ஐபிஎல் டி20 தொடரில் இதுவரை 11 ஆட்டங்கள் வரை நடந்தும் எந்த அணியும் அதிகாரபூர்வமாக ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறாத சூழல் இருந்து வந்தது.

ஆனால், நேற்றைய சன்ரைசர்ஸ் அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பிலிருந்து முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேறியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணி 12 போட்டிகளில் 8 புள்ளிகளுடன் இருக்கிறது. இன்னும் 2 ஆட்டங்களில் வென்றாலும்கூட 4 புள்ளிகள் பெற்று அதிகபட்சமாக 12 புள்ளிகள்தான் பெற முடியும். இது ப்ளே ஆஃப் சுற்றில் கடைசி இடத்துக்குக்கூட போதாது என்பதால், ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேற்றப்பட்டது.

இன்று நடக்கும் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகளுக்கு இடையிலான ஆட்டத்திலும் தோற்கும் அணியும் ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறும்.

அதேபோல லக்னோ மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே வரும் 14ம் தேதி நடக்கும் ஆட்டத்தில் தோற்கும் அணியும் ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறும். இரு அணிகளும் தற்போது 12 புள்ளிகள் பெற்றுள்ளன.


ஹைதராபாத்தில் சன்ரைசர்ஸ் படைத்த சாதனை என்ன?

ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 57-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

முதலில் பேட் செய்த லக்னோ அணி 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் சேர்த்தது. 166 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 9.4 ஓவர்களில் 167 ரன்கள் குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இதுநாள்வரை டி20 கிரிக்கெட் வரலாற்றில் 150ரன்களுக்கு அதிகமான ஸ்கோரை 62 பந்துகள் மீதமிருக்கையில் சேஸிங் செய்த முதல் அணியாக சன்ரைசர்ஸ் அணி இடம் பெற்றது.

இதற்குமுன், பிக்பாஷ் லீக்கில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு எதிராக 157 ரன்களை 60பந்துகள் மீதமிருக்கையில் பிரிஸ்பேன் ஹீட் அணிசேஸிங் செய்ததே அதிகபட்சமாக இருந்தது.

அதேபோல டி20 கிரிக்கெட்டில் 10 ஓவர்களுக்குள் லக்னோ அணிக்கு எதிராக 167 ரன்களை சன்ரைசர்ஸ் அணி எடுத்தது, இதுவரை எந்த அணிக்கும் எதிராக எடுக்காத ஸ்கோராகும். இதற்கு முன் 2018-இல் நார்த்தாம்டன்ஷையர் அணிக்கு எதிராக வொர்ஸ்டர்ஷையர் 162 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்சமாகும்.


சிஎஸ்கே அணியின் நிலை என்ன?

இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி 12 போட்டிகளில் 7 வெற்றி, 5 தோல்வி என 14 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்துக்கு முன்னேறியது.

நிகர ரன்ரேட்டில் மைனசில் இருந்த சன்ரைசர்ஸ் மாபெரும் வெற்றியால், 0.406க்கு என்று உயர்வான நிலையை அடைந்தது. சிஎஸ்கேஅணி அடுத்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால், 3-ஆவது இடத்தைப் பிடிக்க முடியும்.

ஏனென்றால், சன்ரைசர்ஸ் அணியைவிட நிகர ரன்ரேட்டில் சிஎஸ்கே அணி உயர்வாக இருப்பதால், அடுத்த ஆட்டத்தில் வென்றால், 14 புள்ளிகளுடன் 3வது இடத்துக்கு முன்னேறும். 3-ஆவது, 4-ஆவது இடத்தைப் பிடிப்பதில் சிஎஸ்கே, சன்ரைசர்ஸ் இடையே போட்டி ஏற்பட்டுள்ளது.

அடுத்துவரும் சிஎஸ்கேவுக்கான 3 ஆட்டங்களில் ஒன்றில்தோற்று 2-இல் வென்று, சன்ரைசர்ஸ் தனக்கிருக்கும் 2 ஆட்டங்களில் வென்றால், சன்ரைசர்ஸ் 3-ஆவது இடத்தையும், சிஎஸ்கே 4வது இடத்தைப் பிடிக்கும்.

