ஒட்டாவா: கனடாவில் நடைபெற்ற மிகப்பெரிய கொள்ளை சம்பவத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 பேர் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பேசுபொருளாகியுள்ளது.
கடந்த ஆண்டு இதே ஏப்ரல் மாதத்தில் கனடாவின் டொரோண்டோ விமான நிலையம் வழக்கத்திற்கு மாறான பரபரப்புடன் இருந்தது.
இந்த பரபரப்பு ஓய ஏறத்தாழ ஓராண்டு ஆகிவிட்டது. இதற்கு காரணம் தங்கம் திருட்டுதான். சாதாரண தங்கம் திருட்டுக்கா இவ்வளவு அக்கப்போர் என்று பலரும் பேசிக்கொண்டனர்.
ஆனால், இதுவரை கனடாவில் இவ்வளவு பெரிய திருட்டு அரங்கேறியதில்லை. அந்நாட்டு வரலாற்றிலேயே இதுதான் மிகப்பெரிய திருட்டு சம்பவம் என காவல்துறை தரப்பில் விளக்கப்பட்டது.
விஷயம் என்னவெனில், கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ம் தேதி சுவிட்சர்லாந்தின் சுரிச் எனும் நகரிலிருந்து ‘ஏர் கனடா’ விமானம் ஒன்று கனடாவின் டொரோண்டோ விமான நிலையத்திற்கு வந்தது.
அதில் 22 மில்லியன் கனடிய டாலர் மதிப்பிலான 400 கிலோ தங்க கட்டிகள் மற்றும் பணம் அடங்கிய கண்டெய்னர் பெட்டி இருந்திருக்கிறது.
விமான நிலைய ஊழியர்கள் இந்த கண்டெய்னரை சேமிப்பு அறையில் பத்திரமாக வைத்திருக்கிறார்கள்.
ஆனால், ஏப்ரல் 17ம் தேதி இரவே இந்த கண்டெய்னர் அங்கிருந்து திருடப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை கையில் எடுத்த கனடா போலீஸ் விசாரணையை தீவிரப்படுத்தியது.
முதற்கட்ட விசாரணையில் போலி ஆவணங்கள் மூலமாக கண்டெய்னர் கடத்தப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதில், ஏர் கனடா நிறுவனத்தின் 2 ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்களை பிடித்து விசாரித்ததில் இந்த கொள்ளைக்கு பின்னர் பெரிய டீம் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
எனவே அவர்களை கைது செய்யும் பணிகள் கொஞ்சம் கொஞ்சமாக தீவிரமடைந்தது. இந்நிலையில் இந்த வழக்கு குறித்து ஓராண்டுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த கனடா போலீசார், குற்றவாளிகளை கைது செய்தது குறித்து விவரித்தனர்.
அப்போது பேசிய அவர்கள், “நாங்கள் இந்த வழக்கில் இதுவரை 6 பேரை நாங்கள் கைது செய்திருக்கிறோம்.
இதில் 2 பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள். அதேபோல பிரபல துப்பாக்கி கடத்தல் மன்னனான டுராண்டே கிங்-மெக்லீன் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்டிருக்கின்றனர்.
இவர் தற்போது அமெரிக்காவில் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
மேலும் சிலரை பிடிக்க பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பித்துள்ளோம். இது சர்வதேச சதி திட்டம். இந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த கொள்ளையர்களுக்கு கனடாவுக்குள் சில ஆட்கள் தேவைப்பட்டனர்.
அப்படித்தான் ஏர் கனடா நிறுவனத்தில் பணியாற்றி இருவர் அவர்களுடன் சேர்ந்தனர். மொத்தம் 400 கிலோ தங்கம். 6,600 கட்டிகள் கொள்ளையடிக்கப்பட்டன.
கனடா கடத்தல் வரலாற்றில் இதற்கு முன்னர் இவ்வளவு பெரிய கடத்தல் சம்பவம் நடந்ததில்லை” என்று கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்ட 2 ஏர் கனடா ஊழியர்களில் ஒருவர் பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். மற்றொருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.
கனடாவின் மிகப்பெரிய கொள்ளை சம்பவத்தில் இந்திய வம்சாவளியினர் சம்பந்தப்பட்டிருப்பது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.