காஸா போர் நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றம் தொடர்பான தமது முன்மொழிவுகளுக்கு இஸ்ரேலின் பதில் முன்மொழிவு அறிக்கை தமக்கு கிடைத்துள்ளதாகவும், இதை தாம் ஆராய்ந்து வருவதாகவும் ஹமாஸ் இயக்கம் தெரிவித்துள்ளது.
ஹமாஸ் அரசியல் பிரிவின் பிரதித் தலைவர் கலீல் அல்-ஹேயா சனிக்கிழமை (27) விடுத்த அறிக்கையொன்றில், ‘ஹமாஸ் இயக்கத்தின் நிலைப்பாடு தொடர்பில் எகிப்து மற்றும் கட்டார் மத்தியஸ்தர்களுக்கு ஏப்ரல் 13 ஆம் திகதி அனுப்பிய முன்மொழிவுக்கு ஸியோனிச ஆக்கிரமிப்பாளர்களின் உத்தியோகபூர்வ பதில் முன்மொழிவு இன்று இந்த இயக்கத்துக்கு கிடைத்துள்ளது. இந்த முன்மொழிவை ஹமாஸ் ஆராயவுள்ளது. அதன் பின்னர் அது தனது பதிலை கையளிக்கும்’ எனத் தெரிவித்துள்ளார்.
காஸா போர்நிறுத்தம் தொடர்பான புதிய சுற்று பேச்சுவார்த்தைகளுக்காக எகிப்திய மத்தியஸ்தர்கள் வெள்ளிக்கிழமை இஸ்ரேலை சென்றடைந்த நிலையில், இஸ்ரேலின் பதில் யோசனைகள் ஹமாஸுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
எகிப்திய மற்றும் இஸ்ரேலிய பிரதிநிதிகளின் நோக்குகளின் இடைவெளியை குறைப்பதில் அவதானிக்கத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என எகிப்திய புலனாய்வுச் சேவையுடன் தொடர்புள்ளதாகக் கூறப்படும் அல் கஹேரா அலைவரிசை தெரிவித்துள்ளது.
காஸாவின் ரஃபா நகரம் மீது சனிக்கிழமை இரவும் இஸ்ரேலின் வான் தாக்குதல் தொடர்ந்த நிலையில் போர் நிறுத்தம் தொடர்பான புதிய எதிர்பார்ப்புகள் ஏற்பட்டுள்ளன.
ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் காஸாவில் 34,388 பேர் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் 77,437 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் காஸா சுகாதார அமைச்சு நேற்று தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதல்களில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்ட பின்னர், கடத்தப்பட்ட 250 பேரில் இன்னும் 129 பேர் காஸாவில் உள்ளதாக இஸ்ரேல் நம்புகிறது.
கடந்த நவம்பர் மாதம் போர் நிறுத்த காலப்பகுதியில் 81 இஸ்ரேலியர்களும் 24 வெளிநாட்டவர்களும் விடுவிக்கப்பட்டதுடன், இஸ்ரேலிய சிறைகளிலிருந்து 71 பெண்கள், 169 சிறார்கள் உட்பட 240 பலஸ்தீனர்கள் விடுவிக்கப்பட்டனர்.
மேற்குக் கரையில்…………………………………
இதேவேளை, பலஸ்தீனத்தின் மேற்குக் கரை பிராந்தியத்திலுள்ள ஜெனின் நகருக்கு அருகில், பலஸ்தீனர்கள் இருவர் இஸ்ரேலிய படையினரால் நேற்று சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். இராணுவ காவலரண் ஒன்றின்மீது தாக்குதல் நடத்தியவர்களே கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
லெபனானின் தென் பகுதியில் இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் ஹிஸ்புல்லா அங்கத்தவர்கள் இருவர் உட்பட 3 பேர் உயிரிழந்தனர் என ஹிஸ்புல்லா இயக்கம் தெரிவித்துள்ளது.