“அரச திணைக்களங்களின் வினைத்திறன்களை அதிகரிப்பதற்கு பதிலாக வெளிநாட்டு நிறுவனங்களை உள்வாங்குவதால் அரசுக்கு ஏற்படும் சர்வதேச அவமானங்கள்”

மே முதலாம் திகதி உலகமே தொழிலாளர்தினத்தினைக் கொண்டாடிக் கொண்டிருந்தது. இலங்கையிலும் அரசியல் கட்சிகள் தமது பலப்பரீட்சையைக் காண்பிப்பதற்கான போட்டிபோடல்களைச் செய்து ஓய்வடைந்த ஒருசில மணி நேரங்களில் காணொளியொன்று சமூக ஊடகங்களில் வெகுவாகப் பரவியது.

அந்தக் காணொளி பதிவாகிய இடம் கட்டுநாயக்கவில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையமாகும். அங்கு ஒரு இளைஞர் ‘உள் வருகை தரு விசா மற்றும் இணைவழி விசா’ கருமபீடத்துக்கு அருகில் கடுகாக வெடுத்துத் தள்ளுகின்றார்.

காணொளியின் படி, அவர், “என்னை மன்னியுங்கள். நான் இலங்கைப் பிரஜை. இங்கு கல்விகற்ற இலங்கையர்கள் உள்ளனர்.

எனினும் விமான நிலையத்தில் இந்தியர்கள் உள்ளனர். இது இலங்கையின் விமான நிலையம். இவர்கள் எனது மனைவியின் விசாவை நிராகரித்தனர். எனது மனைவியின் விசா தொடர்பில் எவ்வாறு இந்தியர்கள் தீர்மானிக்கலாம்” என்று கேள்வியைத் தொடுக்கிறார்.

அத்துடன், “நான் நாட்டில் வரிசெலுத்தும் ஒரு பிரஜை ஒவ்வொருவருடமும் நான் பில்லியன் ரூபா வரி செலுத்துகின்றேன்.

அதனால் என்னால் குரல் எழுப்ப முடியும். இலங்கைப் பிரஜைகளின் விசாவை இந்தியர்கள் எவ்வாறு நிராகரிக்க முடியும். இது முற்றிலும் தவறான விடயம்.

இந்திய நிறுவனமொன்றே பயணிகளிடத்தில் விசாவுக்கான கட்டணத்தினை அறவிடுகின்றது. இது எவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட முடியும்” என்றும் சுட்டிக்காண்பிக்கின்றார்.

மேலும்,அவர் “இலங்கையில் படித்தவர்கள் எத்தனை பேர் உள்ளனர். எத்தனை வர்த்தகர்கள் உள்ளனர். எத்தனை தொழில் முயற்சியாளர்கள் உள்ளனர்.

அவ்வாறு தொழில் முயற்சியாளர்களும் வர்த்தகர்களும் இருக்கின்றபோது இலங்கை அரசாங்கம் தான் விசா வழங்குவதை கையாள வேண்டும்” என்றும் குறிப்பிடுகின்றார்.

எனினும், “அரசாங்கம் எதற்காக இந்திய நிறுவனத்திற்கு இலாபமீட்டும் வகையில் விசா அனுமதிக்கும் செயற்பாட்டை வழங்கியுள்ளது.

இலங்கை அரசாங்கம் நாட்டின் அரச நிறுவனமொன்றின் செயற்பாட்டை இந்திய நிறுவனத்திற்கு விற்றுள்ளது. இது இந்தியாவின் மாபியா. இந்தியா எவ்வாறு எனது விசாவை நிறுத்தமுடியும்” என்றும் அவர் கேள்விக்கணைகளை தொடுத்துக்கொண்டே இருக்கையில் காணொளி நிறைவடைகிறது.

இந்தக் காணொளி வெளியாகி குறிப்பிட்ட கால இடைவெளியில் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தின் பேச்சாளரால் ஊடக அறிக்கையொன்று வெளியிடப்பட்டது.

அந்த அறிக்கையில், “கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் விசா வழங்கும் நடைமுறையை இந்திய நிறுவனங்கள் பொறுப்பேற்கின்றமை தொடர்பாக சமூக ஊடகங்கள் உட்பட பல்வேறு ஊடகங்களில் வெளியாகியுள்ள அறிக்கைகள் மற்றும் கருத்துகள் தொடர்பாக நாம் அறிந்துள்ளோம்.

இந்த அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிறுவனங்கள் இந்தியாவை தளமாகக்கொண்டு இயங்கும் நிறுவனங்களோ அல்லது இந்திய நிறுவனங்களோ அல்ல, மாறாக வேறு இடங்களை தலைமையகமாகக் கொண்டவை ஆகும். இவ்வாறான சூழலில் இந்தியாவை தொடர்பு படுத்துவது அடிப்படை ஆதாரமற்றதாகும்” என்று சுட்டிக்காட்டப்பட்டது.

