப்பொன்றில் பேசிய ஜனாதிபதி பைடன் ஈரானுக்கு ஒரு பொது எச்சரிக்கையை விடுத்திருந்தார்.
“இஸ்ரேல் மீது, குறிப்பிடத்தக்க தாக்குதலை நடத்தும் ஈரானிய அச்சுறுத்தலை நாங்கள் கவனித்து வருகிறோம்.
நான் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம் கூறியது போல், ஈரான் மற்றும் அதன் பினாமி களிடமிருந்து வரும் இந்த அச்சுறுத்தல்களுக்கு எதிராக இஸ்ரேலின் பாதுகாப்பின் பொருட்டு நமது அர்ப்பணிப்பு, இஸ்ரேலுக்கு ஓர் இரும்புக் கவசமாக அமையும் ” என்று பைடன் கூறினார்.
டமாஸ்கஸில் உள்ள தனது தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட கொடூர வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு பதிலடி கொடுப்பதாக உறுதியளித்த ஈரானுக்கு, அமெரிக்க ஜனாதிபதி ஒரு சுருக்கமான ஆனால் கடுமையான எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த சம்பவம் அமைந்துள்ளது.
மத்திய கிழக்கு விவகாரம்தொடர்பில் ஆய்வாளர்கள் கூறுகையில், ஈரான்தனது தாக்குதலை நடத்தும் திட்டம், பிராந்திய போரின் அச்சத்தை எழுப்புகிறது.
அதேவேளை மத்திய கிழக்கில் அமெரிக்க செல்வாக்கு மற்றும் தடுப்பு முயற்சிகளின் வரம்புகளை காட்டுகிறது.
இது வொஷிங்டனின் வெளியுறவுக் கொள்கையில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குதல் மற்றும் காஸாவில் மோதல் விரிவடைவதைத் தடுப்பது ஆகிய இரண்டுமுரணான முன்னுரிமைகளுக்கு இடையே அமெரிக்கா ஏற்கனவே சிக்கிக் கொண்டுள்ளது என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இராஜதந்திர செயல்பாட்டை ஊக்குவிக்கும் ஒரு சிந்தனைக் குழுவான குயின்சி (Quincy )இன்ஸ்டிடியூட் நிர்வாக துணைத் தலைவர் ட்ரீட்டா பார்சி கூறுகையில் , இதுவரை முற்றிலும் பேரழிவு தரும் சூத்திரத்தை பைடன் இரட்டிப்பாக்குகிறார்”ஏப்ரல்முதலாம் திகதி ஈரானிய தூதரகத்தை தாக்கி, சர்வதேச சட்டத்தை மீறி, அப்பகுதியில் அமெரிக்க துருப்புக்களை ஆபத்தில் ஆழ்த்தியதற்காக இஸ்ரேலை பைடன் கண்டித்திருக்க வேண்டும்
ஆனால் அவ்வாறு அவர் நடக்கவில்லை என்று கூறியதுடன், பைடன் நிர்வாகம் அதற்குப் பதிலாக இஸ்ரேலியஅரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்து வெகுமதி அளிக்கிறது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
“இந்த நிலையில் , இஸ்ரேலின் பாதுகாப்பில் நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். நாங்கள் இஸ்ரேலைஆதரிப்போம். இஸ்ரேலைப் பாதுகாக்க நாங்கள் உதவுவோம்,ஈரான் வெற்றி பெறாது, ”என்று பைடன் மீண்டும் வெள்ளிக்கிழமை கூறியுள்ளார். பென்டகன் மற்றும் வெளியுறவுத்துறையும் இதே நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளன.
இதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்ரோஸ் , “பிராந்திய அளவிலான பேரழிவு அதிகரிப்பதன் ஆபத்து குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளார் .
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஈரான் இஸ்லாமிய குடியரசினால் இஸ்ரேல் மீது நடத்திய பாரிய அளவிலான தாக்குதலை தான் கடுமையாக கண்டிப்பதாகவும், இந்த மோதலை உடனடியாக நிறுத்துமாறும் தெரிவித்துள்ளார்.
“கரடி அணைப்பு” அணுகுமுறை தொடந்து கருத்து வெளியிட்ட ட்ரீட்டா பார்சி, பைடன் காசா மீதான போரின் தொடக்கத்தில் இருந்து இஸ்ரேலுக்கு வழங்கும் ஆதரவு,பாலஸ்தீன பிரதேசத்தில் பாரிய படுகொலைகள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு பச்சை விளக்கு காட்டியுள்ளது .
