இலங்கைக்கு இன்று (24) காலை வருகை தந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரெய்சியை (Ebrahim Raisi) வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு பிற்பகல் கொழும்பில் நடைபெற்றது.
ஜனாதிபதி செயலகத்திற்கு வருகை தந்த ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரெய்சியை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வரவேற்றதுடன், இதன்போது முப்படையினரின் அணிவகுப்பு மாியாதையும் இடம்பெற்றது.
ஈரான் அரச தலைவரை வரவேற்கும் நோக்கில், 21 மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன.
பாகிஸ்தானுக்கான விஜயத்தை நிறைவு செய்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரெய்சி விசேட விமானமொன்றின் மூலம் இன்று காலை 10.30 அளவில் மத்தளை விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.
இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் செங்கம்பள வரவேற்பளித்து ஈரான் ஜனாதிபதியை பிரதமர் தினேஷ் குணவர்தன வரவேற்றார்.
உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தை திறந்து வைப்பதற்கு முன்னர், மத்தளை விமான நிலைய வளாகத்திலுள்ள விசேட நினைவுப் புத்தகத்திலும் ஈரான் ஜனாதிபதி இப்ரஹிம் ரெய்சி நினைவுக்குறிப்பொன்றை பதிவிட்டார்.
உமா ஓயா பல்நோக்கு திட்டத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ரஹிம் ரெய்சி மத்தளை விமான நிலையத்திலிருந்து கரதகொல்லவுக்கு சென்றார்.
இதன்போது, ஈரான் ஜனாதிபதியை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வரவேற்றார்.
அதன் பின்னர் இரண்டு ஜனாதிபதிகளும் இணைந்து உமா ஓயா பல்நோக்கு திட்டத்தை மக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தனர்.
2007 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய, உமா ஒயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டம் 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.