களைகட்டிய திருவிழா மிஸ் கூவாகம் 2024 அழகி போட்டியில் முதல் இடத்தை பிடித்த வடசென்னை திருநங்கை ஷாம்ஸீ
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகத்தில் நடந்த கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
இதில் வடசென்னையை சேர்ந்த ஷாம்ஸீ மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆண்டு கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழா ஏப்ரல் 9ஆம் தேதி செவ்வாய்க்கிழமை சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் நடந்தது.
இந்த விழா பொதுவாக 15 நாட்கள் நடைபெறும். கூவாகம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான மிஸ் திருநங்கை 2024 மற்றும் மிஸ் கூவாகம் 2024 என்ற அழகி போட்டி நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த விழாவில் கலந்கு கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான திருநங்கைகள் விழுப்புரம் மற்றும் கூவாகம் கிராமத்திற்கு வந்தனர்.
இவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் சென்னை திருநங்கை நாயக்குகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணைந்து கூவாகம் திருவிழா என்ற தலைப்பில் திருநங்கைகளுக்கான பல்வேறு நிகழ்ச்சிகள் நிகழ்த்துகிறார்கள்.
ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் இந்த நிகழ்ச்சி நடைபெறும் நிலையில் இதுகுறித்து தேசிய திருநங்கை நல அமைப்பு நிறுவனர் சுதா கூறுகையில் ஒவ்வொரு ஆண்டும் அனைத்து திருநங்கைகளும் தவறாமல் கூத்தாண்டவர் கோயில் திருவிழாவில் கலந்து கொள்வோம்.
அதன் தொடர்ச்சியாக மிஸ் திருநங்கை, மிஸ் கூவாகம் திருவிழா நடைபெறும். இந்த நிகழ்ச்சிகள் திருநங்கைகளின் தனித்திறமைகளை வெளிக் கொண்டு வருவதற்காக நடைபெறுகிறது.
இந்த மிஸ் திருநங்கை அழகு போட்டியில் சிறந்த 7 திருநங்கைகளை தேர்வு செய்து அதிலிருந்து முதல் மூன்று இடங்களுக்கு மிஸ் திருநங்கை தேர்வு செய்யப்படுவர் என்றார்.
இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டார். அவர் பேசுகையில் திரு என்றால் ஆண்களை குறிக்கும், நங்கை என்றால் பெண்களைக் குறிக்கும்.
இரு பாலினங்களையும் கொண்டுள்ள இவர்களுக்கு திருநங்கை என்ற பெயர் சூட்டியவர் முன்னாள் முதல்வர் கருணாநிதி.
தற்போது திருநங்கைகள் கல்வி உள்பட பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்துள்ளனர். இங்கு வந்துள்ள திருநங்கைகளில் முனைவர் பட்டம் பெற்றவர்களும் உள்ளனர்.
அனைவரும் சமம், சமத்துவம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துவதற்குதான் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றார்.
இந்த நிலையில் திருநங்கைகளுக்கான அழகி போட்டி நேற்று நடந்தது. இதில் மிஸ் கூவாகமாக சென்னையை சேர்ந்த ஷாம்ஸீ முதலிடத்தையும் புதுவையில் மருத்துவம் பயிலும் வர்ஷா இரண்டாவது இடத்தையும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சுகப்பிரியா மூன்றாவது இடத்தையும் பெற்றனர்.
முதல் பரிசு வென்ற ஷாம்ஸீ செய்தியாளர்களிடம் கூறியதாவது: என்னை அழகி போட்டியில் கலந்து கொள்வதற்கு ஊக்கப்படுத்திய எனது அம்மா, என்னுடைய மேக்கப் ஆர்டிஸ்டுக்கு நன்றி.
நீங்கள் எடுக்கும் சிறு முயற்சிகள் கூட உங்கள் வாழ்க்கையில் மாற்றம் கொண்டு வரும். திருநங்கைகளுக்கு போதிய வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்தால் அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட மாட்டார்கள்.
என் அம்மா காலத்தில் பாலியல் தொழில் அதிக அளவில் நடந்தது. என்னுடைய காலத்தில் அது பாதியாக குறைந்தது.
இதே என் மகள் காலத்தில் அது முற்றிலுமாக குறைய நீங்கள் உதவி புரிய வேண்டும் என கேட்டுக் கொண்டார். விழாவில் சினிமா நடிகைகள் அம்பிகா, தீபா, நடிகர்கள் ஸ்ரீகாந்த், உள்ளிட்டோர் மற்றும் ஏராளமான திருநங்கைகள் கலந்து கொண்டனர்