மத்திய கிழக்கின் மிக மோசமான பகையாளி நாடுகள். இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் இன்று ஒட்டுமொத்த உலகையும் அச்சம் கொள்ள வைக்கும் அளவிற்கு கீழிறங்கியுள்ளன.

கடந்த 13ஆம் திகதி இஸ்ரேலிய மண்ணின் மீது ஈரான் ஏவுகணைகளையும், ஆளில்லா விமானங்களையும் செலுத்தி நடத்திய தாக்குதலை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையில் நேரடி போர் மூளுமோ என்ற அச்சம் தலைதூக்கி உள்ளது.

ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் நீண்டகாலம் நிலவிய நிழல் யுத்தத்தில், நேரடி தாக்குதல் நடத்தப்பட்ட முதற்சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்நாடுகள் இன்றிருந்த நிலைக்குத் தள்ளப்பட்டது வரையான வரலாறு சுவாரஷ்யமானது. அந்த வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பதன் மூலம் சமகால நெருக்கடிகள் பற்றிய புரிந்துணர்வை ஏற்படுத்திக் கொள்ளக் கூடியாக இருக்கும்.

இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையிலான பகைமை உணர்வைத் தீர்மானிக்கக்கூடிய பல்வேறு காரணிகள் உள்ளன. அவற்றில் பிராந்திய பூகோள அரசியல் காரணிகளைத் தவிர்த்துப் பார்த்தால், பலஸ்தீன மக்கள் தொடர்பில் இஸ்ரேல் அனுசரிக்கும் கொள்கை மிகவும் பிரதானமானது.

காஸாவில் வாழும் பலஸ்தீனர்கள் மீது இஸ்ரேலியப் படைகள் மிகவும் கொடுமையான தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டு, அவர்களது இருப்பையே கேள்விக்கு உள்ளாக்கிய சந்தர்ப்பத்தில் சுன்னத்துல் ஜமாஅத் கொள்கைகளை அனுசரிக்கும் அரேபிய முஸ்லிம் நாடுகள் பெரும்பாலும் சுயநல அரசியல் என்ற எல்லைக்குள் நின்று கொண்டு தான் பலஸ்தீனர்களின் நலன்கள் பற்றி பேசின.

இருந்தபோதிலும், ஷியா கோட்பாட்டின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட ஈரானிய தேசம் எதுவித தயக்கமும் இன்றி காஸா மக்களுக்காக குரல் கொடுத்தது. சர்வதேச அரங்குகளில் இஸ்ரேலை எதிர்த்து மோதியது.

ஹமாஸ் இயக்கதிற்கு எதிராக இஸ்ரேலியப் படைகள் போர் தொடுக்கத் தொடங்கியதை அடுத்து, ஈரானின் சார்பு சக்திகள் இஸ்ரேல் மீதோ, இஸ்ரேலிய நிலைகள் மீதோ தாக்குதல் நடத்தத் தயங்கவில்லை.

குறிப்பாக, லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கம் எல்லைப் பிரதேசத்தில் இஸ்ரேலியப் படைகள் மீது நேரடி சண்டையில் இறங்கின. இஸ்ரேலைத் தண்டிக்கும் வகையில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கடற்பரப்பில் கப்பல் பயணங்களை முடக்கக்கூடிய தாக்குதலை நடத்தினார்கள்.

இன்று எலியும் பூனையாக இருந்தாலும், இவ்விரு நாடுகளுக்கும் இடையில் சுமுகமான உறவுகள் நிலவிய காலமொன்று இருந்ததையும் நம்பித் தான் ஆக வேண்டும்.

1948ஆம் ஆண்டு இஸ்ரேல் தனியொரு நாடாக உருவாக்கப்பட்ட சமயத்தில், ஈரான் யூத தேசத்தை அங்கீகரித்ததுடன், இரண்டும் நட்பு நாடுகளாக இருந்தன.

