ரஷ்யா – உக்ரேன் போரில் இராணுவப் படையில் இணைந்துகொண்ட 17 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) ஆள்க்கடத்தல், கடத்தல் மற்றும் கடல்சார் குற்ற விசாரணைப் பிரிவு வெளிப்படுத்தியுள்ளது.
இதேவேளை, சனிக்கிழமை (11) ரஷ்யாவுக்குச் சென்ற மேலும் இரு ஓய்வுபெற்ற இராணுவத்தினர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 29ஆம் திகதிக்கு பின்னர் அவர்களிடம் இருந்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
பதவிய பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரியான அசங்க சந்தன, ரஷ்யா-உக்ரைன் போரில் பங்கேற்பதற்காக பிப்ரவரி 12 அன்று ரஷ்யாவுக்கு புறப்பட்டார். மார்ச் 29 அன்று அவரது குடும்பத்தினருடன் அவர் கடைசியாக தொடர்பு கொண்டார், அதன்பிறகு எந்த தகவலும் வரவில்லை.
இதேபோல், ஓய்வுபெற்ற அதிகாரியான மதவாச்சியை சேர்ந்த பிரதீப் சந்தனவும் பிப்ரவரி 12ஆம் திகதி ரஷ்யாவுக்குப் புறப்பட்டுச் சென்றார். மார்ச் 29ஆம் திகதி அவரது குடும்பத்தினருடன் அவர் கடைசியாகத் தொடர்பு கொண்டார் எனவும் அதன்பிறகு எந்த அறிவிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.