நம் மூளையின் செயல்திறன் நன்றாக இருக்க வேண்டுமெனில் ஆழ்ந்த இரவு உறக்கம் கொள்ள வேண்டும்.

நான் நலமாக இருக்கிறேன், இன்றைய நாளை நான் மகிழ்ச்சியாக எதிர்கொள்வேன் என்று நமக்கு நாமே ஊக்கப்படுத்திக்கொள்ள வேண்டும்.

நம் வாழ்க்கையின் வெற்றி என்பது மூளையின் நலனில்தான் உள்ளது. இந்த மூளையை நலமாக வைத்துக்கொள்ள நாம் செய்ய வேண்டியவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம். உங்கள் மூளையின் நலத்திற்கான 10 திறவுகோல்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

1. ஆழ்ந்த இரவு உறக்கம்

2. தன்னைத்தானே ஊக்கப்படுத்திக் கொள்வது

3. சூரிய உதயத்தைப் பார்த்தல்

4. உடல் மற்றும் மனத்திற்கான பயிற்சி

5. சரிவிகித உணவு

6. நாளும் புதியவற்றைக் கற்றுக்கொள்ளுதல்

7. மனத்தை ஒருங்கிணைத்து வாழ்தல்

8. சமூக வலைத்தளங்களை அளவாகப் பயன்படுத்துதல்

9. உறங்கச் செல்லும் முன் தன்னாய்வு செய்தல்

10. நேர்மறை எண்ணங்கள்

ஆழ்ந்த இரவு உறக்கம்:

மூளையின் நலனுக்கான முதல் திறவுகோல் இதுதான். ஆம்! நாம் உறங்கும்போதுதான் நம் மூளையில் நினைவுத்திறன் வலுப்படுத்தப்படுகிறது.

நம் மூளையின் செயல்திறன் நன்றாக இருக்க வேண்டுமெனில் ஆழ்ந்த இரவு உறக்கம் கொள்ள வேண்டும்.

இரவு 11 மணி முதல் காலை 4 மணிவரை நம் மூளைக்கு ஓய்வு கொடுத்தால்தான் நம் மூளையில் உள்ள கடிகாரம் (Circadian Clock) நன்முறையில் இயங்கும்.

நம் நாளமில்லாச் சுரப்பிகள் நன்றாக இயங்குவதற்கும் உடலின் வெப்பநிலை சீராக இருப்பதற்கும் மறுநாள் நாம் புத்துணர்ச்சியுடன் இருப்பதற்கும், இந்த இரவு உறக்கம் அவசியமானது.

தன்னைத்தானே ஊக்கப்படுத்திக் கொள்வது:

காலையில் எழுந்தவுடன் முகத்தைக் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பிறகு கண்ணாடி முன் நின்று நான் என்னை விரும்புகிறேன் என்று புன்னகையுடன் கூற வேண்டும்.

நான் நலமாக இருக்கிறேன், இன்றைய நாளை நான் மகிழ்ச்சியாக எதிர்கொள்வேன் என்று நமக்கு நாமே ஊக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். இதைத் தான் Self suggestion என்று கூறுகிறோம். இதை நாளும் செய்து பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

சூரிய உதயத்தைப் பார்த்தல்:

காலையில் தோன்றும் செந்நிறக் கதிரவனை முதல் மூன்று நிமிடங்கள் பார்க்கும்போது, அக்கதிர்களானது ரெட்டினாவில் விழும்போது ரெட்டினாவிலிருந்து ரெட்டினோ ஹைப்போதலாமிக் வழியாக அது நம் மூளையில் உள்ள மூன்றாவது கண் என்றழைக்கப்படும், பீனியல் சுரப்பியைச் சென்றடைகிறது.

இப்பகுதிதான் நன்கு உறக்கம் வருவதற்கும், உள்ளுணர்வுகளைத் தூண்டுவதற்கும் அவசியமானது. நிறையச் செயல்களில் நாம் வெற்றி பெறுவதற்கு நமக்குள் தோன்றும் உள்ளுணர்வு மிகவும் முதன்மையானது.

அதற்கு நாம் கதிரோன் தோன்றுவதை அல்லது மறைவதை ஒன்று முதல் மூன்று நிமிடங்களாவது இடைவெளி விட்டு விட்டுக் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும்.

உடல் மற்றும் மனத்திற்கான பயிற்சி:

நாளும் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். நாம் செய்யும் அந்த ஒரு மணி நேரப் பயிற்சியை, உடலுக்கான பயிற்சி, மனத்திற்கான பயிற்சி என்று பிரித்துக்கொள்ள
சரிவிகித உணவு:

நாம் என்ன உடலுக்குக் கொடுக்கிறோமோ, அதுதான் நாம் யார் என்பதை உறுதிசெய்கிறது. வயிறு தான் நம் இரண்டாவது மூளை என்பதைப் பற்றியும், நம் மூளைக்கு Neurotransmitters எனப்படும் நரம்பியக் கடத்திகளின் உருவாக்கத்திற்கும், நாம் உண்ணும் உணவுதான் மூலக்கூறு.

அறிவுத் திறனுக்கு அசிடைல்கோலின் என்னும் நரம்பியக் கடத்திகள் வேண்டும். அசிடைல்கோலின் நன்றாக இருந்தால்தான் நினைவுத்திறன் நன்றாக இருக்கும். அசிடைல்கோலின் குறைவாக இருந்தால் டெமன்டியா என்னும் நினைவு மறதி நோய் வந்துவிடும். நாளும் இரண்டு பழங்களாவது உண்ண வேண்டும். அதில் தான் மூளையின் நலனுக்கான வைட்டமின்கள் உள்ளன.