அதனையடுத்து அரசாங்கத் தகவல் திணைக்களமும் தனது பங்கிற்கு தெளிவுபடுத்தலையும் கூடவே எச்சரிக்கையையும் வெளியிட்டது.

அதில், “இலங்கைக்கு வருகை தரும் வெளிநாட்டவர்கள் உள்வருகை தரு விசா முறைமை ஊடாக விசா விநியோகிக்கும் செயற்பாடு வி.எப்.எஸ்.குளோபல் நிறுவனத்துக்கு 2023.09.11ஆம் திகதி ஏற்றுக்கொள்ளப்பட்ட வெளியாள் நிறுவனத்துக்கு வழங்கும் அமைச்சரவை பத்திர அனுமதிக்கு அமைய வழங்கப்பட்டது.

வெளிநாட்டவர்கள் நாட்டுக்குள் வருகை தரும் போது விசா விநியோகித்தல் மற்றும் நிகழ்நிலை முறைமை ஊடாக விசாவுக்கு விண்ணப்பம் செய்தல் என்பனவற்றுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.

இந்த நிறுவனம் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சேவைகளை முன்னெடுத்துள்ளது. 3388 மத்திய நிலையங்கள் ஊடாக 151 நாடுகளுக்கு விசா விநியோகிக்கும் வகையில் இந்நிறுவனம் உலகளாவிய ரீதியில் பிரபல்யமடைந்துள்ளது.

இருப்பினும் கடந்த நாட்களில் இந்நிறுவனத்தின் சேவையில் சிக்கல் தோற்றம் பெற்றுள்ளமை தொடர்பில் ஆராய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அமைச்சரவை தீர்மானத்தை சவாலுக்குட்படுத்தி கருத்துக்களை வெளியிடும் அல்லது செயற்படும் உத்தியோகஸ்தர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது” என்றவாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

குற்றச்சாட்டுக்கு இலக்கான இந்தியாவினதும், மூன்றாந்தரப்பிடம் பொறுப்பை ஒப்படைத்த இலங்கை அரசாங்கத்தினதும் பிரதிபலிப்புக்கள் மேற்கண்டவாறு அமைந்திருந்தாலும் கூட, கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள் வருகை தரு விசா மற்றும் இணைவழி விசா ஆகியவற்றை விநியோக்கிக்கும் கருமபீடத்தில் ஏற்பட்ட நெருக்கடிகளால் சினமடைந்த நபர் ஒருவர் வெளியிட்ட அதிருப்தியாக மேற்படி காணொளி பொதுப்படையில் பார்க்கப்பட்டாலும் குறித்த நபரின் அதிருப்தியில் பல்வேறு நியாயப்பாடுகளும் இல்லாமில்லை.

மாற்றப்பட்ட நடைமுறை நாட்டின் குடிவரவு, குடியகல்வு சட்டங்களுக்கு அமைவாக வருகை தரும் இலங்கைப் பிரஜைகள் அல்லாதவர்களுக்கு உள் வருகை தரு விசா மற்றும் இணைவழி விசா வழங்கும் நடைமுறை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நடைமுறையானது 2012ஆம் ஆண்டு முதல் கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி வரையில் குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தினால் முகாமை செய்யப்பட்டு வந்த நிலையில் தெற்காசிய வலய நாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகளின் விசா கட்டணமாக 20டொலர்கள் அறவிடப்பட்டதோடு ஏனைய நாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகளிடமிருந்து 50டொலர்கள் அறவிடப்பட்டன.

இதேவேளை, கடந்த 2023ஆம் ஆண்டு அமைச்சரவை மேற்கொண்ட தீர்மானத்துக்கு அமைவாக, குடிவரவு,குடியகல்வு திணைக்களம் முன்னெடுத்துவந்த மேற்படி முகாமையை மூன்றாம் தரப்பினருக்கு வழங்குவதற்கான அனுமதி அளிக்கப்பட்டதோடு ‘வி.எப்.எஸ் குளோபல்’ என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது.

அதற்கமைவாக, குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் ஊடகா விசா பெற்றுக்கொள்ளும் நடைமுறையானது நிறுத்தப்பட்டு கடந்த ஏப்ரல் 16ஆம் திகதி முதல் வி.எப்.எஸ்.குளோபல் என்ற சர்வதேச நிறுவனத்தின் இணைய தளத்துக்குள் பிரவேசித்து விசா பெற்றுக்கொள்ளும் நடைமுறை ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன், குறித்த நிறுவனத்தின் அதிகாரிகளே விமான நிலையத்திலும் விசா வழங்கும் முகாமையையும் மேற்கொண்டனர்.