இஸ்ரேல் உருவாக்கப்பட்டதைத் தொடர்ந்து, அதனை முதலில் அங்கீகரித்த நாடு துருக்கி என்றால், இஸ்ரேலை ஏற்றுக் கொண்ட இரண்டாவது முஸ்லிம் நாடாக ஈரான் திகழ்ந்தது.

அரேபிய நாடுகள் இஸ்ரேல் மீது போர் கூடத் தொடுத்தன. முதலாவது அரேபிய இஸ்ரேலிய யுத்தத்தில் ஈரான் பங்குபற்றவில்லை. இஸ்ரேல் போரில் வென்றபோது, ஈரான் இராஜதந்திர உறவுகளையும் ஏற்படுத்திக் கொண்டது.

அந்தக் காலப்பகுதியில் மத்திய கிழக்கின் ஏனைய நாடுகளை விடவும் ஈரானில் கூடுதலான யூதர்கள் வாழ்ந்தார்கள்.

Mohammad Reza Pahlavi

ஈரானை ஷா மன்னர் ஆட்சி செய்த காலத்தில், இஸ்ரேலின் முதலாவது பிரதமர் டேவின் பென் கூரியன், துருக்கியுடனும், ஈரானுடனும் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தி அரேபிய மண்ணிற்கு அப்பாலுள்ள நாடுகளுடன் பகைமையை சமாளிக்க முனைந்த விதம் பற்றியும் வரலாற்றில் பதிவாகி இருக்கின்றன.

அரேபிய நாடுகளின் பொருளாதார பகிஷ்கரிப்பைத் தாண்டி ஈரான் இஸ்ரேலுக்கு எரிபொருளை விற்பனை செய்தது. இதற்கு பதிலாக, இஸ்ரேலின் மொஷார்ட் இயக்கம் ஷா மன்னரின் தலைமையில் இயங்கிய ஈரானின் சவாக் என்ற ரகசிய பொலிஸ் இயக்கத்திற்கு பயிற்சி அளித்தது.

ஷா மன்னருக்கும், இஸ்ரேலிய ஆட்சியாளர்களுக்கும் அமெரிக்காவின் ஆதரவு இருந்ததால், 70களில் தெஹ்ரானில் இஸ்ரேலின் தூதரகமும் ஸ்தாபிக்கப்பட்டது. இருநாடுகளுக்கும் இடையில் வர்த்தக உறவுகளும் சீரடைந்தன.

Ali_khamenei

 

இவையெல்லாம் ஈரானின் இஸ்லாமிய புரட்சியை அடுத்து மாறத் தொடங்கியது. இந்தப் புரட்சியின் மூலம் ஷா மன்னர் ஆட்சியில் இருந்து தூக்கியெறிப்பட்டார்.

ஈரான் இஸ்லாமிய இராஜ்ஜியமாக பரிணமித்தது. இஸ்லாத்தை முன்னிறுத்திய புதிய ஆட்சி நிர்வாகக் கோட்பாட்டை ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லா கொமெய்னி அறிமுகம் செய்தார்.

இந்தக் கோட்பாட்டுக்குள் சொந்த நலன்களுக்காக பலஸ்தீன மண்ணை ஆக்கிரமிக்கக்கூடிய நாடாக இஸ்ரேல் கருதப்பட்டது. ஈரானின் ஆன்மீகத் தலைவர் இஸ்ரேலை சிறிய சாத்தான் என்றும், அமெரிக்காவை பெரும் சாத்தான் எனவும் முத்திரை குத்தினார். இஸ்ரேலும் இஸ்லாமிய குடியரசாக ஈரானை அங்கீகரித்த மறுத்தது.

இதன் விளைவாக, இஸ்ரேலுடனான சகல உறவுகளையும் ஈரான் நிறுத்தியது. இஸ்ரேலுக்கான சகல தரைவழி வான்வழி போக்குவரத்து மார்க்கங்களை தூண்டித்தது.

