நாட்டின் வெளிநாட்டு கையிருப்பு ( டொலர் கையிருப்பு) 5 பில்லியன் டொலர்களாக உயர்வடைந்துள்ளன.

நாட்டில் தொடரும் டொலர் உள்வருகை அதிகரிப்பதையடுத்து டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்து ரூபாவின் பெறுமதி அதிகரித்து செல்கின்ற நிலையில் வெளிநாட்டு கையிருப்பு 5 பில்லியன் டொலர் அளவுக்கு வந்துள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் மத்திய வங்கியிடம் 17 மில்லியன் டொலர்களே கையிருப்பில் இருந்தன.

40 மில்லியன் டொலர் செலுத்தி எரிபொருள் கப்பலை விடுவிக்க முடியாத நிலை காணப்பட்டது. அவ்வாறான நிலையிலிருந்தே தற்போது உயர்வு பதிவாகியுள்ளதை பார்க்கவேண்டியுள்ளது.

பல்வேறு மூலங்களிலிருந்து டொலரின் உள்வருகை அதிகரித்து செல்கின்றமையே இதற்கு காரணமாக பார்க்கப்படுகின்றது.

முக்கியமாக சுற்றுலாத்துறை ஊடான டொலர் வருமானம் அதிகரிப்பு, வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்கள் அனுப்புகின்ற அந்நிய செலாவணி அதிகரிப்பு, சர்வதேச நிதி நிறுவனங்களின் கடன் உதவிகள்,

நாணய நிதியத்தின் கடன் உதவி உள்ளிட்ட மூலங்களினால் டொலர் உள்வருகை அதிகரித்து செல்கின்றது. இது ரூபாவின் பெறுமதியை அதிகரிப்பதில் முக்கிய பங்கை வகிக்கின்றது.

சுற்றுலாத்துறை ஊடான வருமானம் அதிகரித்து வருவதை காண முடிகிறது. அதாவது இந்த 2024 ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் அதாவது ஜனவரி பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் சுற்றுலாத்துறை ஊடாக இலங்கை பெற்றுக்கொண்ட வருமானம் ஒரு பில்லியன் டொலர்களாக பதிவாகி இருக்கின்றன.

இந்த தகவல்களை மத்திய வங்கி வெளியிட்டு இருக்கின்றது. இது கடந்த 2023 ஆம் வருடத்தின் முதல் மூன்று மாதங்களுடன் அதாவது முதலாவது காலாண்டுடன் ஒப்பிட்டு பார்க்கையில் 100 வீத அதிகரிப்பாக காணப்படுகிறது.

2019 ஆம் ஆண்டு இலங்கையில் இடம் பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்கதில்கள் மற்றும் 2020 ஆம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம் மற்றும் 2022 இல் நெருக்கடி போன்றவற்றின் காரணமாக சுற்றுலாத்துறை முற்றாக முடங்கி போனது. சுற்றுலா பயணிகளின் வருகை முற்றாக செயலிழந்தது.

சுற்றுலாத்துறை வருமானமும் குறைவடைந்தது. டொலரின் பெறுமதி கிட்டத்தட்ட 360 ரூபாவுக்கு சென்றது.

2022 ஆம் ஆண்டு நெருக்கடி நிலைக்கு சுற்றுலாத்துறை ஊடான டொலர் உள்வருகை பாதித்தமை மிக முக்கிய காரணமாகும். எனினும் தற்போது சுற்றுலாத்துறை மீண்டும் வளர்ச்சி அடைந்து வருகின்றமையானது சாதகமான நிலையை தோற்றுவித்துள்ளது.

அந்நிய செலாவணி

அதேபோன்று வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்கள் அனுப்புகின்ற டொலர் உள்வருகையும் அதிகரித்திருக்கின்றது. 2024 ஆம் ஆண்டின் மார்ச் மாதத்தில் 500 மில்லியனுக்கும் அதிகமான டொலர்கள் வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்களினால் அனுப்பப்பட்டிருக்கின்றன.

2015 ஆண்டில் 7.2 பில்லியன் டொலர்கள் வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்கள் மூலம் வந்தது. தொடர்ந்து அதிகரித்தே காணப்பட்டது.

ஆனால் 2021 இலிருந்து இது வீழ்ச்சியடைந்தது. 2020 இல் 7 பில்லியன் டொலர்கள், 2021 இல் 5.5 பில்லியன் டொலர்கள், 2022 இல் 3.8 பில்லியன் டொலர்கள் என இது குறைந்தது. 2022 நெருக்கடிக்கு இதுவும் முக்கிய காரணமாகும். எனினும் 2023 இல் 6 பில்லியன் டொலர்களாக அதிகரித்தன. 2024 இலும் சாதகமான போக்கை காட்டுகிறது.

மூன்றாவது தவணைப்பணம்

இவ்வாறு இலங்கைக்கான டொலர் உள் வருகை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு செல்கிறது. தற்போது சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது தவணை பணமும் கிடைக்க இருக்கின்றது.

