கனடா – இந்தியா ஆகிய நாடுகள் அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்தச் சூழலில் காலிஸ்தான் அமைப்பு குறித்து இங்கு அறிவோம்.

கனடா – இந்திய உறவின் விரிசலுக்கு முக்கியக் காரணம்!

கனடா – இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையே விரிசல் அதிகரித்துள்ளது. ஆனால், இந்த விரிசல் உருவாவதற்கு முக்கியக் காரணம், காலிஸ்தான் அமைப்பின் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்டதில் இந்தியாவிற்கும் தொடர்பு உண்டு என கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ கொளுத்திப் போட்டதுதான்.

அதனால், இரு தரப்பும் அடுத்தடுத்து அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்தச் சூழலில் காலிஸ்தான் அமைப்பு குறித்து இங்கு அறிவோம்.

காலிஸ்தான் இயக்கம் என்பது யாது?

சீக்கியர்களுக்கு என்று ஒரு தனி நாடு வேண்டுமென்பதே இந்த காலிஸ்தான் இயக்கத்தினரின் கோரிக்கையாக உள்ளது. இது, இன்று… நேற்று தொடங்கியது அல்ல. கிட்டத்தட்ட இந்திய சுதந்திரத்திற்கு முன்பே இந்தப் பிரச்னை தலைதூக்கத் தொடங்கிவிட்டது. இந்தியா – பாகிஸ்தான் பிரிவினை பற்றிய பேச்சுவார்த்தை நடந்த காலகட்டத்திலேயே காலிஸ்தான் நாடு பற்றிய பிரச்னையும் எழுந்துள்ளது.

1940லேயே சீக்கியர்களின் தனி நாடு கோரிக்கை!

குறிப்பாக, 1940லேயே சீக்கியர்கள், தங்களுக்கு ஒரு தனி நாடு வேண்டும் எனக் கேட்டு கோரியுள்ளனர்.

இந்தியாவில் உள்ள பஞ்சாபையும் பாகிஸ்தானில் உள்ள பஞ்சாபையும் சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் பிரதேசங்களையும் ஒருங்கிணைத்து தனி நாடு அமைக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர். அதுவே பின்னாளில் ’காலிஸ்தான்’ என்ற பெயரில் வெடிக்கத் தொடங்கியுள்ளது.

ஜவஹர்லால் நேரு

ஜவஹர்லால் நேருவின் சீக்கியர் உரிமை குறித்த அறிவிப்பு

சுதந்திரம் கிடைப்பதற்கு முன்னர் 1946ஆம் ஆண்டு கொல்கத்தாவில் மாநாடு ஒன்று நடைபெற்றது. அதில் பேசிய ஜவஹர்லால் நேரு,`சீக்கியர்களுக்கான உரிமைகளைப் பாதிக்காதவண்ணம், சீக்கிய மக்களே தங்களின் பகுதிக்குச் சுயாட்சி அதிகாரம் கொண்டிருப்பார்கள்’ என்ற ஒப்பந்தத்தை அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, இந்திய விடுதலைக்குப் பிறகு, பாகிஸ்தானிலிருந்து பெரும்பாலான சீக்கியர்கள், இந்தியாவின் பஞ்சாப், ஹரியானா, இமாச்சலப் பிரதேச பகுதிகளில் குடியேறினர்.

அப்போது நேரு, ’ஒருங்கிணைந்த இந்தியாவின் நலன்களைக் கருத்தில்கொண்டு, முன்பு உருவாக்கப்பட்ட ஒப்பந்தங்களில் சில மாற்றங்கள் கொண்டுவரப்படும்’ என அறிவித்தார்.

இது, சீக்கியர்களின் கோபத்தை அதிகப்படுத்தியது. இதனால், சீக்கியர்களுக்கான தனி நாடு, ’காலிஸ்தான்’ என்ற முழக்கம் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்தது.

பஞ்சாப் மாநிலமாகப் பிரிந்த சீக்கியர்கள் வசித்த பகுதி

பின்னர், 1960இல், அகாலி தளத்தின் தலைவர்கள் இந்தப் பிரச்னையை மீண்டும் கையில் எடுத்துள்ளனர்.

எனினும், 1965இல் சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் பகுதி, பஞ்சாப் மாநிலமாகப் பிரிக்கப்பட்டது. ஆனால், இது சீக்கியர்களைத் திருப்திப்படுத்தவில்லை.