ஒருவேளை சன்ரைசர்ஸ் அணி தனக்கிருக்கும் 2 ஆட்டங்களில் ஒன்றில் தோற்று ஒன்றில் வென்று, சிஎஸ்கே அணி தனக்கிருக்கும் 3 ஆட்டங்களில் வென்றால் 3-ஆவது இடத்தைப் பிடிக்கும்.

அல்லது சிஎஸ்கே அணி ஒன்றில் தோற்று 2 ஆட்டங்களில் வென்று, சன்ரைசர்ஸ் அணியும் ஒன்றில் தோற்று, ஒன்றில் வென்றால் இரு அணிகளும் தலா 16 புள்ளிகள் பெறும், 4-ஆவது இடத்துக்கு கூடுதலாக டெல்லி கேபிடல்ஸ் அல்லது லக்னோ அணிகளும் போட்டியிடும் சூழல் வரலாம்.

அப்போது எந்த அணியின்நிகர ரன்ரேட் உயர்வாக இருக்கிறதோ அந்த அணி 3-ஆவது இடத்தையும், அடுத்த உயர்வாக இருக்கும் அணி 4வது இடத்தையும் பிடிக்கும்.
ஐபிஎல் – ஹைதராபாத் – லக்னோ


லக்னோ ப்ளே ஆஃப் செல்லுமா?

அதேசமயம், லக்னோ அணி 12 போட்டிகளில் 6 வெற்றி, 6 தோல்வி என 12 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான தோல்வியால் லக்னோ நிகர ரன்ரேட் மிகமோசமாக சரிந்து மைனஸ் 0.769 எனக் குறைந்துவிட்டது. அடுத்துவரும் இரு ஆட்டங்களிலும் லக்னோ அணி வென்றாலும் ப்ளே ஆஃப் சுற்று உறுதி எனக் கூற முடியாது.

நிகர ரன்ரேட் உயர்வாக இருக்க வேண்டும், டெல்லி அணி, சன்ரைசர்ஸ்அணி ஆகியவை தலா ஒரு போட்டியில் தோற்க வேண்டும், சிஎஸ்கே அணி 2 ஆட்டங்களில் தோற்க வேண்டும் இவையெல்லாம் நடந்தால் லக்னோ அணி 16 புள்ளிகளுடன் ப்ளே ஆஃப் சுற்றில் கடைசி இடத்தைப் பிடிக்க முடியும்.

சன்ரைசர்ஸ் அணியின் பிரமாண்ட வெற்றி எப்படி சாத்தியமானது?

சன்ரைசர்ஸ் அணி நேற்று வரலாற்று சேஸிங் செய்து 10 விக்கெட் வித்தியாச்தில் வெற்றி பெற்றதற்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டிராவிஸ் ஹெட்(89), அபிஷேக் சர்மா(75) ஆகிய இருவர்தான் காரணம்.

இதில் 16 பந்துகளில் அரைசதம் அடித்த டிராவிஸ் ஹெட், 30 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இவரின் கணக்கில் 8 சிக்ஸர், 8பவுண்டரிகள் அடங்கும். அபாரமான ஆட்டத்தைவெளிப்படுத்திய டிராவிஸ்ஹெட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த ஐபிஎல் ஆட்டத்தில் மட்டும் ஹெட் 20 பந்துகளுக்குள் 3 முறை அரைசதம் அடித்துள்ளார்.

ஹெட்டுக்கு துணையாக பேட் செய்த அபிஷேக் சர்மா 19 பந்துகளில் அரைசதம் அடித்து, 28 பந்துகளில் 75 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் கணக்கில் 6 சிக்ஸர்கள், 8 பவுண்டரிகள் அடங்கும்.

டிராவிஸ் ஹெட், அபிஷேக் இருவரும் சேர்ந்து 58 பந்துகளைச் சந்தித்து அதில் 16 பவுண்டரி, 14 சிக்ஸர்களை விளாசினர். இந்த சீசனில் மட்டும் சன்ரைசர்ஸ் அணியின் பேட்டர்கள் 146 சிக்ஸர்களை அடித்துள்ளனர். ஐபிஎல் வரலாற்றில் இதுவரை எந்த அணியும் இந்த சாதனையைச் செய்ததில்லை.