அதேபோன்று ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி போன்றனவும் இலங்கைக்கான டொலர் உதவிகளை செய்து கொண்டிருக்கின்றன. இதன் காரணமாகவே டொலரின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சி அடைந்து ரூபாவின் பெறுமதி வளர்ச்சி அடைந்திருக்கிறது.

தற்போது கூட டொலரின் பெறுமதி 300 ரூபா மட்டத்தில் காணப்படுகிறது. பொருளாதாரத்தை பொறுத்தவரையில் இது ஒரு சிறந்த நிலைமையாக காணப்படுகிறது.

இவற்றுக்கு சுற்றுலாத்துறை ஊடான டொலர் வருமானம் வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்கள் அனுப்புகின்ற டொலர்கள், நாணய நிதியத்தின் கடன், உலக வங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி போன்றவற்றின் கடன்கள் என்பன மிக முக்கியமான பங்கை வகிக்கின்றன.

மத்திய வங்கியின் நடவடிக்கை

இது தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய முக்கியமான விடயம் ஒன்றை குறிப்பிட்டிருந்தார். அதாவது

‘’நெருக்கடியின் போது 200 ரூபாவாக காணப்பட்ட டொலரின் பெறுமதி 370 ரூபா வரை உயர்ந்தது. தற்போது 300 ரூபா மட்டத்துக்கு குறைவடைந்துள்ளது.

அதனை இன்னும் குறைக்கலாம். ஆனால் குறைக்கும்போது ஏற்றுமதியாளர்கள் நெருக்கடிகளை சந்திக்கின்றனர்.

எனவே அதனை குறைப்பது தற்போது சிக்கலாக இருக்கிறது. அதன் காரணமாகவே சந்தையில் இருந்து 1200 மில்லியன் டொலர்களை மத்திய வங்கி அண்மையில் மீளப்பெற்றது.

டொலரின் பெறுமதி 300 ரூபாவைவிட இன்னும் குறைவடையும். ஆனால் அது ஒரு முறையின் அடிப்படையிலே இடம்பெறும். அப்போது பொருட்களின் விலைகளும் சேவைகளின் கட்டணங்களும் மேலும் குறைவடையும்’’ என்று நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி பார்க்கும்போது டொலரின் பெறுமதி இன்னும் குறைவடையும் நிலைமையே நீடிக்கின்றது. எனினும் இராஜாங்க அமைச்சரின் கூற்றை பார்க்கும்போது மத்திய வங்கி ரூபாவின் பெறுமதி இன்னும் வேகமாக குறைவடைவதை தற்போதைய சூழலில் விரும்பவில்லை என்று தெரிகிறது.

வெளிநாட்டு கையிருப்பு

அதேபோன்று வெளிநாட்டு கையிருப்பும் அதிகரித்திருக்கின்றது. மத்திய வங்கி பேணுகின்ற வெளிநாட்டு கையிருப்பு தற்போது சிறந்ததொரு பெறுமானத்தைக் கொண்டு இருக்கின்றது.

ஐந்து பில்லியன் என்ற மட்டத்துக்கு டொலர் கையிருப்பு மத்திய வங்கியில் அதிகரித்திருக்கின்றது.

2022 இல் ஏப்ரல் மாதம் இலங்கையின் டொலர் கையிருப்பு வெறுமனே 17 மில்லியன் டொலர்களாக இருந்தன. ஆனால் தற்போது நிலைமை மாற்றமடைந்துவிட்டது. டொலர் கையிருப்பு கனிசமான நிலைக்கு சென்றுள்ளது.

கடன் மீள் செலுத்துதல் நிறுத்தம்

மற்றுமொரு விடயத்தை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும். அதாவது இலங்கை தற்போது வெளிநாட்டு கடன் மீள் செலுத்துவதை தற்காலிகமாக இடைநிறுத்தி இருக்கிறது.

அதன் காரணமாக இலங்கை வங்குரோத்து நாடு என்று தெரிவிக்கப்படுகிறது. தற்போது வங்குரோத்து நிலையிலிருந்து இலங்கை மீண்டு வந்துகொண்டிருக்கிறது.

மீண்டும் கடன்களை மீள் செலுத்த ஆரம்பிக்கும் பட்சத்தில் இலங்கைக்கு டொலர் பற்றாக்குறை ஏற்படலாம். அப்போது ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடையலாம். தற்போதைய சூழலில் கிட்டத்தட்ட வருடம் ஒன்றுக்கு ஐந்து பில்லியன் டொலர்களே கடனாக செலுத்த வேண்டியிருக்கிறது.