இதனால், 1970இல் இந்த பிரச்னை மீண்டும் விஸ்வரூபமெடுத்தது. 1970களில் காலிஸ்தான் தனிநாடு குறித்த கோரிக்கையை இங்கிலாந்திலிருந்து வந்த சரண் சிங் பான்சி, ஜககித் சிங் சௌஹான் போன்ற சில சீக்கியத் தலைவர்கள் அழுத்தமாக முன்வைத்தனர்.

காலிஸ்தான் தேசிய கவுன்சிலை நிறுவிய ஜகஜீத் சிங் செளஹான்

இதையடுத்து, 1971இல் ஜகஜீத் சிங் சௌஹான் என்பவர் அமெரிக்கா சென்று தனி காலிஸ்தான் நிறுவப்போவதாக பத்திரிகையில் விளம்பரம் கொடுத்ததன் அடிப்படையில், உலக நாடுகளில் வசித்த சீக்கியர்கள் அவருக்கு நிதியுதவி செய்தனர்.

அதன்பிறகு, 1980இல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியைச் சந்தித்து காலிஸ்தான் தனி நாடு ஏற்பட வேண்டியது குறித்துப் பேசினார். அதற்கு முன்பே, பஞ்சாபின் ஆனந்த்பூர் சாகிப்பில், காலிஸ்தான் தேசிய கவுன்சில் என்ற அமைப்பை தொடங்கி, தனி நாட்டுக்கான அஞ்சல் தலைகளையும் செலாவணிகளையும் வெளியிட்டார்.

அமிர்தசரஸ் பொற்கோயில்

1984இல் நிகழ்ந்த ‘ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்’ என்ற அதிரடித் தாக்குதல்!

இதைத் தொடர்ந்து 1980களில், இந்த இயக்கம் ஒரு பெரிய பிரிவினைவாத இயக்கமாக உருவெடுத்தது.

குறிப்பாக, பஞ்சாபிற்கு தனி தேசம் வேண்டும் என்ற கோரிக்கைகள் வன்முறைப் போராட்டங்கள் மூலம் வெடிக்கத் தொடங்கின.

இன்னும் சொல்லப்போனால், 1982ஆம் ஆண்டு காலிஸ்தான் என்ற இயக்கம், ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலேவால் அதிகாரபூர்வமாகத் தோற்றுவிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில்தான், 1984ஆம் ஆண்டு ‘ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்’ என்ற அதிரடித் தாக்குதல் அரங்கேற்றப்பட்டது. இதற்கு அப்போதைய பிரதமர் இந்திரா காந்திமீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்திரா காந்தி

அமிர்தசரஸ் பொற்கோயிலின் உள்ளே இருந்த சீக்கியர்களை வெளியேற்றுவதற்காக இந்திய ராணுவப் படை தாக்குதலில் ஈடுபட்டது. பெரும்பான்மையான சீக்கிய மக்களால் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்த ஜர்னைல் சிங் பிந்திராவாலே இந்த தாக்குதலின்போது கொல்லப்பட்டார்.

1995இல் பஞ்சாப்பில் முடிவுக்கு வந்த காலிஸ்தான் கிளர்ச்சி!

இந்திரா காந்தியின் படுகொலையை தொடர்ந்து 1984இல் சீக்கிய இனப்படுகொலை என்று அழைக்கப்படும் சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் ஏற்பட்டது.

இதற்குப் பிறகு, காலிஸ்தானிகளின் போராட்டம் உச்சத்தை அடைந்தது. இதன்பிறகு 1992இல் ஆட்சிக்கு வந்த பஞ்சாப் முதல்வர் பியாந்த் சிங், காலிஸ்தான் தீவிரவாதத்தைக் கட்டுக்குள் கொண்டுவர உத்தரவிட்டார்.

இதையடுத்து, 1995இல் பஞ்சாப்பில் காலிஸ்தான் கிளர்ச்சி முடிவுக்கு வந்தது. அதேநேரத்தில், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வசிக்கும் பல சீக்கியர்கள் மீண்டும் காலிஸ்தானுக்கான கோரிக்கையை எழுப்பிவருகின்றனர்.

குர்பத்வந்த் சிங் பன்னூன்

காலிஸ்தானுக்கு ஆதரவாய் களத்தில் குதித்த குர்பத்வந்த் சிங் பன்னூன்!

அதன்பேரில் குர்பத்வந்த் சிங் பன்னூன் (தற்போது சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டுள்ளார்) என்பவர், 2007ஆம் ஆண்டு அமெரிக்காவில் `நீதிக்கான சீக்கியர்கள்’ என்ற பெயரில் குழு ஒன்றை உருவாக்கினார்.

