ஒலிம்பிக் தீப்பந்தத்தின் நீண்ட அஞ்சலோட்ட சுற்றுப்பயணம் பிரான்ஸ் முழுவதும் இடம்பெறவுள்ள நிலையில் பரிஸ் பிராந்தியத்தில் தீபத்தை ஏந்தும் நல்வாய்ப்பு ஈழத் தமிழர் ஒருவருக்கும் கிடைத்துள்ளது.

பரிஸ் நகரில் கடந்த வருடம் சிறந்த பாண் தயாரிப்பில் முதலிடம் பெற்று நாட்டின் ஜனாதிபதியின் வசிப்பிடமாகிய எலிஸே மாளிகைக்குப் பாண் விநியோகிக்கின்ற பெருமையைப் பெற்றவரான தர்ஷன் செல்வராஜா என்பவரே ஆயிரக்கணக்கானோரில் ஒருவராகப் பாரிஸில் ஒலிம்பிக் தீப்பந்தம் ஏந்துவதற்குத் தெரிவாகியிருக்கிறார்.

பிரான்சின் பாரிசில் இடம்பெற்ற சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான போட்டியில் இந்த 2023ஆம் ஆண்டுக்கான விருதை வென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்ஷன் செல்வராஜா பரிஸ் ஒலிம்பிக் சுடரை ஏந்தவுள்ளார்.

ஒலிம்பிக் தீபத்தை 10,000 பேர் கரங்களில் ஏந்தி ஓடவிருக்கும் நிலையில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்ஷன் செல்வராஜாவுக்கும் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தும் வாய்ப்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்று (09) மார்செய் நகருக்கு சென்றடையும் தீப்பந்தத்தை பிரான்ஸின் பெருநிலப்பரப்பிலும் கடல் கடந்த நிர்வாகத் தீவுகளிலும் சுமார் 12 ஆயிரம் கிலோமீற்றர்கள் தூரத்துக்கு ஆயிரக்கணக்கானவர்கள் அஞ்சல் ஓட்டமுறையில் மாறிமாறிச் சுமந்து செல்லவுள்ளனர்.

இந்த நீண்ட பயணத்தில் சுமார் 400 நகரங்கள் மற்றும் உல்லாசப்பயண மையங்கள் ஊடாகத் தீப்பந்தம் எடுத்துச்செல்லப்படவுள்ளது.

Share.
Leave A Reply