2024 ஏப்பிரல் 18 வியாழக்கிழமை பலஸ்தீனத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையில் முழுமையான அங்கத்துவ அந்தஸ்த்தை பெறுவதற்காக பலஸ்தீன அதிகார சபையால் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் வாக்கெடுப்புக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அந்தத் தீர்மானத்தின் மீது யூதர்களின் ஆதரவோடு அரசியல்வாதிகளை உருவாக்குகின்ற மற்றும் இல்லாமலாக்குகின்ற, யூத சக்திகளால் அரசியல் வடிவமைப்புச் செய்யப்படுகின்ற தற்போதைய உலகின் ஒரேயொரு வல்லரசான அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி அதனை நிராகரித்துள்ளது.
அல்ஜீரியா இத்தீர்மானத்தை முன்மொழிந்திருந்தது. இது பலஸ்தீனத்துக்கு ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் வாக்குரிமையுடன் கூடிய முழு அங்கத்துவம் அளிப்பதற்கான தீர்மானமாகும்.
இப்போது பலஸ்தீனத்துக்கு வழங்கப்பட்டிருப்பது வெறும் பார்வையாளர் அந்தஸ்த்து மட்டுமே. 140 நாடுகள் ஏற்கனவே இத்தீர்மானத்தை ஆதரித்திருந்தன.
15உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.பாதுகாப்புச் சபைக்கு அத்தீர்மானம் கொண்டுவரப்பட்டபோது அதற்கு ஆதரவாக 12நாடுகள் வாக்களித்தன.
அமெரிக்கா அதை எதிர்த்தது. பிரித்தானியாவும், சுவிட்சர்லாந்தும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
அமெரிக்காவின் நேச அணியில் இருக்கும் பிரான்ஸ், ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் இந்த தீர்மானத்தை ஆதரித்துள்ளன. அதுதவிர அல்ஜீரியா, மொசாம்பிக், சியராலியோன், கயானா, ஈக்குவேடர், ரஷ்யா, சீனா, பிரான்ஸ், சுலோவேனியா, மோல்டா, ஜப்பான், கொரியா என்பன தீர்மானத்தை ஆதரித்தன.
2012நவம்பரில் ஐ.நா.பொதுச்சபையில் பலஸ்தீனம் தொடர்பான தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டு முழு அங்கத்துவமற்ற பார்வையாளர் அந்தஸ்த்து அதற்கு வழங்கப்பட்டது.
ஐ.நாவுக்கான அல்ஜீரியா தூதுவர் அம்மார் பென்ஜமா ‘பலஸ்தீனத்துக்கான அனுமதி நீண்டகால அநீதியை சீரமைக்கும் ஒரு முக்கியமான முன்னகர்வு’ என்ற தொனிப்பொருளில் இந்தத் தீர்மானத்தை சமர்ப்பித்திருந்தார்.
‘பலஸ்தீனத்தை விலக்கி வைக்காமல் அதனை இணைத்துக் கொள்வதன் மூலம் மட்டுமே சமாதானத்தை அடைய முடியும்’ என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இத்தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்த ரஷ்யா, அதன் பின் இஸ்ரேலின் பிரதிநிதி அங்கு உரையாற்ற ஆரம்பித்தபோது சபையில் இருந்து வெளிநடப்புச் செய்தது.
காஸாவில் தற்போது இடம்பெற்று வரும் மோதல்கள் ஆரம்பமான பின் அமெரிக்கா அது தொடர்பான தீர்மானங்களின் மீது ஐந்தாவது தடவையாக தனது வீட்டோ அதிகாரத்தை பாவித்துள்ளது என்று ரஷ்யாவின் ஐ.நா.பிரதிநிதி வாஸிலி நெபன்ஸியா சுட்டிக்காட்டியுள்ளார்.
பலஸ்தீனம் பற்றி அவர்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை அமெரிக்கா மீண்டும் வெளிக்காட்டி உள்ளது.
வொஷிங்டனைப் பொறுத்தமட்டில் பலஸ்தீனம் அதற்குரிய அந்தஸ்த்துக்கு தகுதியற்றது. இஸ்ரேலின் நலன்களைப் புரிந்து கொள்ளும் விடயத்தில் பலஸ்தீனத்தை ஒரு தடைக்கல்லாகவே அவர்கள் நோக்குகின்றனர் என்று அவர் மேலும் விளக்கியுள்ளார்.
இந்நிலையில் ஐ.நா.வில் முழு அங்கத்துவம் பெறவேண்டும் என்ற பலஸ்தீனத்தின் விண்ணப்பத்தை உலக சமூகத்தில் பெரும்பாலானவர்கள் ஆதரிக்கின்றனர்.
