டெல்ஹி அருண் ஜெய்ட்லி விளையாட்டரங்கில் புதன்கிழமை (24) நடைபெற்ற 17ஆவது இண்டியன் பீறிமியர் லீக் அத்தியாயத்தின் 40ஆவது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை 4 ஓட்டங்களால் பரபரப்பான முறையில் டெல்ஹி கெப்பிட்டல்ஸ் வெற்றிகொண்டது.

இரண்டு அணிகளும் சம அளவில் மோதிக்கொண்ட இந்தப் போட்டியில் வெற்றிபெறுவதற்கு டெல்ஹி கெப்பிட்டல்ஸுக்கு கடைசி 2 ஓவர்களில் 37 ஓட்டங்கள் தேவைப்பட்டது.

19ஆவது ஓவரில் 18 ஓட்டங்களைக் குவித்த டெல்ஹி கெப்பிட்டல்ஸ் ஒரு விக்கெட்டை இழந்தது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு மேலும் 19 ஓட்டங்கள் தேவைப்பட்டது. முதல் இரண்டு பந்துகளில் ரஷித் கான் 2 பவுண்டறிகளை விளாசினார்.

இதன் காரணமாக குஜராத் வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முக்கேஷ் குமாரின் அடுத்த இரண்டு பந்துகளில் ரஷித் கானினால் ஓட்டம் பெற முடியாமல் போனது.

ஐந்தாவது பந்தில் சிக்ஸ் விளாசிய ரஷித் கானினால் கடைசிப் பந்தில் வெற்றிக்கு தேவைப்பட்ட 5 ஓட்டங்களைப் பெறமுடியாமல் போனது.

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்ஹி கெப்பிட்டல்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 224 ஓட்டங்களைப் பெற்றது.

அக்சார் பட்டேல், அணித் தலைவர் ரிஷாப் பான்ட் ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்ததுடன் 4ஆவது விக்கெட்டில் 68 பந்துகளில் 113 ஓட்ங்களைப் பகிர்ந்தனர்.

அக்சார் பட்டேல் 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 66 ஓட்டங்களைக் குவித்தார்.

தொடர்ந்து ரிஷாப் பான்ட், ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 18 பந்துகளில் 67 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர்.

ரிஷாப் பான்ட் 43 பந்துகளில் 5 பவுண்டறிகள், 8 சிக்ஸ்கள் அடங்கலாக 88 ஓட்டங்களுடனும் ட்ரைஸ்டன் ஸ்டப்ஸ் 26 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர்.

பந்துவீச்சில் சந்தீப் வொரியர் 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

225 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 220 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

ரிதிமான் சஹா, சாய் சுதர்ஷன் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 82 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை ஓரளவு நல்ல நிலையில் இட்டனர்.

ரிதிமான் சஹா 39 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தபின்னர் குஜராத் டைட்டன்ஸ் சீரான இடைவெளியில் 2 விக்கெட்களை இழந்தது.

திறமையாகத் துடுப்பெடுத்தாடிய சாய் சுதர்ஷன் 39 பந்துகளில் 65 ஓட்டங்களைப் பெற்றார்.

டேவிட் மில்லர் 23 பந்துகளில் 55 ஓட்டங்களைப் பெற்று குஜராத் டைட்டன்ஸுக்கு நம்பிக்கைய ஏற்படுத்தினார்.

கடைசியில் ரஷித் கான் வெற்றிக்காக கடுமையாக முயற்சித்தபோதிலும் அது கைகூடாமல் போனது. ரஷித் கான்11 பந்துகளில் 21 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் ரசிக் சலாம் 44 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் குல்தீப் யாதவ் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

Share.
Leave A Reply