எதைச் சாப்பிட்டாலும் அரைவயிறு உணவு, கால் வயிறு தண்ணீர், கால் வயிறு வெற்றிடமாக வைத்துக்கொள்ளுங்கள். அப்படி வைத்திருந்தால் நம் மூளையின் நலம் காக்கப்படும்.

நாளும் புதியவற்றைக்கற்றுக்கொள்ளுதல்:

“கண்டதைக் கற்றவன் பண்டிதனாவான்” என்பது பழமொழி. எதையும் வேண்டாம் என்று ஒதுக்கிவிடாமல் நாம் நாளும் புத்தம்புதிய தகவல்களைக் கற்றுக்கொள்ள முயல வேண்டும்.

புதிய செய்திகள் மூளையை நன்கு தூண்டும். நான் என்னை உயர்த்திக் கொள்வதற்காக நாளும் முயல்கிறேன் என்று இரவு உறங்கச் செல்வதற்கு முன் மனத்திற்குள் சொல்ல வேண்டும்.

மனத்தை ஒருங்கிணைத்து வாழ்தல்:

இப்போதெல்லாம் எல்லாரிடமும் மனஅழுத்தம் மற்றும் எதிர்மறையான எண்ணங்கள் அதிகமாக உள்ளன. கடவுளிடம் வேண்டும் போது கூட, இது நடக்குமா நடக்காதா என்று நம்பிக்கை இன்றி வேண்டத் தொடங்கி விட்டோம்.

மனத்தைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு முயற்சியே இந்த Mindful Living. அதாவது இந்த நிமிடம் நாம் என்ன வேலை செய்கிறோமோ அதில் மட்டுமே கவனம் வைத்து வேலை செய்வது. எடுத்துக்காட்டுக்கு, சாப்பிட்டால் அதை மட்டும் செய்வது. படித்தால் முழுக்கவனத்துடன் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துவது. இப்படி எந்த வேலை செய்தாலும் அதில் மட்டுமே கவனம் செலுத்தினால் நம்முடைய மூளையின் நலன் மேம்படுத்தப்படும்.

ஒரு நாளைக்கு நமக்கு 60,000 எண்ணங்கள் வந்து சென்றாலும், நாம் செய்யும் வேலையை மட்டுமே கவனத்தில் கொண்டு செயல்களைச் செய்ய வேண்டும். இதைத்தான் Mindful Living என்றோம்.

சமூக வலைத்தளங்களை அளவாகப் பயன்படுத்துதல்:

நாம் தூங்குவதற்கு முன்னால் அலைபேசி மற்றும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவது இயல்பாகி விட்டது (வாட்ஸ்ஆப் ஃபேஸ்புக் யூடியூப்). இவையனைத்துமே நமக்கு நன்மைகள் செய்கின்றன என்று நினைக்கிறீர்களா? ஒரு விழுக்காடு இதில் நன்மை இருக்கலாம். ஆனால் மீதமுள்ள 99 விழுக்காடு நம்மை இயல்பு வாழ்க்கையில் இருந்து திசைத் திருப்புபவையே.

இவற்றை ஒதுக்கிட வேண்டும் என்று நான் கூறவில்லை. ஆனால், அளவோடும் எச்சரிக்கையோடும் பயன்படுத்த வேண்டும். Mindful Living எந்த அளவிற்கு அவசியமோ, அதேபோல் இவைகளை எச்சரிக்கையோடு பயன்படுத்துவதும் தேவைதான்.

எடுத்துக்காட்டுக்கு நாம் ஒரு வேலை செய்ய வேண்டும் என்று அலைபேசியை எடுப்போம். அப்போது ஒரு தகவல் வந்திருந்தால் அதைப் பார்த்துவிட்டு, பார்க்க வந்த வேலையை மறந்து விடுவோம்.

சில நேரங்களில் எதற்காக அலைபேசியை எடுத்தோம்? என்பதே நினைவுக்கு வருவதில்லை. அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்றால், சமூக வலைத்தளங்களை அளவோடு பயன்படுத்த வேண்டும்.

உறங்கச் செல்லும் முன் தன்னாய்வு செய்தல்:

இரவு உறங்குவதற்கு முன்பு காலையிலிருந்து இரவு வரை நடந்தவற்றைத் தன் ஆய்வு செய்ய வேண்டும்.

நம்மை அதிகமாக ஆட்கொண்ட உணர்வு நிலை எது? அது நம் உடலுக்கு நன்மை பயக்கக் கூடியதா? இல்லை நாம் மாற்றிக்கொள்ள வேண்டியதா? என்பதைப் பற்றித் தன் ஆய்வு செய்து பார்க்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் நம் மூளை நம்மைச் சரி செய்துவிடும்.

நேர்மறை எண்ணங்கள்:

நேர் மறை எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். மேற்கூறிய 10 திறவுகோல்களும் நம் மூளையின் நலனுக்கு மிகவும் இன்றியமையானவை. உடல் மற்றும் மனம் இரண்டும் நலமாக இருக்க மூளையைப் பேணிப்பாதுகாக்க வேண்டியது மிகவும் நன்று என்பதை உணர்ந்து உங்கள் வாழ்க்கையில் பின்பற்றுங்கள்.

Share.
Leave A Reply