ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோவின் போரானது அணு ஆயுதங்களைப் பயன்படுத்த இட்டுச் செல்ல அச்சுறுத்தும் தீவிரப்பாட்டின் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கிறது என்பதற்கான அறிகுறிகள் அதிகரித்து வருகின்றன.
உயர்மட்ட நேட்டோ அதிகாரிகள் ரஷ்யாவுக்கு எதிராக ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் தரைவழிப் போரில் இறங்குவது குறித்து பகிரங்கமாக பேசி வருகின்றனர்,
அதேவேளையில் ரஷ்ய அதிகாரிகள் நேட்டோ நாடுகள் மீதான எதிர்-தாக்குதல்களைத் தொடங்கக்கூடும் என்று எச்சரிக்கின்றனர்.
அக்டோபர் 26, 2022 அன்று வடமேற்கு ரஷ்யாவின் பிளெசெட்ஸ்கில் உள்ள ஒரு ஏவுதளத்திலிருந்து ரஷ்யாவின் அணு ஆயுத பயிற்சியின் ஒரு பகுதியாக யார்ஸ் என்னும் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை பரிசோதனை செய்ய ஏவப்படுகிறது. [AP Photo/Russian Defense Ministry Press Service]
கடந்த வாரம், பிரெஞ்சு வெளிநாட்டு லெஜியன் படையணியின் 100 பீரங்கிப் படையினர்கள் மற்றும் கண்காணிப்பு வல்லுனர் படைகள் உக்ரேனில் ஸ்லாவ்யன்ஸ்க்கில் (Slavyansk ) முன்னரங்க நிலைகளில் நிறுத்தப்பட்டனர் என்று முன்னாள் அமெரிக்க பாதுகாப்புத்துறை துணைச் செயலர் ஸ்டீபன் பிரையன் ஆல் ஆசியா டைம்ஸில் கொடுத்த ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்னும் 1,500 பிரெஞ்சு வெளிநாட்டு லெஜியோனேயர் படைகள் விரைவில் உக்ரேனுக்கு அனுப்பப்படலாம் என்று பிரையன் கூறினார். இதன் ஒரு விளைவு “ஒரு ஐரோப்பா தழுவிய போரைத் தூண்டும் சாத்தியக்கூறாகும்” என்று அவர் எழுதினார்.
பிரெஞ்சு வெளியுறவு அமைச்சகம் பிரையனின் அறிக்கையை மறுத்த போதிலும், அது ரஷ்யாவுடனான தரைவழிப் போருக்கான ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் முந்தைய அழைப்புகளின் வரிசையில் உள்ளது.
மக்ரோனும் ஏனைய உயர்மட்ட நேட்டோ அதிகாரிகளும் இப்போது ஒரு ஆக்ரோஷமான பத்திரிகை பிரச்சாரத்தில் இந்த கருத்துக்களை மீண்டும் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த வாரம், தி எகனாமிஸ்ட் இல், மக்ரோன் மீண்டும் நேட்டோ உக்ரேனுக்கு தரைப்படை துருப்புகளை அனுப்பத் தயாராக இருக்க வேண்டும் என்று கோரினார்:
“ரஷ்யர்கள் முன்னரங்க நிலைகளை உடைத்தால், உக்ரேனிய கோரிக்கை இருந்தால் —இன்று அப்படி இல்லை— நாம் சட்டபூர்வமாக இந்தக் கேள்வியை நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கும்” என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த வார இறுதியில், இத்தாலிய நாளேடான La Repubblica இன்னும் கூடுதலான நேட்டோ போர் திட்டங்கள் குறித்து தகவல்களை வெளியிட்டது.
அது, இரகசிய நேட்டோ ஒப்பந்தங்கள் இரண்டு “சிவப்புக் கோடுகளை” வரையறுக்கின்றன, பெலாரஸ் போரில் நுழைதல் மற்றும் போலந்து, ஹங்கேரி அல்லது பால்டிக் நாடுகளை குறிவைத்து ரஷ்ய “ஆத்திரமூட்டல்” ஆகியவற்றை அது மேற்கோளிட்டது.
