ஒரு யுத்தம் வருகையில் அச்சம் ஏற்படும். சண்டையில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களுக்கு மாத்திரமல்ல. சம்பந்தப்பட்டவர்களை சார்ந்தவர்களுக்கும் அயலில் இருப்பவர்களுக்கும் பயம் தோன்றலாம்.
சண்டையின் விளைவுகள் தம்மை எவ்வாறெல்லாம் பாதிக்குமோ என்ற சிந்தனை, பயத்திற்கு காரணமாக இருக்கவும் கூடும். அதுவே இரு நாடுகளுக்கு இடையிலான சண்டையாக இருந்தால், அச்சம் அதிகமாகும்.
பிராந்திய, பூகோள அரசியல் காரணிகளால் நாமும் சண்டைக்குள் இழுபட நேரிடுமோ என்று உலக நாடுகள் அஞ்சலாம். இங்கு ஆபத்தான இன்னொரு விடயம் உண்டு. அது சண்டையிடும் நாடுகளின் அணு ஆற்றல்.
சண்டை தீவிரம் அடைந்து, அதற்குள் தாமும் உள்வாங்கப்பட்டு, அணு ஆயுதங்களும் பயன்படுத்தப்படுமாயின், அது இருப்பையே கேள்விக்கு உள்ளாக்கலாம் என்ற அச்சம் உலக நாடுகளுக்கு ஏற்படுவது வழமையானதே.
இஸ்ரேலுக்கும், ஈரானுக்கும் இடையிலான யுத்தத்தையும் இதே சூழமைவில் பார்க்க வேண்டியதாக இருக்கிறது.
ஒரு நிழல் யுத்தம், நேரடி யுத்தமாக மாறியிருக்கிறது. அதனை அணுவாயுத யுத்தம் நோக்கி நகர்த்த முடியும் என்பதை இஸ்ரேல் கோடிட்டு காட்டியிருக்கிறது. இது எப்படியென பார்க்கலாம்.
சிரியாவில் உள்ள இஸ்ரேலின் கன்சியூலர் அலுவலகத்தை இஸ்ரேல் தாக்கியதை அடுத்து, ஈரானிய மண்ணில் இருந்து இஸ்ரேல் மீது ஏவுகணைகளும், ட்ரோன்களும் ஏவப்பட்டன.
சில மணித்துளிகளில் ஈரானின் பல இடங்களில் குண்டுகள் வெடித்தன. இவற்றில் இஸ்ஃபஹான் மாநிலத்தில் வெடித்த குண்டுகளும் அடங்கும்.
இஸ்ஃபஹான் மாநிலம் ஈரானின் மத்தியில் உள்ளது. அணுசக்தி உற்பத்திக்காக பயன்படுத்தப்படும் யுரேனியத்தை மாற்றீடு செய்யும் ஆலைகள் இங்கே தான் உள்ளன. அத்துடன், நத்தான்ஸ் என்ற ஈரானின் அணுசக்தி ஆலையும் இங்கு இருக்கிறது.
இங்கு இஸ்ரேல் குண்டு போட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை. குண்டு போட்டதாக இஸ்ரேல் வெளிப்படையாகக் கூறவில்லை. இது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் தான் என்று ஈரானிய தரப்பில் அறுதியாக உறுதிப்படுத்தப்படவும் இல்லை.
வெளித்தரப்பில் இருந்து கூறப்படும் கருத்துக்களின் அடிப்படையில் தான் ஊகங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. செய்மதிப் படங்களை வைத்து, இது இஸ்ரேல் போட்ட குண்டுகள் தான் என நிபுணர்கள் முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
நேரடியாக அணுவாலைகளைத் தாக்காமல், ஆலைகளைத் தாக்குவது எம்மால் முடியாத காரியம் அல்லவென்ற செய்தியை இஸ்ரேல் சொல்லியிருக்கலாமென நிபுணர்கள் கருதுகிறார்கள்.
இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு சுவாரஷ்யமானது. இஸ்ரேலிடம் அணுவாயுதங்கள் உண்டு என்பது உலகறிந்த இரகசியம். ஈரானிடம் அணுவாலைகள் உண்டெனினும், அந்நாடு அணுவாயுத வல்லமை படைத்ததா என்பதை சொல்ல முடியாது.
இஸ்ரேல் ஐம்பது வருடங்களுக்கு முன்னதாக இரகசியமான முறையில் அணுவாயுதங்களை உருவாக்கத் தொடங்கியது.
