ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலமாக, அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களுக்கான பட்டியலில் தமிழக வீரர் நடராஜன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.
நேற்று (02) ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றியை பெற்றது.
இந்த போட்டியில் முதல் துடுப்பெடுத்தாடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 201 ஓட்டங்கள் சேர்த்தது. இதன்பின் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ஓட்டங்கள் மட்டுமே சேர்த்து தோல்வியடைந்தது.
ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 25 பந்திகளில் 41 ஓட்டங்கள் எடுத்தால் போதும் என்ற நிலையில், ஐதராபாத் அணி பவுலர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசினர்.
குறிப்பாக புவனேஷ்வர் குமார், கம்மின்ஸ் மற்றும் நடராஜன் மூவரும் அசத்திவிட்டனர். இந்த போட்டியில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளையும், நடராஜன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதன் மூலமாக நடராஜன் இந்த IPL தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்களுக்கான பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.
8 போட்டிகளில் விளையாடியுள்ள நடராஜன் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி PURPLE CAP ஐ கைப்பற்றியுள்ளார். இவருக்கு பின் பும்ரா 10 போட்டிகளில் விளையாடி 14 விக்கெட்டுகளை வீழ்த்தி 2ஆவது இடத்தில் உள்ளார்.
முதல்முறையாக நடராஜன் தலைக்கு PURPLE CAP வந்தது. ஐதராபாத் அணியின் நட்சத்திர வீரரான ட்ராவிஸ் ஹெட் நடராஜனுக்கு PURPLE CAP ஐ அணிவித்தார்.
அதன்பின் மைதானத்தில் இருந்த தனது மகளை தூக்கி கொண்டாடிய நடராஜன், அப்படியே மகளுடன் சென்று ஐதராபாத் வீரர்களை சந்தித்தார். அப்போது புவனேஷ்வர் குமார் நடராஜன் மகளுடன் ஜாலியாக விளையாடியது இரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.