இந்த “சிவப்புக் கோடுகளில்” ஏதேனும் ஒன்றைத் தாண்டினால், பால்டிக் அரசுகளில் இருந்து ருமேனியா வரையில் கிழக்கு ஐரோப்பா முழுவதிலும் நேட்டோ 100,000 துருப்புகளை அணிதிரட்டும்.
மேலும், கடந்த வியாழனன்று, பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் டேவிட் கேமரூன் கியேவ்விற்கு விஜயம் செய்தார், அங்கு அவர் கூறுகையில், ரஷ்யா மீது குண்டுவீச பிரிட்டன் நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த உக்ரேனுக்கு “முழு உரிமை” இருப்பதாகத் தெரிவித்தார்.
இந்த வார இறுதியில், மக்ரோன் பிரெஞ்சு நிதியியல் செய்தித்தாளான லா ட்ரிபியூன் க்கு கூறுகையில், ரஷ்யாவின் இராணுவ கட்டளையகத்திற்கு நேட்டோ அதன் நடவடிக்கைகள் குறித்து முழுமையான முன்கணிக்க முடியாத நிலையை உருவாக்க வேண்டும் என்றார்:
அதாவது “ஜனாதிபதி புட்டின் தொடர்ந்து அணு ஆயுத அச்சுறுத்தலை ஏற்படுத்தி வந்துள்ளார். அத்தகைய எதிரியை எதிர்கொள்ளும்போது, ஒருவரின் சொந்த செயல்களுக்கு முன் வரையறுக்கப்பட்ட வரம்புகளை அமைப்பது பலவீனத்தின் வெளிப்பாடு!
மாறாக, நாம் என்ன செய்யப் போகிறோம் என்பது பற்றிய எந்த யோசனையையும் அவருக்கு தெரிவதை நிறுத்த வேண்டும், இப்படித்தான் நாம் அவரை நடவடிக்கை எடுப்பதிலிருந்து தடுக்க முடியும்” என்று தெரிவித்தார்.
மக்ரோனின் அறிக்கைகள் ஆளும் வட்டாரங்களில் மேலோங்கி வரும் அப்பட்டமான பொறுப்பற்ற மனோநிலையை எடுத்துக்காட்டுகின்றன.
பனிப்போர் காலத்தில், அமெரிக்க மற்றும் சோவியத் அதிகாரிகள் வெள்ளை மாளிகைக்கும் கிரெம்ளினுக்கும் இடையே ஒரு அவசரகால அவசர தொலைபேசி இணைப்பை நிறுவியிருந்தனர்,
ஒரு தரப்பு மற்றய தரப்பின் நோக்கங்களை தவறாக புரிந்து கொண்டு, எதிரி அணுவாயுத தாக்குதலை தொடங்கிவிட்டதாக நம்பினால் தற்செயலாக அணுவாயுதப் போர் வெடிக்கக்கூடும் என்று அஞ்சினர்.
செப்டம்பர் 26, 1983 இல், சோவியத் ஆரம்ப எச்சரிக்கை அமைப்புகளானது அமெரிக்கப் படைகள் சோவியத் ஒன்றியத்தின் மீது அணுவாயுத ஏவுகணைகளை ஏவியதாக தவறாக சுட்டிக்காட்டியபோது, இது கிட்டத்தட்ட நிகழ்ந்திருந்தது.
எவ்வாறிருப்பினும், இப்போது, நேட்டோ ஒரு பேச்சுவார்த்தை மூலமான சமாதானத்தை நாடுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை, மாறாக நேட்டோ சாத்தியமானளவுக்கு மிகவும் ஆக்ரோஷமான கொள்கையை ஏற்கக்கூடும் என்று ரஷ்ய இராணுவத்தை அனுமானிக்க நிர்பந்திப்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதாக மக்ரோன் கூறுகிறார்.
ரஷ்யா மீது பெரியளவிலான தரைவழி படையெடுப்பைத் தொடங்குவதற்கான சாத்தியக்கூறு மட்டுமல்ல, மாறாக பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா ஆகிய அனைத்தும் ஒரு போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை நிராகரிக்க மறுக்கின்ற நிலையில், உக்ரேனில் உள்ள ரஷ்ய படைகள் மீது அல்லது ரஷ்ய நகரங்கள் மீது ஒரு முன்கூட்டிய அணு ஆயுத தாக்குதலை (pre-emptive nuclear strike) நடத்துவதும் இதில் உள்ளடங்கும்.