ஈரானின் இஸ்ரேலிய தூதரகம் பலஸ்தீன தூதரகமாக மாற்றப்பட்டது. பிராந்திய பூகோள அரசியலில் செல்வாக்கு மிக்க சக்தியாக மாறும் திசை நோக்கிப் பயணித்த ஈரான், அமெரிக்காவின் துணையுடன் இயங்கிய இஸ்ரேல், சவூதி அரேபியா ஆகிய இரு நாடுகளுடனும் பகைமை பூண்டதும் உலகறிந்த உண்மை.

இந்தக் காலப்பகுதியில் ஈரானுக்கும், இஸ்ரேலுக்கும் இடையில் வணிக ரீதியான தொடர்புகள் உத்தியோகபூர்வமற்ற முறையில் தொடர்ந்த போதிலும், உறவுகள் அதல பாதாளம் வரை சென்றன.

சிரியா, ஈராக், லெபனான், யெமன் போன்ற நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிராக இயங்கக்கூடிய கிளர்ச்சிக் குழுக்களையும், ஆயதபாணி அமைப்புக்களையும் ஈரான் போஷித்து வளர்த்தபோது, இரு நாடுகளுக்கும் இடையில் நிழல் யுத்தம் உருவானது.

இந்த சமயத்தில் தான், ஈரானின் ஆதரவுடன் இஸ்ரேலுக்கு எதிராக முதன் முதலில் ஆயுதமேந்திய அமைப்பாக இஸ்லாமிய ஜிஹாத் உருவானது.

பல வருடகாலமாக ஈரானும், இஸ்ரேலும் வெளித்தெரியாத ஆயதப் போரை நடத்தி வந்தன. மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் எங்கேனும் இஸ்ரேலின் நிலைகள் இருக்கும் பட்சத்தை அவற்றை ஈரான் தாக்குவதும், ஈரானின் நிலைகள் உள்ள பட்சத்தில் அவற்றை இஸ்ரேல் தாக்குவதும் வழமையான விடயமாக மாறியது. இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான உளவு யுத்தமும் தீவிரம் பெற்றது.

ஈரானின் அணு விஞ்ஞானிகளை சூட்சுமமாக கொன்றொழித்து, அணு உலைகளின் செயற்பாடுகளை செயலிழக்கச் செய்ததன் பின்னணியில் இஸ்ரேலிய உளவாளிகளுக்கு பெரும் பங்கு உணடு.

மறுபுறத்தில், யூதர்களை இலக்கு வைத்து ஈரான குண்டுத் தாக்குதல்களையும், துப்பாக்கி சூடுகளையும் நடத்தியதாக பரவலாக சந்தேகிக்கப்படுகிறது.

2010ஆம் ஆண்டு ஸ்டக்ஸ்நெட் என்ற சைபர் ஆயதத்தின் மூலம் ஈரானின் அணுச்செறிவாக்கல் சுழற்சி இயந்திரங்கள் செயலிழக்கச் செய்யப்பட்டமை முக்கியமானதொரு விடயமாகும்.

இந்த மென்பொருளை அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து உருவாக்கியிருக்கலாம் என உலக நாடுகள் பரவலாக நம்புகி;ன்றன. தொழிற்சாலை இயந்திரங்கள் மீது இலக்கு வைத்து நடத்தப்பட்ட முதலாவது சைபர் தாக்குதல் இதுவெனவும் கருதப்படுகிறது.

இருநாடுகளுக்கும் இடையில் இத்தகைய நிழல் யுத்தங்கள் தொடர்ந்து நீடித்தாலும், பலஸ்தீனர்கள் விவகாரத்தில் ஈரானிய தலைவர்கள் பகிரங்கமாக குரல் கொடுப்பதற்கு தயங்கியது. கிடையாது.

இஸ்ரேல் என்ற தேசத்திற்கு முடிவு கட்டி, பலஸ்தீன பிராந்தியங்களில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை நிறுத்த வேண்டும் என 1979ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஆட்சியில் இருந்த சகல ஈரானிய தலைவர்களும் வலியுறுத்தி வந்திருக்கிறார்கள்.