அத்தோடு வரிகள் உள்ளடங்கலாக 52டொலர்களாகக் காணப்பட்டவிசா கட்டணமானது, குறித்த நிறுவனத்தின் முகாமையின் கீழ் 18.5டொலர்கள் சேவைக்கட்டணமும், 7.27டெலர்கள் வசதிக் கட்டணமும் உள்ளடக்கப்பட்டு 100.77டொலர்களாக அதிகரிக்கப்பட்டது.

இத்தனை தூரம் கட்டண அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ள நிலையிலும் வரிசையில் காத்திருக்க வேண்டிய தேவையும், பயணங்கள் நிராகரிக்கப்படுவதும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு மட்டுமல்ல உள்நாட்டுப் பயணிகளுக்குமே இயல்பாகவே சீற்றத்தினை அளிக்கும் செயற்பாடு தான்.

பொறுப்புக்கூற யாருமில்லை இந்நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் கீழ் குடிவரவு, குடியகல்வு திணைக்களம் செயற்பட்டு வரும் நிலையில் அமைச்சின் செயலாளர் வியானி குணத்திலக்கவை தொடர்பு கொண்டபோது, “அமைச்சரவையின் தீர்மானத்துக்கு அமைவாகவே அனைத்தும் நடைபெற்றது.

எனினும் திடீரென்று ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக வி.எப்.எஸ் குளோபல் நிறுவனம் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த நிறுவனம் தற்போது முகாமைச் செயற்பாடுகளில் இருந்து நீங்கியுள்ளது.

இதனால் நாட்டின் குடிவரவு, குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மீண்டும் பழையமுறைமையில் முன்பிருந்த கட்டணத்தொகைக்கு அமைவாகவே செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளனர்” என்று குறிப்பிட்டார்.

ஆனால், அமைச்சரவையின் கூட்டுப்பொறுப்பாளர்கள் என்ற அடிப்படையில் சிவில் விமான சேவைகள் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ போன்றவர்கள் நிகழ்ந்த சம்பவத்துக்கு கவலையை வெளிப்படுத்தியதோடு தமது விடயதானத்துக்குள் குறித்த விவகாரம் உள்ளாகவில்லை என்று கூறி கைவிரித்து விட்டனர்.

எனினும் அமைச்சர் ஹரீன், மூன்றாம் தரப்புக்கு விசா வழங்கும் செயற்பாட்டை மூன்று மாதங்களின் பின்னர் ஆரம்பித்திருக்கலாம். ஜனாதிபதி தேர்தலொன்று நெருங்குகையில் எதற்காக இவ்வாறான பரிசோதனைகளை முன்னெடுக்க வேண்டும் என்று ஜனாதிபதியிடம் வினவியதாகக் கூறுகின்றார்.

அதுமட்டுமன்றி, குறித்த நிறுவனம் யாருக்குச் சொந்தமானது. அந்நிறுவனத்துக்கு விசா வழங்கும் விடயத்தில் எத்தளவு தூரம் முன் அனுபவம் காணப்படுகின்றது.

அந்நிறுவனம் வேறெங்கெல்லாம் சேவைகளை தடையின்றி வழங்குகின்றது போன்ற கேள்விகள் உள்ளதாகவும் குறிப்பிடுகின்றார்.

அமைச்சர் ஹரீனின் வினாக்களுடன் முறையான அனுமதியுடன் சேவையில் அமர்த்தப்பட்ட மூன்றாம் தரப்பு நிறுவனம் திடீரென எவ்வாறு அகற்றப்பட்டது? அந்த நிறுவனம் எவ்வாறு விசாக் கட்டணங்களை அதிகரித்தது? அதற்கான அனுமதியை யார் வழங்கியது என்ற மேலதிக வினாக்களும் சாதாரண பொதுமக்களிடத்தில் உள்ளன.

மேற்படி வினாக்களுக்கு வெளிநாடொன்றுக்குச் சென்றுள்ள விடயதானத்துக்கு பொறுப்பான அமைச்சரான டிரான் அலஸ் நாடு திரும்பியதும் பதிலளிக்கவுள்ளார். அது திருப்திகரமானதாகவோ அல்லது அதிருப்திகரமானதாகவோ இருக்கலாம்.

ஆனால், உள்வருகை தரு விசா மற்றும் இணைவழி விசா நடைமுறையில் வினைத்திறனான சேவையொன்று நாட்டுக்கு அவசியம். அவ்வாறில்லையேல் சுற்றுலாத்துறை வருமானம், அந்நிய முதலீடுகள் என்று எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைவது காணல் நீராகும்.

-ஆர்.ராம்-

Share.
Leave A Reply