ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வேட்பாளரை நிறுத்தும் விவகாரம் சூடுபிடித்திருக்கிறது. இதனை ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் எதிரெதிர் கருத்துகளை வெளியிட, இந்த விவகாரம் இப்போது சர்ச்சையாக மாறத் தொடங்கியிருக்கிறது.

கொஞ்சக்காலமாக உறங்குநிலையில் இருந்த தமிழ்த் தேசிய அரசியல் களம், இந்தச் சர்ச்சைகள், வாதப்பிரதிவாதங்களால், இப்போது பரபரப்படைந்திருக்கிறது.

தமிழர்களின் ஒன்றுபட்ட கருத்தை வெளிப்படுத்துவதற்கான ஒரு உத்தியாகத் தான், இந்த பொதுவேட்பாளர் திட்டம் முன்வைக்கப்பட்டது.

ஆனால் இதுவே தமிழர்களை பல கூறுகளாகப் பிரிக்கின்ற விடயமாக மாறிக் கொண்டிருக்கிறது.

சி.வி.கே சிவஞானம்

தமிழ் அரசுக் கட்சியின் மூத்த பிரமுகர்களில் ஒருவராக சி.வி.கே சிவஞானம், தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்துவது சாத்தியமில்லை என்று எந்தக் காரணத்தை கூறினாரோ, அந்தக் காரணம் சரியானதே என்று நிரூபிக்கிறது இப்போதைய முரண்பாடுகள்.

அதாவது பொதுவேட்பாளரை தெரிவு செய்ய முனையும் போது, முரண்பாடுகள் ஏற்படும், இணக்கப்பாடு எட்ட முடியாது, அதனால் இந்த முயற்சி தேவையற்றது என்று அவர் கருத்துக் கூறியிருந்தார்.

ஆனால், பொது வேட்பாளரை தெரிவு செய்வதற்கு முன்னரே- முரண்பாடுகள் உருவாகி விட்டன. பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து முடிவெடுக்க முன்னரே, தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுடன் ஒன்று முட்டி மோதத் தொடங்கி விட்டன.

ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்புக்கு உள்ள மூன்று வாய்ப்புகளில் ஏதாவது ஒன்றைத் தெரிவு செய்யும் விடயத்தில் ஒன்றுபட்டிருப்பது தான் முக்கியமானது.

ஊர் கூடித் தேர் இழுத்தல் போலத் தான் இதனைக் கையாள வேண்டும்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு பக்கத்துக்கு தேரை இழுத்தால் எந்தப் பக்கமும் அது நகராது. அவ்வாறானதொரு நிலைக்குத் தான் இந்த விவகாரம் சென்று கொண்டிருக்கிறது.

கடந்த காலங்களில் ஜனாதிபதி தேர்தல்களை எதிர்கொண்ட அனுபவத்தின் படி தான், இந்தமுறை பொது வேட்பாளர் என்ற விவகாரம் அதிகளவானோரால் முன்மொழியப்படுகிறது.

ஆயினும், இந்த தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விவகாரத்தில், ஆரம்பத்தில் சில தரப்புகளிடையே மயக்க நிலை காணப்பட்டது.

இதனை வைத்து பிரதான வேட்பாளர்களுடன் பேரம் பேசலாம் என்ற தொனிப்பட சுரே ஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்ட கருத்தே, பல்வேறு தரப்புகளை சந்தேகம் கொள்ள வைத்தது.

தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற விடயம், தனியே தமிழர்களின் அபிலா ஷைகளை வெளிப்படுத்தலும், தமிழரின் பிரச்சினைகளுக்கான தீர்வை வலியுறுத்தவும் கையாளப்படும் ஒரு கருவியாக இருக்க வேண்டுமே தவிர, அது எந்த தரப்பையும் ஆதரிப்பதற்கு பேரம் பேசுகின்ற கருவியாக இருக்கக் கூடாது.

இந்த விடயத்தில் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி ஆரம்பத்தில் சொதப்பியது கூட இன்றைய வாக்குவாதங்களுக்கு ஒரு காரணம்.