இதற்கு பதிலாக, ஈரான் என்றாவது தாக்குதல் நடத்தக்கூடும் என்ற சந்தேகத்துடன், அத்தகைய தாக்குதலைத் தடுத்து நிறுத்துவதற்காக இஸ்ரேல் பாதுகாப்பை பலப்படுத்தி வந்திருக்கிறது.

உலகின் வல்லரசுகள் கூடி உருவாக்கிய ஈரானின் அணுசக்தித் திட்டத்தையே ‘இது மாபெரும் வரலாற்றுத் தவறு’ என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ பகிரங்கமாக பிரகடனம் செய்ததை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையில் பதற்றநிலை தீவிரம் பெற்றிருந்தது.

கடந்த முதலாம் திகதி இஸ்ரேலிய போர் விமானங்களாக சந்தேகிக்கப்படும் வானூர்திகள் சிரியாவில் உள்ள ஈரானிய தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தி, இந்தத் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டதை அடுத்து சடுதியான மாற்றம் ஏற்பட்டது.

கொல்லப்பட்ட 12 பேரில் ஈரானிய ஜெனரல்கள் இரண்டு பேரும், ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல் படையணியின் ஐந்து உத்தியோகத்தர்களும் அடங்குவார்கள்.

இந்தத் தாக்குதலில் மொஹம்மட் ரீஸா ஸஹீதி என்பவரும் கொல்லப்பட்டார். இவர் வெளிநாட்டு சக்திகளுடனான உறவுகளை நிர்வகிப்பதில் முக்கிய பங்கை வகித்தவர். மிகவும் முக்கியமான இராஜதந்திரியாகவும் கருதப்படுபவர்.

நான்கு வருடங்களுக்கு முன்னர் ஈரானிய மக்கள் மிகவும் நேசித்த தளபதியான காஸிம் சுலைமானியை ஆளில்லா விமானத்தின் மூலம் அமெரிக்கா சுட்டுக் கொன்றிருந்தது. அவருக்குப் பின்னர், தாக்குதலில் உயிரிழக்கும் மிகவும் முக்கியமான ஒருவராக மொஹம்மட் ரீஸா ஸஹீதி கணிக்கப்படுகிறார்.

சிரியாவில் உள்ள ஈரானிய தூதரகத்தை நிர்மூலமாக்கிய தாக்குதலானது, ஈரானுக்கும இஸ்ரேலுக்கும் இடையில் நீடித்த நிழல் யுத்தத்தின் விதிமுறைகளை மாற்றியிருக்கிறது எனலாம்.

இன்று இரு நாடுகளும் பரஸ்பரம் மற்றையதன் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் குண்டுகளைப் போட்டு வருகின்றன. ஏவகணைகளை செலுத்தி வருகின்றன.

தாக்குதல் பற்றியும், தாக்குதல் முறியடிக்கப்பட்ட விதம் பற்றியும் தகவல்களை போட்டி போட்டுக் கொண்டு தெரிவிக்கும் பிரசார யுத்தமும் உண்டு.

ஈரானின் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதில் தாக்குதல் நடத்தியதை அடுத்து, மத்திய கிழக்கில் முற்றுமுழுதான யுத்தம் ஏற்படுமோ என்ற அச்சம் தீவிரமடைந்து, வழமை போல, இரு சாராரும் பொறுமை காக்க வேண்டும் என உலகத் தலைவர்கள் போதிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்.

இத்தகைய போர் மூளுமானால், அது இஸ்ரேலிய – ஈரானிய உறவுகள் என்ற புத்தகத்தில் இன்னொரு அத்தியாயத்தை சேர்க்கும் என்பதைத் தான் இப்போதைக்கு சொல்ல முடிகிறது.

மூலம்: வீரகேசரி -சதீஷ் கிருஷ்ணபிள்ளை

Share.
Leave A Reply