அதேநேரத்தில் இந்தக் குழு மத்திய அரசால் கடந்த 2019ஆம் ஆண்டு தடைசெய்யப்பட்டது. 2019 முதல் பஞ்சாப் தவிர, நாடு முழுவதும் பயங்கரவாத செயல்களை ஊக்குவிப்பதிலும் செயல்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிப்பதாக, காலிஸ்தானி பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னூன், NIA அமைப்பால் தேடப்பட்டு வருகிறார்.

2021 பிப்ரவரி 3, என்ஐஏ நீதிமன்றத்தால் பன்னூனுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

மேலும் அவர் 2022 நவம்பர் 29 சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். மேலும், NIAவின் கூற்றுப்படி, SFJ இணையவெளியை தவறாகப் பயன்படுத்தி இளைஞர்களைத் தீவிரவாதிகளாக மாற்றியதாகவும், பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட அவர்களைத் தூண்டியதாகவும் அதன் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தவிர, 2020ம் ஆண்டு இந்திய அரசு காலிஸ்தான் குழுக்களுடன் தொடர்புடைய 9 பேரைப் பயங்கரவாதிகளாக அறிவித்தது.

மேலும் காலிஸ்தானை ஆதரித்து இயங்கிவந்த 40 வலைதளங்களையும் முடக்கியது. ஆனாலும், குர்பத்வந்த் சிங் பன்னூன் காலிஸ்தானுக்கு ஆதரவாக ஒரு பிரசாரத்தைத் தொடங்கினார்.

வாரிஸ் பஞ்சாப் டி (Waris Punjab De) எனும் இயக்கம் தொடக்கம்!

இதற்கிடையே, விவசாயிகள் போராட்டத்துக்குப் பெரிதும் ஆதரவளித்த தீப் சிங் சித்து எனும் நடிகர், 2021இல் காலிஸ்தான் தனிநாடு கோரிக்கையுடன் பஞ்சாப்பின் வாரிசுகள் எனும் பொருளில் வாரிஸ் பஞ்சாப் டி (Waris Punjab De) எனும் அரசியல் இயக்கத்தை நிறுவினார்.

ஆனால்,15 பிப்ரவரி 2022 அன்று தீப் சிங் சித்து ஹரியானா மாநிலத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரைத் தொடர்ந்து, துபாயில் வேலை செய்துவந்த அம்ரித்பால் சிங், இந்தியா வந்து வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.


அம்ரித்பால் சிங்

அம்ரித்பால் சிங் மீது பாய்ந்த தேசிய பாதுகாப்பு சட்டம்!

தன்னைத்தானே மத போதகர் என அழைத்துக்கொள்ளும் அம்ரித்பால் சிங், காவல்துறையால் கைதுசெய்யப்பட்ட, தன் கூட்டாளி லவ்பிரீத் சிங் என்பவரை விடுவிக்க வேண்டும் எனக் கூறி, கடந்த பிப்ரவரி 23ஆம் தேதி, பஞ்சாப்பில் உள்ள அஜ்னாலா காவல்நிலையத்தை முற்றுகையிட்ட ‘வாரிஸ் பஞ்சாப் தே’ அமைப்பினர்,

துப்பாக்கிகள் மற்றும் வாட்களை ஏந்திப் போராட்டம் நடத்தியது, பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. அதனைத்தொடர்ந்து, பஞ்சாப்பில் தனி நாடு முழக்கமும் அதிகரித்தது. அம்ரித்பால் சிங் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.

கைது செய்யப்பட்ட அம்ரித்பால் சிங்கின் கூட்டாளிகள்!

இதையடுத்து அவரைத் தேடும் பணியில் பஞ்சாப் போலீசார் ஈடுபட்டனர். ஆனால், அவர் தலைமறைவானார்.

அதேநேரத்தில், அம்ரித்பால் சிங்கின் கூட்டாளிகளை காவல் துறையினர் கைது செய்தனர். குறிப்பாக, அம்ரித்பால் சிங்கின் கார் டிரைவர் ஹர்பிரீத் சிங், அவரது மாமா ஹர்ஜீத் சிங் உள்ளிட்ட 5 பேர் பஞ்சாப் போலீசாரிடம் சரணடைந்தனர்.

பாதுகாப்பு காரணமாக, அவர்கள் 5 பேரும் அஸ்ஸாமின் திப்ருகருக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இதற்கிடையே, வாரிஸ் பஞ்சாப் டி அமைப்பின் தலைவரான அம்ரித்பால் சிங்கின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், குண்டுதுளைக்காத கோட், துப்பாக்கிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், அவற்றின் மீது AKF என எழுதப்பட்டிருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.


