இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ் செய்தி தொலைக்காட்சியிடம் தெரிவித்துள்ளனர்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக இரான் அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்ஃபஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும்.
சில நாட்கள் முன்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பெரும் அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார்.
விளம்பரம்
கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி காஸாவில் உள்ள ‘உலக மத்திய சமையலறையில்’ (வேர்ல்ட் சென்ட்ரல் கிச்சன்) பணிபுரியும் ஏழு மனிதநேய உதவிப் பணியாளர்கள், இஸ்ரேலிய ராணுவத்தால் கொல்லப்பட்டனர்.
இந்நிகழ்வால் இஸ்ரேல் மீது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிருப்தி அடைந்தார். மேலும், நட்பு நாடாக இருப்பினும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பொறுமை இழக்கச் செய்தது.
அதே நாளில், சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் உள்ள இரானிய தூதரக வளாகத்தை இஸ்ரேல் தாக்கியது. அந்தத் தாக்குதலில் ஒரு மூத்த ராணுவ ஜெனரல் மற்றும் ஆறு அதிகாரிகளுக்கு மேல் கொல்லப்பட்டனர். தூதரகங்கள் மீதான தாக்குதல்களைத் தடை செய்யும் சட்ட மரபுகள் செயல்பாட்டில் இருப்பினும், அதை மீறி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
‘இரான் விதிகளை மீறி தூதரக கட்டடத்தை ராணுவ புறக்காவல் நிலையமாக மாற்றியதால்தான் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது’ என இஸ்ரேல் தரப்பில் ஏற்றுக்கொள்ள முடியாத காரணம் சொல்லப்பட்டது.
அந்தத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இரான் உறுதிபூண்டது. அதற்கு முன்னரும் மூத்த ராணுவ தளபதிகள் மீதான தாக்குதல் நடத்தப்பட்டபோது ‘பதிலடி கொடுக்கப்படும்’ என்று வார்த்தைகளில் மட்டுமே இரான் தெரிவித்தது. ஆனால், அவை செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா ஆவேசம்
படக்குறிப்பு, அமெரிக்கா தனக்கு வழங்கிய ஆயுதங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் காஸாவில் பேரழிவுத் தாக்குதலை நிகழ்த்தியிருக்கிறது.
அமெரிக்காவை தளமாகக் கொண்ட தொண்டு நிறுவனமான ‘வோர்ல்டு சென்ட்ரல் கிச்சனில்’ பணிபுரியும் குழுவை இஸ்ரேல் தாக்கியது. மனிதநேய உதவிப் பணியாளர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட சீற்றத்தால் இரானுக்கு வெளியே, டமாஸ்கஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பெரிதாகக் கண்டு கொள்ளப்படவில்லை.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எழுதிய ஆவேசமான அறிக்கை ஒன்றை வெள்ளை மாளிகை வெளியிட்டது. அவர் ‘சீற்றம்டைந்தார், மனமுடைந்து விட்டார்’. இப்படி நடப்பது முதல்முறை அல்ல. உதவிப் பணியாளர்கள் மற்றும் பாலத்தீன குடிமக்களைப் பாதுகாக்க இஸ்ரேல் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை, என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இஸ்ரேல் பிரதமருடன் ஒரு காட்டமான தொலைபேசி உரையாடலில், பைடன், பெரும் சலுகைகளைக் கோரினார். காஸாவுக்கு பெருமளவு மனிதாபிமான உதவிகள் கிடைக்க வேண்டும் என்றார்.
வடக்கு காஸாவில் உணவின்றிப் பட்டினியால் இறக்கும் குழந்தைகள் வசிக்கும் பகுதியில் இருந்து ஒரு மணிநேரத்திற்கும் குறைவான தூரத்தில் இஸ்ரேல் அதிகமான எல்லைக் கடப்புகளைத் திறக்க வேண்டும் என்றார். அஷ்டோதில் உள்ள கொள்கலன் துறைமுகத்தையும் திறக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்தச் சூழல் மாறும் என பிரதமர் நெதன்யாகு பைடனுக்கு உறுதியளித்தார். அது வெறும் சமாளிப்பு மட்டுமே.
இருபுறமும் அழுத்தத்தில் இருந்த நெதன்யாகு
வெள்ளை மாளிகையின் சீற்றத்தை எதிர்கொள்ளும் அதே வேளையில் நெதன்யாகு, மற்றொருபுறம் இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் தன்னை ஆதரித்து தனது கூட்டணியை அதிகாரத்தில் வைத்திருக்கும் தீவிர தேசியவாதிகளின் அழுத்தத்திற்கும் ஆளாகியுள்ளார்.
காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைப்பதை மட்டும் அவர்கள் எதிர்க்கவில்லை. காஸாவில் இந்தப் போர் யூதர்களை மீண்டும் குடியமர்த்துவதற்கான விலைமதிப்பற்ற வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கியிருப்பதாக அவர்கள் திடமாக நம்புகிறார்கள்.
கடந்த 2005ஆம் ஆண்டில் இஸ்ரேலில் இருந்து ஒருதலைப்பட்சமாக அங்குள்ள யூதர்களின் குடியிருப்புகள் அரசால் காலி செய்யப்பட்டு இடித்துத் தள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த வார இறுதியில், அமெரிக்கா இஸ்ரேல் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. வியாழன் அன்று, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை,” என்றார்.
காஸாவை ஆறு மாதமாக இஸ்ரேல் முற்றுகையிட்டு வைத்திருந்தது, அப்பகுதியில் உலகிலேயே மிக மோசமான உணவு நெருக்கடி சூழலை உருவாக்கியது என்பது இஸ்ரேலின் ஆதரவு நாடுகளுக்கும் எதிரி நாடுகளுக்கும் தெளிவாகவே தெரிந்திருக்கும். மற்றொருபுறம், ஆயுதங்கள் வழங்கும் அமெரிக்கா அதைப் பயன்படுத்த இஸ்ரேலுக்கு நிபந்தனைகளை விதிக்கும் என்ற யூகமும் இருந்தது.
அமெரிக்காவின் மனநிலை
கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) காலை, இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்துவதற்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, தி’ நியூயார்க் டைம்ஸ்’ ஊடகம் பெரும் சீற்றத்தை எதிரொலித்து ஒரு தலையங்கம் வெளியிட்டது.
குறிப்பாக அமெரிக்க காங்கிரஸில் உள்ள ஜனநாயகக் கட்சியின் முக்கியப் பிரமுகர்கள் மத்தியில் இந்தச் சீற்றம் காணப்பட்டது. இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்குவதில் இடைநிறுத்தம் செய்யக் கோரியும் பெஞ்சமின் நெதன்யாகுவை தாக்கியும் அத்தலையங்கம் அமைந்திருந்தது.
“இஸ்ரேலுக்கான ராணுவ உதவி நிபந்தனையற்றதாக இருக்கக்கூடாது,” என்ற தலைப்பின் கீழ், அப்பத்திரிகையின் ஆசிரியர் குழு, அமெரிக்கா உடனான ‘நம்பிக்கையின் பிணைப்பை’ உடைத்ததற்காக நெதன்யாகுவையும் அவரது அரசின் கீழ் செயல்படுபவர்களையும் கடுமையாகச் சாடியுள்ளது.
“இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளிப்பதும் நாட்டை தற்காத்துக் கொள்ள நினைப்பதும் சரிதான். ஆனால் அதற்காக அதிபர் பைடன் ‘நெதன்யாகு இரட்டை முகத்துடன் மேற்கொள்ளும் தந்திரமான அரசியல் விளையாட்டுகளை அனுமதிக்க வேண்டும்’ என்பது அர்த்தம் இல்லை,” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இரானின் தாக்குதல், நெதன்யாகுவுக்கு கிடைத்த வாய்ப்பு
படக்குறிப்பு, இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள்
அதன்பின் இரான் இஸ்ரேல் மீது முதல் நேரடித் தாக்குதலை நடத்தியது.
இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. ஆனால், தற்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டாம் என்று அமெரிக்கா கூறியதை மீறி ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது இஸ்ரேல்.
ராணுவ ஒத்துழைப்பின் குறிப்பிடத்தக்க ஒருங்கிணைந்த செயல்பாடாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் பிற மேற்கத்திய நட்பு நாடுகள் இரானால் ஏவப்பட்ட 300க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளைச் சுட்டு வீழ்த்துவதற்கு இஸ்ரேலுக்கு உதவின.
காஸாவில் நடக்கும் இஸ்ரேலின் தாக்குதல்களைக் கடுமையாக விமர்சித்தவர் ஜோர்டான் நாட்டின் மன்னர் அப்துல்லா. ஆனால் இஸ்ரேலுக்கு ஆபத்து வந்தபோது, ஜோர்டானின் விமானப்படை பாதுகாப்பு நடவடிக்கையில் இணைந்தது, இஸ்ரேலை நோக்கி வந்த ஏவுகணைகளை வீழ்த்தியது.