பிரெஞ்சு துருப்புக்கள் ஏற்கனவே உக்ரேனில் நிலைநிறுத்தப்பட்டிருந்தாலும் இல்லாவிட்டாலும், கிரெம்ளின் தெளிவாக இந்த அறிக்கைகளை தீவிரமாக எடுத்துக் கொள்கிறது.
Macron’
ரஷ்யாவுடன் நேட்டோ உறவுகளைக் கட்டியெழுப்ப அவர் விரும்புவதாக மக்ரோன் திட்டமிட்டுக் கூறிய “மூலோபாய தெளிவின்மை” ஆனது ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
நேட்டோ மோதலை பேரழிவுகரமாக அதிகரிக்கக்கூடும் என்பதில் பெருகிய முறையில் நம்பிக்கை கொண்ட ரஷ்ய அதிகாரிகள், அதற்குப் பதிலடியாக மிகக் கடுமையான நடவடிக்கைகளைத் தயாரிக்க அழைப்பு விடுத்துள்ளனர், இது போரில் பேரழிவுகரமான விரிவாக்கத்திற்கான நிலைமைகளை உருவாக்குகிறது.
நேற்று, கிரெம்ளின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதை உருவகப்படுத்தும் அதன் இராணுவ ஒத்திகைகளை நடத்தவிருப்பதாக அறிவித்தது. கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், “உக்ரேனுக்கு ஆயுதமேந்திய படைப்பிரிவுகளை அனுப்பும் —அதாவது உண்மையில் ரஷ்ய துருப்புகளுக்கு முன்னால் நேட்டோ சிப்பாய்களை நிறுத்துவதற்கான ஒரு நோக்கம்” உட்பட, “பிரெஞ்சு ஜனாதிபதி மற்றும் பிரிட்டிஷ் வெளியுறவுச அமைச்சரால் தொடங்கப்பட்ட பதட்டங்களின் விரிவாக்கத்தில் முன்னொருபோதும் இல்லாத கட்டத்திற்கு” ஒரு விடையிறுப்பாக, இந்த அணு ஆயுத ஒத்திகைகளுக்கு அழைப்புவிடுத்தார்.
David Cameron
கேமரூன் மற்றும் மக்ரோனின் அறிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் நேற்று பிரிட்டிஷ் மற்றும் பிரெஞ்சு தூதர்களை அழைத்த பின்னர் அசாதாரண எச்சரிக்கைகள் எழுந்தன.
கேமரூனின் அறிக்கைகள் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான மோதலில் பிரிட்டனை “நடைமுறையில் ஒரு தரப்பாக” ஆக்குகின்றன என்று ரஷ்யாவுக்கான பிரிட்டன் தூதர் நைஜல் கேசியை அது எச்சரித்தது என்று கார்டியன் எழுதியது. “பிரிட்டன் ஆயுதங்களைக் கொண்டு ரஷ்ய பிராந்தியத்தின் மீது உக்ரைனியர்கள் நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக, உக்ரைன் மற்றும் வெளிநாடுகளில் உள்ள எந்தவொரு பிரிட்டிஷ் இராணுவ வசதிகள் மற்றும் உபகரணங்களும் குறிவைக்கப்படலாம் என்று கேசியிடம் கூறப்பட்டது” என்று ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நேற்று, அவரது டெலிகிராம் சேனலில், முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவ் அப்பட்டமாக குறிப்பிடுகையில், நேட்டோ அதன் போக்கைத் தொடர்ந்தால், ஒரு “உலகப் பேரழிவுக்கு” மத்தியில் ரஷ்யாவானது வாஷிங்டன், பாரீஸ் மற்றும் இலண்டன் மீது குண்டுவீசக்கூடும் என்றார். மெட்வெடேவ் பின்வருமாறு எழுதினார்:
மேற்கில் ஆளும் வர்க்கமானது ஒருவித ஒட்டுமொத்தமாக சீரழிந்து வருகிறது. இந்த வர்க்கம் உண்மையில் அடிப்படை விஷயங்களை தர்க்கரீதியாக இணைக்க விரும்பவில்லை.