சன்ரைசர்ஸ் அணி 3.1 ஓவர்களில் 50 ரன்களையும், 5.4 ஓவர்ளில் 100 ரன்களையும் சன்ரைசர்ஸ் எட்டியது. பவர்ப்ளே ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் 107 ரன்கள் சேர்த்தது.

பவர்ப்ளேயில் சேர்க்கப்பட்ட 2-ஆவது அதிகபட்சமாக அமைந்தது. இருவரின் அதிரடி ஆட்டத்தால் பந்து சிக்ஸர், பவுண்டரி என பறந்தது, ரன்ரேட் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. 8.2 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 150 ரன்களை எட்டியது. 9.4 ஓவர்களில் இலக்கை அடைந்து சன்ரைசர்ஸ் வெற்றி பெற்றது.

பந்துவீச்சிலும் மிரட்டிய சன்ரைசர்ஸ்

சன்ரைசர்ஸ் அணியின் புவனேஷ்வர், கம்மின்ஸ் பந்துவீச்சிலும் சிறப்பாகச் செயல்பட்டனர். புதிய பந்தில் புவனேஷ்வரின் ஸ்விங் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் டீகாக்(2), ஸ்டாய்னிஸ்(2) ஆகியோர் விக்கெட்டுகளை இழந்தனர்.

பவர்ப்ளேயில் புவனேஷ்வர் பந்துவீசி முடிக்கும்போது 2 ஓவர்களில் 7 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். ஷாபாஸ் அகமது 2 ஓவர்கள் வீசி 9 ரன்கள் கொடுத்து லக்னோ ரன்ரைட்டை இழுத்துப் பிடித்தனர்.

கேப்டன் ராகுல் (29)அணியை மீட்க போராடிய நிலையில் கம்மின்ஸின் தந்திரமான பந்தில் டீப் பேக்வேர்ட் பாயின்டில் நடராஜனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நடுவரிசையில் நிகோஸல் பூரன்(48), பதோனி(55) ரன்கள் சேர்த்த்து லக்னோ அணியை கரை சேர்த்தனர்.

லக்னோ அணி பவர்ப்ளேயில் 2 விக்கெட் இழப்புக்கு 27 ரன்கள் சேர்த்தது. சன்ரைசர்ஸ் அணி பவர்ப்ளேயில் விக்கெட் இழப்பின்றி 107 ரன்கள் சேர்த்தது. இரு அணிகளுக்கு இடையிலான பவர்ப்ளே ஸ்கோர் வித்தியாசம் 80ரன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


“பேச வார்த்தைகள் இல்லை”

போட்டி முடிந்த பிறகு லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் கூறுகையில் “ எனக்கு பேசுவதற்கு வார்த்தைகளே இல்லை. இவர்களின் பேட்டிங்கை நாங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறோம், இப்போதுதான் நேரடியாகப் பார்த்தோம்,நம்பமுடியாமல் இருக்கிறது.

ஹெட், அபிஷேக் அடித்த ஒவ்வொரு ஷாட்டும் பேட்டின் நடுப்பகுதியில் பட்டு தெறித்தது. சிக்ஸர் அடிப்பதற்காகவே பிரத்யேக பயிற்சி எடுத்து கடினமாக உழைத்துள்ளனர்.

பந்துவீச்சாளர்களுக்கு ஒரு வாய்ப்பைக் கூட இருவரும் வழங்கவில்லை. விக்கெட் எப்படி இருக்கிறது என்பதை ஆய்வுசெய்யக்கூட வாய்ப்பு வழங்கவில்லை.

முதல் பந்தைச் சந்தித்தது முதலே இருவரும் மிகச்சுதந்திரமாக, கட்டுப்பாடின்றி பேட் செய்தனர். விக்கெட் வீழ்த்தினால்தான் பவர்ப்ளேயில் இருவரையும் கட்டுப்படுத்த முடியும் என்று நினைத்தோம். ஆனால், எங்களால் அதை கடைசிவரை செய்ய முடியவில்லை” எனத் தெரிவித்தார்.

Share.
Leave A Reply