இந்நிலையில் குறித்த தீர்மானத்தின் மீது அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியுள்ளமையானது வரலாற்றில் தவிர்க்க முடியாதவொரு காரியத்தை நிறுத்துவதற்கு எடுக்கப்பட்ட வீண் முயற்சியாகும்.
இவ்வாக்கெடுப்பின் முடிவானது உலகில் அமெரிக்கா முழுமையாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதை தெளிவாகக் கோடிட்டுக் காட்டுகின்றது என்று ரஷ்ய பிரதிநிதி விளக்கமளித்துள்ளார்.
உண்மையில் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தால், பலஸ்தீனத்துக்கு ஐ.நா.சபையில் முழுமையான அங்கத்துவத்தைக் கொடுத்திருக்கும்.
இதுநீண்ட காலமாக அவர்கள் அடையத்துடிக்கும் ஒருஇலக்காகும். 1948இல் இஸ்ரேல் உருவாக்கப்பட்டது முதல் இவ்விலக்கை அடையவிடாமல் அவர்கள் எல்லா வகையிலும் காய்களை நகர்த்தி வருகின்றனர்.
பலஸ்தீனர்கள் தான் பலஸ்தீனத்தின் பிள்ளைகள். அந்தப் பலஸ்தீனத்தை தான் பிரித்தானிய ஆதிக்க சக்தி தனது அதிகாரத்தை பயன்படுத்தி இஸ்ரேலாக மாற்றியது.
இன ஒழிப்பு நடவடிக்கைகள் மூலமும் பாரிய அளவிலான படுகொலைகள் மூலமும், தமது சொந்த பூமியில் இருந்தும் வீடுகளில் இருந்தும் பலஸ்தீனர்களை பலவந்தமாக வெளியேற்றிய பின், உலகின் பல்வேறு இடங்களில் அலைந்து திரிந்து கொண்டிருந்த யூதர்களை அங்கு குடியேற்றியது.
1947நவம்பர் 29இல் ஐ.நாடு. பொதுச்சபையில் தீர்மானம் 181 நிறைவேறியது. பலஸ்தீனத்தை யூதர்களுக்கும் அரபிகளுக்குமாக (ஜெரூஸலத்தையும் பெத்லஹேமையும் உள்ளடக்கிய ஒரு சர்வதேச வலயத்துடன்) பிரிக்கும் யோசனையை அத்தீர்மானம் உள்ளடக்கியிருந்தது.
இஸ்ரேல் 1948முதல் ஐக்கிய நாடுகள் சபையில் முழுமையான அங்கத்துவத்தை பெற்றுள்ளது. பலஸ்தீனத்தை இஸ்ரேலாக ஸ்தாபிக்கும் தீர்மானம் ஐ.நா.சபையை அச்சுறுத்தி நிறைவேற்றப்பட்டது முதல் இந்நிலை நீடிக்கின்றது.
இஸ்ரேலை முழு அளவான அங்கத்துவ நாடாக மாற்றுவதில் அமெரிக்காவைத் தொடர்ந்து பிரித்தானியாவும் காத்திரமான பங்களிப்பை வழங்கியது.
ஆனால் முழு உலகமும் பலஸ்தீனத்துக்கு முழுமையான அங்கத்துவம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும்கூட தற்போது வரையில் அது நிராகரிக்கப்பட்டே வருகின்றது. இதனால் பலஸ்தீன மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டே வருகின்றன.
இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தால், வீட்டோ அதிகாரம் இல்லாத 193உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச்சபையில் பலஸ்தீனம் 194ஆவது உறுப்பினராக அங்கீகாரம் பெற்றிருக்கும்.
பலஸ்தீனத்துக்கான ஐ.நா.பிரதிநிதி ரியாத் மன்சூர் “இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படாமையானது எமது மனஉறுதியை குலைத்து விடாது.
எமது தொடர் முயற்சியிலும் அது எம்மை தோல்வி அடையச் செய்யாது. இதன்மூலம் எமது முயற்சிகளை நாம் நிறுத்திக் கொள்ளப்போவதும் இல்லை.
பலஸ்தீன நாடு என்பது இனி தவிர்க்க முடியாதது. அதுவொரு யதார்த்தம். அவர்களுக்கு அதுதூரத்தில் இருக்கலாம். ஆனால் எமக்கு அதுமிக அண்மையில் இருக்கின்றது” என்று கூறினார்.
முழு அளவிலான ஐ.நா. அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ள பலஸ்தீனம் மேற்கொண்ட இரண்டாவது முயற்சி இதுவாகும். 75 வருடங்களுக்கு மேற்பட்ட இப்பலஸ்தீன – இஸ்ரேல் பிரச்சினை தற்போதைய மோதல்கள் காரணமாக மீண்டும் உலகில் பிரதானமாக பேசப்படும் விடயமாக மாறியுள்ளது.
