சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், இஸ்ரேலிய அதிகாரிகள் மீது பிடியாணை பிறப்பிக்கும் அச்சத்திற்கு மத்தியில் இஸ்ரேலின் காசா நடவடிக்கை தொடர்பில் ஹேகில் உள்ள அந்த நீதிமன்றம் விசாரணை நடத்துவதற்கு அமெரிக்கா எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் அவதானத்திற்கு கொண்டு வந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

‘சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு நாம் ஆதரவு அளிப்பதில்லை என்பதில் தெளிவாக இருப்பதோடு, அதற்கான அதிகாரம் அவர்களுக்கு இருப்பதாகவும் நாம் நம்பவில்லை’ என்று வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கரின் ஜீன் பீரே குறிப்பிட்டுள்ளார்.

இதில் நெதன்யாகுவும் குற்றச்சாட்டுக்கு முகம்கொடுக்கக் கூடும் என்று இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள்காட்டி நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

ஹமாஸ் தலைவர்கள் மீதும் குற்றம்சாட்டி இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பைடனை தொலைபேசியில் அழைத்த நெதன்யாகு இஸ்ரேலிய அதிகாரிகள் மீது பிடியாணை பிறப்பிப்பதை தடுக்குமாறு கோரியதாக எக்சியோஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கத்துவம் பெற்ற நாடுகளல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் பலஸ்தீன நிலப்பகுதியில் போர் குற்றங்களில் ஈடுபட்டது குறித்து அந்த நீதிமன்றம் கடந்த 2021 இல் இஸ்ரேல், ஹமாஸ் மற்றும் ஏனைய பலஸ்தீன போராட்டக் குழுக்களுக்கு எதிரான விசாரணையை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply