29 முறை! இறுதியாக வந்து மரணபயம் காட்டிய கரன் சர்மா.. 1 ரன்னில் RCB பரிதாப தோல்வி!
கவுதம் கம்பீர்-விராட் கோலி மோதுகிறார்கள் என்பதை தாண்டி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகிறது என்றாலே பரபரப்பான பைனல் ஓவர் போட்டிகளையே இதுவரை ஐபிஎல் தொடர் விருந்தாக படைத்துள்ளது.
தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோற்று வெற்றியின் பக்கம் திரும்ப முடியாமல் போராடிவரும் ஆர்சிபி அணி, வெற்றியை தேடி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. கொல்கத்தா ஈடன் கார்டனில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது.
பலம் வாய்ந்த கேகேஆர் அணிக்கு எதிராக, மோசமான பந்துவீச்சை வைத்திருக்கும் ஆர்சிபி அணி எவ்வளவு ரன்களை வாரிவழங்கப்போகிறது என்ற எண்ணம்தான் எல்லோருக்கும் இருந்தது. ஆனால் இந்தமுறை பந்துவீச்சில் முன்னேற்றமடைந்த ஆர்சிபி அணி ஓரளவு நன்றாகவே வீசியது.
மற்றபோட்டிகளில் அதிரடியில் மிரட்டிய சுனில் நரைன், ஆர்சிபி அணியின் சிறப்பான பந்துவீச்சுதாக்குதலை சமாளிக்க முடியாமல் 15 பந்துகளில் வெறும் 10 ரன்களை மட்டுமே அடித்து வெளியேறினார்.
அதேபோல ரகுவன்சி 3 ரன்னிலும், வெங்கடேஷ் ஐயர் 16 ரன்னிலும் வெளியேற 6 ஓவருக்குள்ளாகவே 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆர்சிபி அணி அசத்தியது. ஆனால் என்னதான் ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும், மறுமுனையில் 7 பவுண்டரிகள் 3 சிக்சர்கள் என பறக்கவிட்ட பிலிப் சால்ட் 14 பந்துகளில் 48 ரன்கள் அடித்து வெளியேறினார்.
97 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய கொல்கத்தா அணியை, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிங்கு சிங் இருவரும் மீட்டுவர போராடினர்.
ஒருபுறம் ஸ்ரேயாஸ் ஐயர் நிலைத்துநின்று விளையாட, 2 பவுண்டரிகள் 1 சிக்சர் என விரட்டிய ரிங்கு சிங், 4 பவுண்டரிகளை விரட்டிய ஆண்ட்ரே ரஸ்ஸல் இருவரும் ரன்களை எடுத்துவந்தனர்.
7 பவுண்டரிகள் 1 சிக்சர் என விளாசி இறுதிவரை களத்திலிருந்த ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதமடித்து அசத்த, கடைசியாக வந்து 2 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என துவம்சம் செய்த ரமன்தீப் சிங் 9 பந்தில் 24 ரன்கள் அடித்து, ஆர்சிபி அணிக்கு தலைவலியை ஏற்படுத்தினார்.
ஒருவேளை இந்த இடத்தில் ரமன்தீப் சிங் அடிக்காமல் போயிருந்தால் ஆர்சிபி அணியின் ரன்சேஸ் எளிதாகவே இருந்திருக்கும். 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 222 ரன்கள் குவித்தது.