ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 5 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.
2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி அன்று கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் உட்பட நாட்டின் 8 இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 407 பேர் காயமடைந்தனர்.
இந்த தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 5 வருடங்கள் பூர்த்தியாகின்ற போதிலும் தாக்குதலுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்பதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்கவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில் ஏப்ரல் 21 தாக்குதலின் 5ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் நேற்று பிற்பகல் விசேட ஆராதனை நடைபெற்றது.
ஆராதனையின் பின்னர் அருட்தந்தைமார்கள், தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கத்தோலிக்க சமூகத்தினர் கலந்து கொண்ட நடைப்பயணம் குறித்த தேவாலயத்திலிருந்து கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்தை நோக்கி ஆரம்பமானது.
இந்த நடைப்பயணம் கட்டுவாப்பிட்டிய புனித செபஸ்தியார் தேவாலயத்தை சென்றடைந்த பின்னர் சர்வ மத தலைவர்கள் மற்றும் முக்கியஸ்த்தர்கள் பங்குகொள்ளும் விசேட ஆராதனையும் இடம்பெறவுள்ளது.
அத்துடன், இன்று பிற்பகல் 3.30 க்கு நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரி மைதானத்தில் இருந்து சர்வ மதத் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொள்ளும் பிரார்த்தனை அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நம்பிக்கையின் நாயகர்கள் என்று பெயரிடும் கையெழுத்துப் பிரதிகளை பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்திடம் கையளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
அதேநேரம், இன்றைய தினம் ஆராதனைகள் இடம்பெறும் தேவாலயங்களின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் இதுவரை வெளிவராத எட்டு உண்மைகள் ஆதாரங்களுடன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் இல்லத்தின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் வழங்கிய அறிக்கை தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.