ஆனால் கடன் மறுசீரமைப்பின் பின்னர் அது குறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கிட்டத்தட்ட மூன்று அல்லது நான்கு பில்லியன் டொலர்கள் வருடாந்தம் கடனாக செலுத்த வேண்டி ஏற்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

‘’கடன் மீள்செலுத்த ஆரம்பிக்கும்போது டொலர் நெருக்கடி ஏற்படும் என்று கூறுகிறார்கள். ஆனால் அதற்கான ஏற்பாடுகளை செய்துவருகிறோம் ‘’ என்று நிதி இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய குறிப்பிடுகிறார்.

டொலர் வருகை

அதுவும் கடன்களை மீள் செலுத்துவதற்கு நீண்ட காலம் எடுக்குமாயின் அதிலும் ஒரு நிவாரணத்தை இலங்கை பெற்றுக்கொள்ள முடியும்.

சரியான முறையில் இந்த கடன் மறுசீரமைப்பு செய்யப்படும் பட்சத்தில் அதாவது இலங்கைக்கு ஒரு குறிப்பிடத்தக்க வகையில் சாதகமாக கடன் மறுசீரமைப்பு செய்யப்பட்டால் இலங்கையினால் தொடர்ந்து இந்த டொலர் வருகையை பேண முடியும். அதாவது டொலரின் பெறுமதி அதிகரிக்காமல் ரூபாவின் பெறுமதியை சீராக வைத்துக் கொள்ள முடியும்.

இதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் தற்போது செய்ய வேண்டி இருக்கின்றது. அதுமட்டுமின்றி டொலரின் பெறுமதி குறைவடைந்து ரூபாவின் பெறுமதி அதிகரிக்கும் போது அதன் நன்மைகள் மக்களை சென்றடைய வேண்டும். கடந்த காலங்களில் டொலரின் பெறுமதி அதிகரித்ததன் காரணமாகவே இறக்குமதி செலவு அதிகரித்து பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணங்கள் அதிகரித்தன.

உலக வங்கி, நாணய நிதியத்தின் மதிப்பீடுகள்

இதேவேளை இலங்கையின் தற்போதைய இந்த பொருளாதார மீட்சி செயற்பாடுகள் சாதகமான நிலைமையை கொண்டிருப்பதாக உலக வங்கி சர்வதேச நாணய நிதியம் என்பன தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றன. அண்மையில் இலங்கையின் அபிவிருத்தி தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த உலக வங்கி பல்வேறு விடயங்களை தெரிவித்திருந்தது.

மேலும் சாதகமான நிலைமைகள் இலங்கைக்கு ஏற்பட்டிருந்தாலும் கூட இன்னும் சவால்கள் நீடித்துக் கொண்டிருக்கின்றன. சர்வதேச கடன் மறுசீரமைப்பை செய்வதில் இலங்கைக்கு இன்னும் சவால் நீடித்துக் கொண்டிருக்கின்றது.

சர்வதேச தனியார் கடன் வழங்குனர்களுடன் 16 பில்லியன் டொலர்களுக்கு கடன் மறுசீரமைப்பு செய்து கொள்வது தான் தற்போது சவாலாக மாறியிருக்கின்றது.

கடன் மறுசீரமைப்பு

எனவே எதிர்வரும் மூன்று மாதங்கள் மிக முக்கியமானதாக காணப்படுகின்றன. சர்வதேச கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டால் மட்டுமே சர்வதேச நாணய நிதியத்தின் கடன் உதவியை தொடர்ந்து பெற்றுக் கொள்ள முடியும்.

இருதரப்பு கடன்களை வழங்கியுள்ள இந்தியா, சீனா, ஜப்பான் நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு செய்வது சிக்கலுக்குரியதாக இல்லை. ஆனால் தனியார் கடன் வழங்குநர்களுடனான மறுசீரமைப்பே சவாலில் இருக்கிற்து. அண்மையில் இது தொடர்பில் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தைகளிலும் இணக்கப்பாடு எட்டப்படவில்லை.

நீடிக்கும் சவால்கள்

எனவே தற்போதைய டொலர் உள் வருகை அதிகரிப்பு, மத்திய வங்கியின் வெளிநாட்டு கையிருப்பு உயர்வு, ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு போன்றவற்றுக்கு மத்தியில் இன்னும் சவால்கள் நீடித்துக் கொண்டிருக்கின்றன.

இந்த சூழலில் இருக்கின்ற சவால்களை சரியான முறையில் அரசாங்கம் அடையாளம் கண்டு கடந்து வரவேண்டும்.

மிக முக்கியமாக அரச வருமானத்தை அதிகரித்தல், கடன் மறுசீரமைப்பை செய்தல், பொருளாதார மறுசீரமைப்புக்களை முன்னெடுத்தல், நிதி, கடன், விலை ஸ்திரத்தன்மையை பேணுதல், நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைத்தல் போன்றவற்றில் முன்னேற்றம் அவசியமாகின்றது. இவை சரியாக இடம்பெற்றால் மட்டுமே டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைவதும் ரூபாவின் பெறுமதி அதிகரிப்பதும் தொடர்ந்து நீடிக்கும்.

-ரொபட் அன்டனி-

Share.
Leave A Reply