ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் கடயம் பகுதியைச் சேர்ந்தவர் சினேகா. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த வெங்கடானந்து என்பவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி சினேகா திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி நேற்று அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் சினேகா திருமணம் நடந்தது.
தாலி கட்டிய பிறகு சினேகா மணப்பெண் அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தார். வழக்கம்போல திருமண மண்டபத்தில் ஒரு புறம் விருந்து நடந்து கொண்டிருந்தது.
மாப்பிள்ளை வீட்டார் கும்பலாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் சினேகாவின் தாய் மற்றும் அவருடைய சகோதரர் திடீரென திருமண மண்டபத்திற்கு வந்தனர்.
மணப்பெண் அறையில் காதல் கணவருடன் இருந்த சினேகாவை அவருடைய சகோதரர் கையை பிடித்து வெளியே இழுத்து வந்தார். அதனை பார்த்து திடுக்கிட்ட அவருடைய நண்பர்கள் தடுக்க முயன்றனர். அவர்களை சினேகாவின் சகோதரர் கடுமையாக தாக்கினார்.
சினேகாவை அவரது சகோதரர், தாயார் இருவரும் சேர்ந்து மண்டபத்திற்கு வெளியே இழுத்து செல்ல முயன்றனர். அப்போது மாப்பிள்ளை வீட்டார் அவர்களை சூழ்ந்து கொண்டு விடாமல் தடுத்தனர்.
அவர்கள் மீது மிளகாய் பொடிகளை தூவினர். மேலும் நாற்காலிகளை தூக்கி வீசி அடித்தனர். இதனால் திருமண மண்டபத்தில் கூச்சல் குழப்பம் அலறல் சத்தம் என களேபரம் ஏற்பட்டது.
சினேகாவை அவருடைய சகோதரர் கையை பிடித்து இழுத்துச் சென்றார். கணவர் அவரைவிடாமல் பிடித்துக் கொண்டார். இருவரையும் சேர்த்து தரதரவென இழுத்து சென்றனர்.
இதை தடுக்க முயன்ற மாப்பிள்ளையின் நண்பர் ஒருவரை சினேகாவின் சகோதரர் கடுமையாக தாக்கினார். இதில் அவர் பலத்த காயமடைந்தார்.
திருமண மண்டபத்தில் இருந்தவர்கள் இதனை தடுத்து நிறுத்தினர். இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் இது குறித்து மணப்பெண்ணிடம் முதலில் விசாரித்தனர்.
அப்போது அவர் தன்னை கட்டாயப்படுத்தி தாய் மற்றும் சகோதரர் இங்கிருந்து கடத்த முயற்சிப்பதாக தெரிவித்தார். பொலிசார் சினேகாவின் தாய் மற்றும் சகோதரரை பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.
அவர்கள் மீது தாக்குதல், கடத்தல் முயற்சி, மணப்பெண்ணின் நகை திருட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
மிளகாய் பொடி தூவி தாக்கி மணப்பெண்ணை கடத்த முயன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சினிமாவை மிஞ்சும் இந்த காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Attempt to #KidnapBride from marriage hall by sprinkling chilli powder; couple, both classmates at veterinary college, had eloped & married at Vijayawada Durga temple on 13th; Groom informed his family, they organised formal event on 21st, from where bride family tried to abduct pic.twitter.com/jXy0l0e2P9
— Uma Sudhir (@umasudhir) April 22, 2024