உக்ரைன் பிரதேசத்திற்கு உங்கள் துருப்புக்களை அனுப்புவது அவர்களின் நாடுகள் நேரடியாக போரில் நுழைவதை இன்றியமையாததாக்கும், அதற்கு நாங்கள் பதிலளிக்க வேண்டும். மற்றும், அந்தோ, உக்ரைன் பிரதேசத்தில் மட்டுமல்ல.
இந்த விடயத்தில், அவர்களில் எவரும் கேபிடல் ஹில்லிலோ அல்லது எலிசே அரண்மனையிலோ அல்லது 10 டவுனிங் தெருவிலோ மறைந்து கொள்ள முடியாது. ஒரு உலகப் பேரழிவு வரும்.
மே 4 அன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இணையவழி மே தினப் பேரணியை ஆரம்பித்து வைத்துப் பேசிய டேவிட் நோர்த், உக்ரேனில் ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ போரானது ஓர் அணு ஆயுத உலகப் போராக தீவிரமடையக் கூடிய அபாயம் குறித்து எச்சரித்தார்.
பிரதான ரஷ்ய நகரங்களைத் தாக்கக்கூடிய நீண்ட தூர ஏவுகணைகளைக் கொண்டு நேட்டோவின் உக்ரேனிய கைப்பாவை ஆட்சியை ஆயுதபாணியாக்குவதற்கு அமெரிக்க-பிரிட்டன் வாக்குறுதிகளை மேற்கோளிட்டு நோர்த் கீழ்கண்டவாறு கூறினார்:
ஆனால் 1962 இல் கியூப ஏவுகணை நெருக்கடியின் போது ஜனாதிபதி ஜோன் எஃப். கென்னடியால் வகுக்கப்பட்ட முன்னுதாரணத்தை மேற்கோள் காட்டி, நேட்டோவால் விநியோகிக்கப்பட்ட ஏவுகணைகளைக் கொண்டு உக்ரேன் ரஷ்ய பிராந்தியத்தின் மீது நடத்தும் தாக்குதல்கள், நேட்டோ நாடுகள் மீது ‘ஒரு முழு பதிலடி விடையிறுப்பு அவசியப்படும்’ என்று கென்னடியின் எச்சரிக்கையை மறுமொழியாக புட்டின் அறிவித்தால் என்ன செய்வது?
பைடெனும் அவரது நேட்டோ சகாக்களும் “உக்ரேனில் வெற்றி” பெறுவதற்கான அவர்களின் பின்தொடர்தல் என்பது அணு ஆயுதப் போர் அபாயத்தை அர்த்தப்படுத்துகிறது என்பதையும், ரஷ்யாவுடனான மோதல் அணுவாயுதப் போராக மாறினால் அவர்களின் நாடுகளுக்கும் உலகிற்கும் என்ன நடக்கும் என்பதை தேவையான விவரங்களுடன் விவரிக்கவும் இதுவே சரியான நேரம் ஆகும்.
இந்த எச்சரிக்கையில் மிகைப்படுத்தலின் எந்த அறிகுறியும் இல்லை, இது வெறும் மூன்றே நாட்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
உலகெங்கிலுமான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு சாத்தியமானளவுக்கு பலமான முறையீடு செய்யப்பட வேண்டும்: அதாவது, இந்த தீவிரப்பாட்டைத் தடுக்க முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு எதிராக தொழிலாள வர்க்கம் தலையீடு செய்யவில்லை என்றால், ஏதேனும் ஒரு மோதல் இறுதியில் அணு ஆயுதப் போராக தீவிரமாக விரிவடையும்.
பெருந்திரளான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் ஒரு பேரழிவுகரமான உலகளாவிய போர் அபாயத்தின் அவசரத்தன்மை குறித்து முழுமையாக அறிந்திருக்கவில்லை என்பதே மிகப் பெரிய அபாயமாகும்.
சர்வதேச தொழிலாள வர்க்கத்தில் ஒரு பாரிய சோசலிச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில், கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வேலைநிறுத்தங்களின் ஒரு சர்வதேச இயக்கத்தின் மூலமாக அவர்கள் விழிப்பூட்டப்பட்டு அணிதிரட்டப்பட வேண்டும்.
மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்