ஆனால், இஸ்ரேலை இதுவரை ஆட்சி செய்த எந்தவொரு அரசாங்கமும் தம்மிடம் அணுவாயுதம் உள்ளதை பகிரங்கமாக சொன்னது கிடையாது.
அத்துடன், 1968இல் உருவாக்கப்பட்ட அணுவாயுத பரம்பல் தடுப்பு உடன்படிக்கையில் இஸ்ரேல் கைச்சாத்திட்டதில்லை. சர்வதேச அணுசக்தி முகவராண்மை நிறுவனத்தின் சமவாயங்களை ஏற்றுக் கொண்டதும் இல்லை.
ஆனால், மத்திய கிழக்கில் அணுசக்தி ஆற்றல் படைத்த ஒரே நாடு இஸ்ரேல் தான் என்பது உலகறிந்த பரகசியம்.
தமது மண்ணில் உள்ள நெகவ் (Negev) பாலைவனத்திற்கு அருகிலுள்ள டிமோனா என்ற இடத்தில் 1957 இல் ப்ளுட்டோனியத்தைப் பயன்படுத்தி அணுவாயுதங்களை உற்பத்தி செய்யும் ஆலையொன்றை உருவாக்க இஸ்ரேல் பிரான்ஸின் உதவியை நாடியதை, 1960களின் நடுப்பகுதியில் அமெரிக்கா பகிரங்கப்படுத்திய இரகசிய ஆவணங்கள் மூலம் அறியக் கிடைத்தது.
இந்தத் தகவலை வைத்து அமெரி;க்கத் தலைவர்கள் தடுமாறிக்கொண்டிருந்தபோது, ஜனாதிபதி ரொபர்ட் நிக்ஸன் தான். அது இரகசியம் என்றாலும் உண்மையே என்பதை ஏற்றுக்கொண்டார்.
வெடிபொருளை காவிச் செல்லக்கூடிய குண்டொன்றின் அல்லது ஏவுகணையின் முன்பாகத்தை வோர்-ஹெட் (War-head) என்பார்கள். அணுசக்தி வெடிபொருட்களை காவிச் செல்லக்கூடிய கருவிகள் நியூக்ளியர் வோர்-ஹெட் (Nuclear War-head) எனப்படும்.
இந்த நியூக்ளியர் வோர்-ஹெட் கருவிகள் எத்தனை உள்ளன என்பதன் அடிப்படையில் ஒருநாட்டின் அணுவாயுத வல்லமை தீர்மானிக்கப்படும்.
இஸ்ரேலிடம் இத்தகைய 90 கருவிகள் இருப்பதாகவும், இன்னும் நூற்றுக்கணக்கான கருவிகளைத் தயாரிக்கக்கூடிய அளவு ப்ளுட்டோனியம் உள்ளதாகவும் ஊகம் குறிப்பிடப்படுகிறது.
அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் கொண்டிருக்கக்கூடிய நியூக்ளியர் வோர்-ஹெட் கருவிகளுடன் ஒப்பிடுகையில், இது குறைந்த தொகை தான். ஆனால், அணு ஆயுதங்களைக் கொண்ட ஒன்பது நாடுகளில் இஸ்ரேலும் ஒன்று எனும் கணக்கை மறந்துவிட முடியாது.
ஈரானின் கதை வேறு. இந்நாட்டின் அணுசக்தித் திட்டம் இஸ்லாமிய புரட்சிக்கு முன்னதாக மேற்குலகின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டது.
அணுசக்தித் திட்டத்தின் மூலம் அணுவாயுதங்களை உருவாக்க வேண்டும் என அப்போதைய தலைவர்கள் நினைக்கவில்லை. மின்வலுவை உற்பத்தி செய்தால் போதும் என்று பிரகடனம் செய்திருந்தார்கள்.
ஈரானின் சமகால ஆன்மீகத் தலைவர் ஆயத்துல்லா அலி கமெய்னி இருபது வருடங்களுக்கு முன்னதாக அணுவாயுத உற்பத்திக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பித்திருந்ததாக அறிவிக்கப்படுகிறது.
மறுபுறத்தில், அணுவாயுதப் பரம்பலைத் தடை செய்யும் நோக்கத்தைக் கொண்ட அணுவாயுத பரம்பல் தடுப்பு உடன்படிக்கையில் ஈரான் கைச்சாத்திட்டது.