யாரையோ வெற்றிபெற வைப்பதற்காகத் தான், பொது வேட்பாளர் என்ற விடயம் முன்னிறுத்தப்படுவதாக, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செல்வராசா கஜேந்திரன் குற்றம்சாட்டியிருந்தார்.

அதற்குப் பின்னர், செய்தியாளர்களை சந்தித்த புளொட் தலைவர் சித்தார்த்தன், தேர்தல் புறக்கணிப்பின் மூலம் யாரை வெற்றி பெற வைக்க, கஜேந்திரன் முற்படுகிறார் என்பதை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

அதற்குப் பதிலடி கொடுத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர் சுகாஸ், போர்க்காலத்தில் அரசாங்கத்தின் காலடியில் இருந்த சித்தார்த்தன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பற்றிக் கருத்துக் கூறுவதற்கு அருகதையற்றவர் என்று கூறியிருக்கிறார்.

அதேபோல, தமிழ் அரசுக் கட்சிக்குள் பொதுவேட்பாளர் தொடர்பாக, மாறுபட்ட கருத்துக்கள் வெளிப்படும் நிலையில், வெளியே உள்ள பலரும், அந்தக் கட்சியை நோக்கி குற்றச்சாட்டுகளை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர்.

குறிப்பாக, சம்பந்தனும்,சுமந்திரனும் பொதுவேட்பாளர் என்ற திட்டத்தை எதிர்ப்பதால், அவர்களுக்கு எதிராக கடுமையான விமர்சனங்கள் வரத் தொடங்கியிருக்கின்றன.

குறிப்பாக சுமந்திரன், தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக முன்வைக்கும் மாற்றுக் கருத்துக்கள், பொருத்தமானவையாகவோ, ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவோ இல்லை.

தமிழ்ப் பொதுவேட்பாளர், சிங்கள மக்கள் மத்தியில் இனவாதத்தை கிளப்பும் என்று அவர் கூறுகிறார்.

இலங்கைத் தீவு சுதந்திரம் அடைவதற்கு முந்திய காலத்தில் இருந்தே தமிழர்கள், சிங்கள இனவாதத்தை கண்டுவருகின்றனர். அது எந்தக் காலத்திலும் ஓய்வாக இருந்ததில்லை.

சுமந்திரனின் கருத்தைப் பார்த்தால், தமிழர்கள் தான் சிங்கள இனவாதத்தை தூண்டுகிறார்கள் என்று கூட அவர் வாய் கூசாமல் கூறக் கூடும்.

ஒவ்வொரு தேர்தலிலும் சிங்கள இனவாதம் தனது உயிர்ப்பை வெளிக்காட்டி வந்திருக்கிறது. அந்த இனவாதத்துக்குப் பயந்து, ஒதுங்கி அதற்கேற்ப தமிழர்கள் தங்களை மாற்றிக் கொள்ள முடியாது.

சிங்கள இனவாதம் எதிர்க்கிறது என்பதால், தமிழ் அரசுக் கட்சி சமஷ்டிக் கோரிக்கையை கைவிட்டு விடுமா?

சிங்கள இனவாதத்தை காட்டி, சுமந்திரன் தமிழ் மக்களைப் பயமுறுத்தப் பார்க்கிறார். தமிழ்ப் பொது வேட்பாளர் திட்டத்தை முளையிலேயே கருக வைக்க முயற்சிக்கிறார் என்றே தெரிகிறது.

தமிழர்கள் தரப்பில் பொது வேட்பாளராக, குமார் பொன்னம்பலமும், சிவாஜிலிங்கமும் போட்டியிட்டதன் விளைவு தெரியும் தானே என்றும் சுமந்திரன் கூறியிருக்கிறார்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ்க் கட்சிகளின் பொதுவேட்பாளராக இதுவரையாரும் போட்டியிட்டதில்லை என்பதே உண்மை.

1982இல் குமார் பொன்னம்பலம், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது, தமிழர்கள் மத்தியில் இப்போதுள்ளது போல பல கட்சிகள் கிடையாது.

அப்போது, தமிழர் விடுதலைக் கூட்டணியும், தமிழ்க் காங்கிரசும் தான் இருந்தன. குமார் பொன்னம்பலம், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட போது, தமிழர் விடுதலைக் கூட்டணி அவருக்கு பகிரங்கமாக ஆதரவு தெரிவிக்கவில்லை.

அதைவிட, குமார் பொன்னம்பலம், தேர்தலில் போட்டியிட்டாரே தவிர தீவிரமான பிரசாரங்களை முன்னெடுக்கவில்லை.

ஆனாலும், யாழ்ப்பாணத்திலும், மட்டக்களப்பிலும் அவருக்கு அதிகளவு வாக்குகள் கிடைத்திருந்தன.

அதுபோல, 2010 ஜனாதிபதி தேர்தலில் சிவாஜிலிங்கம், போட்டியிட்டிருந்தார். ஆனால் அவர் தமிழ்ப் பொது வேட்பாளராக நிற்கவில்லை. அவர் பிரசாரங்களிலும் ஈடுபடவில்லை.

அப்போது தமிழ் அரசுக் கட்சியை உள்ளடக்கிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சரத் பொன்சேகாவை ஆதரித்ததும், புளொட் மஹிந்தவுக்கு ஆதரவாகச் செயற்பட்டதும் சுமந்திரனுக்குத் தெரியாத விடயங்கள் அல்ல.

குமார் பொன்னம்பலம் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் போட்டியிட்ட சூழலுடன், தற்போதைய பொதுவேட்பாளர் திட்டத்தை ஒப்பிட முடியாது.

இப்போது நடக்கின்ற முயற்சிகளின் அடிப்படை, தமிழ்த் தேசிய கட்சிகள், தரப்புகளின் ஆதரவுடனான ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதுதான்.

அவ்வாறான ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட்டால், தமிழ் மக்கள் ஒன்றுபட்டு அவரை ஆதரிக்கும் நிலை காணப்படும். பலத்தை வெளிப்படுத்தும் சூழல் உருவாகும்.

அதைவிட பொதுவேட்பாளரை நிறுத்துவது மாத்திரம் முக்கியமல்ல. அவர் ஏன் நிறுத்தப்பட்டார்- அவருக்குத் தமிழ் மக்கள் ஏன் வாக்களிக்க வேண்டும்- தமிழ் மக்களின் வாக்குத் திரட்சி எதற்காக வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றெல்லாம் விரிவான பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இதனைச் செய்யாமல், செய்ய முடியாமல் ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதும் அர்த்தமற்றது. வாக்குச்சீட்டில் பெயரைப் பொறித்து விட்டால், அவர் தமிழ்ப் பொது வேட்பாளராகி விட முடியாது.

அவரை வெல்ல வைக்க முடியாது என்று தெரிந்தாலும், அவருக்கு கிடைக்கும் ஒவ்வொரு வாக்கும் பெறுமதியானது. அந்த ஒவ்வொரு வாக்கிற்காகவும், கடுமையான பிரசாரத்தை முன்னெடுக்க வேண்டும்.

அவ்வாறு கடுமையாக உழைக்க முடியவில்லை என்றால், தமிழ்ப் பொது வேட்பாளர் திட்டத்தை இப்போதே கைவிட்டு விடுவது தான் சிறந்தது.

தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற கருப்பொருள் முன்வக்கப்பட்டதற்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கட்சிகள், அதனை தீவிரமாக ஆய்வுக்குட்படுத்தியதாகத் தெரியவில்லை.

அதனை தங்களுக்குள் மோதிக் கொள்வதற்கான கருப்பொருளாகத் தான் மாற்றிக் கொண்டிருக்கின்றன.

தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது, தமிழரின் ஒற்றுமையை வெளிப்படுத்துவதற்கானதாக இருக்க வேண்டுமே தவிர, தமிழரின் ஒற்றுமையின்மையை, பலவீனத்தை வெளிப்படுத்துவதற்கானதாக அமைந்து விடக் கூடாது.

எந்த தமிழ்க் கட்சியும் இதனைச் சரியாகப் புரிந்து கொண்டிருந்தால், இப்போதைய வீண் வாக்குவாதங்கள் தோன்றியிருக்காது.

Share.
Leave A Reply