மற்றும் இஸ்ரேலியபிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் அவர் கொண்டுள்ள உறவு”கரடி அணைப்பு” அணுகுமுறையை பிரதிபலிக்கிறது என்று அவர் கூறினார்.
இதேவேளை , சர்வதேச கொள்கை சிந்தனைக் குழுவின் சிரேஷ்ட உறுப்பினரான, சினா டூசி, (Sina Toossi) கூறுகையில் , நெருக்கடிக்கான அமெரிக்க அணுகுமுறை “பாசாங்கு தனமானது மற்றும்முரண்பாடானது” அவர்கள் பிராந்தியத்தில் உள்ள ஏனைய அனைத்து தரப்பினரையும் கட்டுப்படுத்த முனைகின்றனர்.
ஈரானியர்களை ‘அமைதிகாக்க ‘தொடர்ந்து கூறுகிறார்கள், அதேசமயம் இஸ்ரேலியர்களை தண்டனையின்றி முழுமையாக செயல்படஊக்குவிக்கிறார்கள்,” என்று டூசி வெளிநாட்டு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
ஈரானின் பதிலடி எவ்வாறு அமையும்?
பதிலடி கொடுப்பதற்கான ஈரானிய உறுதிமொழியானது, பிராந்தியப் போரைவிரும்பாத நிலையில், தெஹ்ரானில் வலுவான எதிர்வினையைத் தூண்டாமல், அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுகும் பாதிப்பை விளைவிக்கலாம் என்று நம்பலாம் என்றும் அவர் கூறினார்.
ஆனால் இப்போது ஈரான் ஒரு உறுதியான கோட்டைவரைய விரும்புகிறது. அதாவது , “அமெரிக்கக் கொள்கை தங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளது என்று ஈரான் கருதுகிறது.
அதேவேளை போரினால் பாதிக்கப்பட்ட நாட்டில் தெஹ்ரான் தனது இராணுவ இருப்பை பலப்படுத்துகிறது. இந்த விதமான சூழலில் , சிரியாவில் ஈரானுடன் தொடர்புடைய தளங்களை இஸ்ரேலியஇராணுவம் பல ஆண்டுகளாக குறிவைத்து வருகிறது என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
எனினும் தாக்குதல் தொடர்ந்து விரிவடையுமானால்,காசாமோதலில் அது ஒரு திருப்புமுனையாக இருக்கும். பல நாடுகள் இந்த வாரம் தங்கள் பிரஜைகள் இப்பகுதிக்கு பயணம்செய்வதை தவிர்க்குமாறு எச்சரித்துள்ளன.
சுமார் 33,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொன்றகாசா மீதான போர் ஏற்கனவே குறுகிய நிலப்பகுதிக்கு அப்பால் விரிவடைந்துள்ளது.
ஈரானுடன் இணைந்த லெபனான் குழுவான ஹிஸ்புல்லா தினமும் இஸ்ரேலிய படைகளை தாக்கி வருகிறது.செங்கடலில் இஸ்ரேலுடன் ஒன்றிணைத்த கப்பல்கள் மீது ஹூதிகள் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை வீசிதாக்கி வருகின்றனர், போரை நிறுத்தக் கோரி, அமெரிக்க தலைமையிலான கூட்டணி வலியுறுத்தி வரும் நிலையில், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வொஷிங்டன் போரை விரும்பவில்லை
அரசியல் விமர்சகர்கள் சிலர் இது குறித்து கூறுகையில், பைடன் அமெரிக்கா, ஈரானுடன் ஒரு போருக்கு இழுக்கப்படுவதைவிரும்பவில்லை, குறிப்பாக அவர் நவம்பரில் தேர்தலை எதிர்பார்க்கிறார்.
ஆனால் வொஷிங்டனின் இயல்பு நிலைக் கொள்கை நீண்டகாலமாக இஸ்ரேலை ஆதரிப்பதாக உள்ளது. அமெரிக்காவின் நிலைப்பாடு என்னவென்றால், அவர்கள் போர் விரிவடைவதை விரும்பவில்லை.
அதாவது, காசா போர் பிராந்திய போராகமாறுவதை அவர்கள்விரும்பவில்லை, எனினும் திரைமறைவில் “அவர்கள் இஸ்ரேலுக்கு ஆதரவை வழங்கிக் கொண்டுள்ளனர். இருந்த போதிலும் அவர்கள் போரை விஸ்தரிக்க வேண்டாம் என்று ஈரானை பகிரங்கமாக எச்சரிக்க முயற்சிக்கிறார்கள் என்று கூறுகின்றனர்.