மத்திய கிழக்குப் பிராந்தியம் அணுவாயுதங்கள் இல்லாத வலயங்களாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக ஈரானிய தலைவர்கள் பகிரங்கமாக குரல் கொடுத்தார்கள்.
தம்மிடம் அணுவாயுதங்கள் கிடையாதென அவர்கள் கூறிய சந்தர்ப்பங்களில் எல்லாம் மேற்குலகம் சந்தேகக் கண்கொண்டே பார்த்து வருகிறது.
இல்லையென்று வெளிப்படையாகக் கூறினாலும், ‘இருக்கு – ஆனா, இல்லை’ என்ற நிலைப்பாட்டையே மறைமுகமாக ஈரான் வெளிப்படுத்தி நின்றதென மேலைத்தேய நிபுணர்கள் கூறி வருகிறார்கள்.
ஈரானிடம் அணுசக்தித் திட்டமொன்று இருக்கிறதென்றால், அது சர்வதேச சமூகத்தின் கடப்பாட்டுக்கு உட்பட்டது.
அதாவது, அமெரிக்காவும், உலகின் ஐந்து வல்லரசுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து பேசி உருவாக்கிய ஈரானிய அணுசக்தி உடன்படிக்கைக்கு கட்டுப்பட்டதாக ஈரானின் அணுசக்தித் திட்டம் அமைந்துள்ளது.
இதன் பிரகாரம், ஈரான் அணுசக்தியைப் பயன்படுத்தி மின்வலுவை உற்பத்தி செய்யலாம். அது அப்படித்தான் நடக்கிறதா என்பதை சர்வதேச நிபுணர்கள் கண்காணிக்கலாம்.
உலக வல்லரசுகளின் பங்களிப்போடு பராக் ஒபாமாவின் முயற்சியால் உருவாக்கப்பட்ட உடன்படிக்கையில் இருந்து 2018ஆம் ஆண்டு டொனல்ட் ட்ரம்ப் ஒருதலைப்பட்சமாக விலகியது வேறு கதை.
எனினும், ஈரானிய அணுவாலைகளுக்குச் செல்லும் அனுமதி பெற்ற சர்வதேச அணுசக்தி முகவராண்மை (IAEA) அமைப்பின் பரிசோதகர்கள், இந்த ஆலைகள் சடுதியாக வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தார்கள்.
அதாவது, மின்வலுவை மாத்திரமன்றி, மிக விரைவாக அணுவாயுதங்களைத் தயாரிக்கக்கூடிய அளவிற்கு ஈரானிய அணுவாலைகளில் யுரேனியம் செறிவாக்கப்பட்டிருப்பதாக அவர்கள் கூறினார்கள்.
இந்தக் கருத்தின் அடிப்படையில் பார்த்தால், ஈரானால் குறுகிய காலத்திற்குள் அணுவாயுதங்களை உருவாக்கி விட முடியும்.
இதனை கடந்த வாரம் சர்வதேச அணுசக்தி முகவராண்மையின் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்திருக்கிறார். இஸ்ரேலுடனான நிழல் யுத்தத்தில் ஈரானின் அணுசக்தித் துறைக்கு ஏற்பட்ட பாதிப்புகள் ஏராளம்.
இஸ்ரேலிய உளவுத்துறை பௌதீக வெளியிலும், இணையவெளியின் ஊடாகவும் ஊடுருவி நடத்திய தாக்குதல்களில் ஈரான் விஞ்ஞானிகளை இழந்திருக்கிறது. ஈரானின் அணுவாலைகள் முடங்கிய சந்தர்ப்பங்களும் உண்டு.
இஸ்ரேல் வலிந்து தாக்கும் சந்தர்ப்பத்தில், ஈரான் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளக்கூடிய நகர்வுகளை முன்னெடுத்ததையே கடந்த காலத்தில் கண்டோம்.
சிரியாவிலுள்ள கன்சியூலர் அலுவலகம் தாக்கப்பட்டதை அடுத்து ஈரான் நேரடி தாக்குதலுக்குள் இறங்கியுள்ளதாயின், அந்த மாற்றத்தை சாதாரணமானதாக கருத முடியாது.
இந்த மாற்றத்திற்குள், நிழல் யுத்தத்தில் இருந்து நேரடி யுத்தம் நோக்கி நகர்ந்த இஸ்ரேல், இனிமேல் அணுவாயுத யுத்தம் தானென இறுமாப்புக் காட்ட முனைவது ஆரோக்கியமாக அமைய மாட்டாது.
சதீஷ் கிருஷ்ணபிள்ளை