இந்திய கொடியை அகற்றிய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

அதேநேரத்தில், அவர் மீதான இந்திய அரசின் நடவடிக்கையை கண்டித்து காலிஸ்தான் ஆதரவாளர்கள் கடந்த மார்ச் 18 மற்றும் 19ஆம் தேதிகளில் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ, லண்டனில் உள்ள இந்திய தூதரகங்கள் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தினர்.

அங்குள்ள இந்திய அதிகாரிகளை கொலை செய்து விடுவோம் எனவும் அவர்கள் எச்சரித்தனர். மேலும், இங்கிலாந்து நாட்டின் லண்டனில் உள்ள இந்திய தூதரகம் முன் இன்று குவிந்த காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவாளர்கள் இந்தியாவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

மேலும், லண்டன் இந்திய தூதரகத்தில் ஏற்றப்பட்டிருந்த இந்திய தேசியக்கொடியை அகற்றி காலிஸ்தான் கொடியை ஏற்றினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அதுபோல், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தின் முன்பும் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்ரித்பால் சிங்கின் மனைவியைக் கண்காணித்த காவல் துறையினர்!

இது ஒருபுறமிருக்க, மறுபுறம், அம்ரித்பால் சிங்கின் மனைவியான இங்கிலாந்தைச் சேர்ந்த கிரண்தீப் கவுர், காவல் துறை மூலம் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டார்.

இந்தியாவில் வசித்துவரும் கிரண்தீப் கவுர், தன்னுடைய விசாவைப் புதுப்பிக்கும் நோக்கில், அமிர்தசரஸ் விமான நிலையம் சென்றபோது காவலர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

இந்தச் சூழலில், தலைமறைவாக இருந்த அம்ரித்பால் சிங், கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி, மோகா மாவட்டம் ரோடே கிராமத்தில் உள்ள குருத்வாராவில் சரணடைந்தார். அப்போது, அம்ரித் பால் சிங்கை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து அம்ரித்பால் சிங்கை அசாம் மாநிலத்தில் உள்ள திப்ருகார் சிறைக்கு போலீசார் அழைத்துச் சென்றனர். அவருடன், மேலும் 9 காலிஸ்தான் ஆதரவாளர்கள் அசாம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய கூட்டாளி மரணம்!

இந்த விவகாரம் தொடர்பாக, காலிஸ்தான் ஆதரவாளர்கள் கனடாவில் உள்ள கோயில்கள் மற்றும் தூதரகங்களுக்கு மிரட்டல்கள் விடுத்தனர்.

இந்த சூழ்நிலையில் யாரும் எதிர்பார்க்காத திருப்பமாக, காலிஸ்தான் இயக்க கமாண்டோ படைத்தலைவர் பரந்தீப்சிங் பஜ்வார் என்பவர் மே மாதம் 6ஆம் தேதி மர்ம நபர்களால் பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதற்கடுத்து, லண்டன் இந்திய தூதரகத்தில் மார்ச் 19ஆம் தேதி கலவரம் செய்து அங்கிருந்த இந்திய கொடியை கழற்றி கீழே தூக்கிப்போட்ட காலிஸ்தான் ஆதரவாளர்கள்.

அவதார்சிங் கண்டா ஜூன் 15ஆம் தேதி லண்டனில் மர்மமான முறையில் இறந்துபோனார். விஷம் வைத்து அவர் கொல்லப்பட்டு இருக்கலாம் என்ற தகவல் வெளியானது.

அம்ரித்பால் சிங், அவதார் சிங் கண்டா

இவர், அம்ரித்பால் சிங்கின் நெருங்கிய கூட்டாளி என தகவல்கள் வெளியாகின. ஒரு மாதத்துக்கும் மேலாக தலைமறைவாக இருந்த அம்ரித்பால் சிங்கிற்கு உதவி செய்தவரே இந்த அவதார் சிங் கண்டாதான் எனச் சொல்லப்பட்டது.

இவர், இங்கிலாந்து நாட்டை அடிப்படையாகக் கொண்டு செயல்படக்கூடிய காலிஸ்தான் விடுதலைப் படையின் தலைவர் எனவும் சொல்லப்பட்டது.

ஹர்தீப் சிங் நிஜ்ஜார்

அடுத்து, 3வதாக காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், கனடாவில் ஜூன் மாதம் 18ஆம் தேதி சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலைக்குப் பிறகே கனடா – இந்தியா உறவில் விரிசல் விழ ஆரம்பித்தது.

 

Share.
Leave A Reply