இஸ்ரேலுக்கு வழங்கப்படும் ராணுவ உதவிக்கு நிபந்தனைகள் விதிக்கும் சூழல் மாறி ஒற்றுமையின் உறுதியான வெளிப்பாடு அப்போது பிரதிபலித்தது. இது பிரதமர் நெதன்யாகுவுக்கு ஒரு புதிய அரசியல் வாய்ப்பை வழங்கியுள்ளது. குறைந்தப்பட்சம் ஓரிரு நாட்களுக்கு தலைப்புச் செய்திகளில் காஸாவின் பெயர் அடிபடாது.
மேற்கத்திய நாடுகளின் நிலைப்பாடு என்ன?
படக்குறிப்பு, இரானின் ஏவுகணைகளை இடைமறித்த இஸ்ரேலின் அயர்ன் டோம்
அதேநேரம் பிரதமர் நெதன்யாகு மீதான அழுத்தம் அதிகரித்துவிட்டது. இஸ்ரேலின் அடுத்த நகர்வுகள் அந்த அழுத்தத்தை இரட்டிப்பாக்கும்.
அடுத்து என்ன நடக்க வேண்டும் என்பதை அதிபர் பைடன் மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறார். இரானின் தாக்குதலை முறியடித்த வெற்றியை மட்டும் இஸ்ரேல் எடுத்துக்கொள்ள வேண்டும், ‘ஆனால் திருப்பி அடிக்கக்கூடாது’ என்றார்.
இந்த நிலையில்தான் இரான் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கும் ஆதரவு என்பது ‘இரும்புக் கவசம்’ போன்றது என்பதை பைடன் மீண்டும் நினைவுபடுத்தினார். கடந்த அக்டோபர் 7ஆம் தேதி அன்று நடத்தப்பட்ட ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு அவரது நிலையான கொள்கை வெளிப்பட்டது.
காஸாவில் பேரழிவையும் கொடிய விளைவுகளையும் ஏற்படுத்தப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களை இஸ்ரேலுக்கு அமெரிக்காதான் வழங்கியது என்ற போதிலும் அதிபர் பைடனும் அவரது நிர்வாகமும் மத்திய கிழக்கில் நடக்கும் போரை நிறுத்தக் கடுமையாக உழைத்துள்ளனர்.
அக்டோபரில் இருந்து ஆயுதங்கள் மற்றும் பிற நாடுகள் அளித்த ஆதரவையும் இஸ்ரேல் ஏற்றுக்கொண்டது. ஜோ பைடனின் எச்சரிக்கைகளையும் கோபத்தையும் புறக்கணித்து அவரின் அவநம்பிக்கைக்கு ஆளானது.
இரானுக்கு எதிராகச் செயல்பட, இஸ்ரேலுக்கு முன்னெப்போதும் இல்லாத ராணுவ ஒத்துழைப்பை சில ஆதரவு நாடுகள் வழங்கின. இதன்மூலம் இஸ்ரேல் மீண்டும் ஒருமுறை ஜோ பைடனின் ‘பதிலடி கொடுக்க வேண்டாம்’ என்ற அறிவுரையைப் புறக்கணித்தது.
ஜோ பைடனை போலவே பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோங் ஆகியோர் இரான் தாக்குதலுக்கு எதிராகப் போர் விமானங்களை அனுப்பினர். இருவரும் இரானை கண்டித்தனர். மேலும் இஸ்ரேலிடம் பதில் தாக்குதல் செய்ய வேண்டாம் என்பதை வலியுறுத்தினர். அவர்கள் இஸ்ரேலில் நீண்ட கால நம்பிக்கைகள் மற்றும் செயல்பாடுகளுக்கு எதிராக யோசிக்கத் தொடங்கிவிட்டனர்.
இஸ்ரேல்-இரான் பகை
இஸ்ரேல் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்கு சீற்றத்துடன் பதிலடி கொடுக்க வேண்டும் என்று இஸ்ரேல் ஆழமாக நம்புகிறது.
மேலும், இரான் இஸ்ரேலின் மிகவும் ஆபத்தான எதிரி என்றும் யூத அரசை அழிப்பதில் இரான் குறியாக உள்ளது என்றும் பெஞ்சமின் நெதன்யாகு நம்புகிறார். அவரது ஆட்சியில் பலமுறை இந்த நம்பிக்கை வெளிப்படுத்தப்பட்டது. அதன் விளைவாக இஸ்ரேல் மக்கள் பலர் இதே கருத்தை முன்வைக்கின்றனர்.