பலஸ்தீன அதிகார சபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் முதல் தடவையாக 2011இல் முழு அளவிலான அங்கத்துவத்துக்கான விண்ணப்பத்தை ஐ.நா. பொதுச்சபையில் சமர்ப்பித்தார். அப்போது பாதுகாப்புச் சபையின் 15உறுப்பு நாடுகளில், தேவையான ஒன்பது நாடுகளின் ஆதரவு பலஸ்தீனத்துக்கு கிடைக்கவில்லை.
பின்னர் 2012இல் பொதுச்சபையில் கிடைத்த அமோகமான மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் சாதாரண பார்வையாளர் நிலையில் இருந்து முழு அங்கத்துவமற்ற பார்வையாளர் என்ற நிலைக்கு உயர்த்தப்பட்டது.
இதன் மூலம் பலஸ்தீன பிரதேசத்துக்குள் செயற்படும் அமைப்புக்கள் பல ஐ.நா.விலும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உட்பட ஏனைய சர்வதேச அமைப்புக்கள் பலவற்றுடனும் இணைந்து கொள்வதற்கான கதவுகள் திறந்து விடப்பட்டன.
கெயிட்லின் ஜோன்ஸ்டன் என்ற பத்தி எழுத்தாளர் இதுபற்றிக் குறிப்பிடுகையில் “இஸ்ரேலியர்கள் எது வேண்டுமென நி;னைக்கின்றார்களோ, அதுவே அமெரிக்காவுக்கும் தேவைப்படுகின்றது.
பலஸ்தீனர்கள் முழுமையாக நாட்டை விட்டுவிட்டு போக வேண்டும், அல்லது மண்டியிட்டு சரணடைய வேண்டும். அல்லது வரலாற்றின் குப்பை தொட்டியில் ஒருமறக்கப்பட்ட குறிப்பாக போடப்படும் வரை தொல்லைகள் தருவதை நிறுத்த வேண்டும். ஆனால் அமெரிக்காவுக்கு வெளிப்படையாக இதை உலகத்தின் முன்னால் கூற முடியாது.
எனவே இஸ்ரேல் நீண்டகாலமாக எல்லா வகையிலும் முயற்சித்து வரும், ஆனால் ஒரு போதும் நடைபெற முடியாத, இருநாட்டு தீர்வை அமெரிக்கா ஆதரிக்கின்றது. இதுவொரு யதார்த்தமான பிரச்சினைக்கு முன்வைக்கப்பட்ட முற்றிலும் கற்பனையான ஒரு தீர்மானமாகும்.
பலஸ்தீனத்துக்கு ஆதரவான தீர்மானத்தை ஆதரிப்பதை விட்டுவிட்டு அதற்கான மாற்றீடுகள் பற்றி யோசிப்பதானது தொடர்ச்சியாக இனப்பாகுபாடு, அடக்குமுறை, இனசுத்திகரிப்பு மற்றும் இனஒழிப்பு என்பனவற்றை ஆதரிக்கும் செயற்பாடாகும்” என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா இந்த அபத்தமான கேலிக்கூத்து நிலையையே பராமரித்து வருகின்றது. தெளிவான சான்றுகளுக்கு மத்தியிலும்கூட இல்லாதவொரு போலியான தீர்வையே அதுதொடர்ந்தும் ஆதரிக்கின்றது.
இதனிடையே பலஸ்தீன சுதந்திரப் போராட்ட அமைப்பான ஹமாஸ், இஸ்ரேலின் பிரதான இராணுவ ஆதரவாளரான அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பாவித்ததை வன்மையாகக் கணடித்துள்ளது.
சர்வதேச மனவுறுதிக்கு எதிராக அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பாவித்துள்ளது. உலக அமைப்பில் பலஸ்தீனத்துக்கான முழு அங்கத்துவ நிலையை அமெரிக்கா நிராகரித்துள்ளது.
ஆக்கிரமிப்பு செயற்பாட்டின் மீதான பக்கச் சார்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டை நாம் மிகஉறுதியான வார்த்தைகளால் கண்டிக்கின்றோம் என்று தெரிவித்துள்ள ஹமாஸ் இயக்கம்,
அமெரிக்காவின் உறுதிப்பாட்டுக்கு அப்பால் அதை மீறும் வகையில் உலக அழுத்தம் பிரயோகிக்கப்பட வேண்டும்.
பலஸ்தீன மக்களின் போராட்டத்துக்கும் அவர்களின் நியாயமான சட்டபூர்வமான சுய நிர்ணயத்துக்கான உரிமைகளுக்கும் உலகம் தொடர்ந்தும் ஆதரவளிக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
-லத்தீப் பாரூக்-