இஸ்ரேலின் நிலைப்பாடு!
இந்தவிதமான சூழலில் இஸ்ரேலின் நிலைப்பாடு எவ்வாறு அமையும் ? என்று பார்த்தால், ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் நேரடி தாக்குதல் மூலம் பதிலடி கொடுக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்க மத்தியக் கட்டளைத் தளபதி ஜெனரல் எரிக் குரில்லா, (Gen. Erik Kurilla) விரைவில், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் மற்றும் சிரேஷ்ட இஸ்ரேல்பாதுகாப்புப் படை அதிகாரிகளைச் சந்திப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஈரான் , இஸ்ரேலிய இலக்குகளுக்குஎதிராக பாலிஸ்டிக் ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைப் பயன்படுத்தி ஈரானிய மண்ணில் இருந்து நேரடித் தாக்குதலை தொடுத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகள் கூறுகின்றனர்.
அத்தகைய சூழ்நிலையில்,ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் நேரடி தாக்குதல் மூலம் பதிலடி கொடுக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்ரேல் மாத்திரமல்ல , அமெரிக்காவும் ஈரானை தாக்க சந்தர்ப்பம் பார்த்துள்ளது என்பதே உண்மை. எனவே இந்த சந்தர்ப்பத்தை இரு தரப்பும் பயன்படுத்த எண்ணினால் இறுதியில் அழிவுகள் மாத்திரமே எஞ்சிவதாக இருக்கும் . மேலும் மூன்றாம் உலக மகா யுத்தத்துக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கப்படுகின்றது.
இரும்புக் கவசஉத்தரவாதம் !
இதேவேளை , ஒவ்வொரு நாடும் அதன் வெளியுறவுக் கொள்கை, அதன் உள்நாட்டு அரசியலுடன் போராட வேண்டிய நிலையை ஏற்படுத்தி உள்ளது. “அமெரிக்காவில், இஸ்ரேலின் பாதுகாப்பிற்கு இரும்புக் கவசஉத்தரவாதங்களை வழங்குவது ஏற்கனவே கொடுக்கப்பட்ட உத்தரவாதமாகும்.
வொஷிங்டனில், ஈரான் , இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அமெரிக்கா வலிமையான பதிலடி கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
குடியரசுக் கட்சியின் செனட்டர் டாம் காட்டன் புதனன்று “கூட்டு அமெரிக்க – இஸ்ரேலிய பதிலடி”க்கு அழைப்பு விடுத்தார்,
இது இஸ்ரேலுக்கு எதிரான எந்த ஈரானிய இராணுவ நடவடிக்கைக்கும் “விரைவான மற்றும் பேரழிவை ஏற்படுத்தும்” இவ்வாறு மத்திய கிழக்கு யுத்த மேகங்கள் களைகட்ட தொடங்கியுள்ளன , இதேவேளை, ஈரானுக்கு இது ஓர் கௌரவ பிரச்சினையாக மாறியுள்ளது,
அமெரிக்க ஆராய்ச்சி நிறுவனமான கவுன்சில் ஓன் ஃபாரின் ரிலேஷன்ஸின் மத்திய கிழக்கு நிபுணர் எலியட் ஆப்ராம்ஸ், கூறுகையில், “இஸ்ரேலுடன் முழு அளவிலான போரை ஈரான் விரும்பவில்லை.
இருப்பினும், இஸ்ரேலின் நலன்கள் தொடர்பான பல்வேறு இடங்களை அது தாக்கக் கூடும்”, என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார். மேலும், இஸ்ரேலுக்கு எதிரான தாக்குதலால்,ஈரானுக்கு நேரடியான பாதிப்புகள் ஏற்படும்.
மறுபுறம், இஸ்ரேலுக்கு பதிலளிக்கத் தவறினால், அதன் இராணுவத் திறன்கள் கேள்விக்கு உட்படுத்தப்படும் என்றார்.
ஈரான் தாக்குதலை த் தொடர்ந்தாலோ அல்லது அல்லது இஸ்ரேல் பதிலடி கொடுக்க முனைந்தாலோ அது மத்திய கிழக்கு பிராந்தியத்துக்கு மாத்திரமன்றி முழு உலகிற்கும் தாக்கமாகவே அமையும்.
அது மாத்திரமன்றி சர்வதேச சந்தையில்எண்ணெய் விலை உயர்வு மாத்திரமன்றி, அனைத்து விதமான தாக்கங்களுக்கும் சர்வதேசம் முகம் கொடுப்பதை தவிர்க்க முடியாது போகும் என்பதே யதார்த்தம்.