கடந்த 1979இல் இரானில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலுடன் பல வருடப் பகை நீடித்தது. அதன் பிறகு இப்போது இரான் முதன்முறையாக இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதல் தொடுத்துள்ளது. நீண்ட காலமாக நடந்து கொண்டிருக்கும் மறைமுகப் போர் தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
தற்போதைய தாக்குதலைத் தொடங்குவதற்கு முன்னதாகவே, பதில் தாக்குதல் நடத்தப்படுமா என்பது கேள்வி அல்ல, எப்போது, எப்படி நடத்தப்படும் என்பதுதான் கேள்வி என்று இஸ்ரேல் கூறியது.
தீவிரமான போர்ச்சூழல் உருவாகாமல், எப்படி பதில் தாக்குதல் நடத்துவது என்று இஸ்ரேலின் போர்க்குழு அமைச்சரவை விவாதித்து வந்தது. இரான் தீவரமான போர்ச்சூழலை விரும்பவில்லை என்று சொன்னாலும், அதற்கேற்ப பதிலளிக்கும். எந்தவொரு அனுமானமும் இன்றி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இரு தரப்பினரும் ஏற்கெனவே மற்றவரின் நோக்கங்களைத் தவறாக மதிப்பிட்டுள்ளனர் என்பதே நிதர்சனம்.
பெஞ்சமின் நெதன்யாகுவும் அவரது அரசாங்கமும் மீண்டும் ஒருமுறை இஸ்ரேலுக்கு ஆதரவாக நின்ற நாடுகளின் விருப்பங்களைப் புறக்கணிப்பதில் குறியாக உள்ளனர். இஸ்ரேலின் தீவிர தேசியவாதக் கூட்டாளிகள், இரான் மீது கொடூரத் தாக்குதல் நடத்தக் கோரினர். அவர்களில் ஒரு தரப்பினர் இஸ்ரேல் ‘வெறியுடன் செயல்பட வேண்டும்’ என்றனர்.
காஸாவில் தொடரும் மனிதாபிமானப் பேரழிவு
இஸ்ரேல், இரான், ஜோ பைடன், பெஞ்சமின் நெதன்யாகு, காஸா
படக்குறிப்பு, அமெரிக்காவின் உயர்மட்ட மனித உரிமை அதிகாரியான சமந்தா பவர், “காஸாவின் சில பகுதிகளை பஞ்சம் பாதித்துள்ளது என்பதே உண்மை,” என்றார்.
இவையனைத்திற்கும் மத்தியில் காஸாவில் மனித உரிமை மீறல் மற்றும் பேரழிவு தொடர்கிறது.
காஸா மீண்டும் சர்வதேச கவனம் பெறும்.
இஸ்ரேலின் ராணுவம் காஸாவில் இன்னமும் பொதுமக்களைக் கொன்று வருகிறது. மற்றொருபுறம் மேற்குக் கரையில் பாலத்தீனர்களுக்கும் யூத குடியேற்றவாசிகளுக்கும் இடையே மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. ஹெஸ்பொல்லாவுடன் இஸ்ரேலுக்கு மீண்டும் எல்லைப் போர் தீவிரமடையலாம்.
இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் இன்னும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும் என இரான் உறுதியளித்துள்ளது. அதன் ஆயுதப் படைகளின் தலைமை அதிகாரியான ஹொசைன் பாகேரி, இஸ்ரேல் மீதான தாக்குதல் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது, ஆனால் இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் ‘மிகப் பெரிய’ பதிலடியை திருப்பிக் கொடுப்போம் எனக் கூறியிருக்கிறார்.
இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தினால் உதவ மாட்டோம் என அமெரிக்கா உறுதிபடத் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பிற்கான ‘இரும்புக் கவசமாகச்’ செயல்பட்ட ஜோ பைடன் அரசு இஸ்ரேலிய தாக்குதலுக்கு இரான் பதிலடி கொடுத்தால், ஆதரவாக நிற்காது என்பதை நம்புவது கடினம்.
இந்தச் சூழ்நிலை மத்திய கிழக்குப் பகுதியில் தீவிரமான போர்ச் சூழலையும் சர்வதேச நெருக்கடியையும் ஏற்படுத்தும்.
-BBC TAMIL NEWS-