”பாடல் கேசட்டுகள், சிடி-க்கள் விற்பனை மூலம் வணிக ரீதியாக இளையராஜா பெற்ற தொகை யாருக்குச் சொந்தம்?” என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
இசையமைப்பாளர் இளையராஜாவின் சுமார் 4 ஆயிரத்து 500 பாடல்களை பயன்படுத்துவதற்கு எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசைத்தட்டு நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன.
ஆனால், ஒப்பந்தம் முடிந்த பிறகும், காப்புரிமை பெறாமல் தனது பாடல்களை பயன்படுத்துவதாக கூறி இளையராஜா வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இசைத்தட்டு நிறுவனங்களுக்கு இடைக்கால தடை விதித்தது.
ஆனால், படத்தின் காப்புரிமை தயாரிப்பாளரிடம் இருப்பதாகவும், அவர்களிடம் செய்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் பாடல்களை பயன்படுத்த தங்களுக்கு அதிகாரம் இருப்பதாகவும் எக்கோ நிறுவனம் சார்பிலும் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டது.
ஏப்ரல் 17-ம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, ”இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் என்று அவர் நினைப்பதை ஏற்க முடியாது” என்று நீதிமன்றம் அதிரடி காட்டியது. இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது ”பாடல் வரிகள், பாடகர் அனைத்தும் சேர்ந்து தான் பாடல் உருவாகிறது. வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை என இருக்கும் போது, பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்… பாடல்கள் கேசட்டுகள், சிடிக்கள் விற்பனை மூலம் வணிக ரீதியாக இளையராஜா பெற்ற தொகை யாருக்குச் சொந்தம்?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும், ”வணிக ரீதியாக இளையராஜா பெற்ற தொகை மேல்முறையீட்டு வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட்டது” எனவும் அறிவித்த நீதிபதிகள், “இசையமைப்பு என்பது கிரியேட்டிவ் பணி என்பதால் காப்புரிமை சட்டம் இதற்குப் பொருந்தாது” எனவும் தெரிவித்தனர்.