இலங்கை அரசாங்கம் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் இடையில் சமநிலையைப் பேணுவதற்குக் கடினமாக முயற்சிக்கிறது, என்று இந்தியாவின் மனோகர் பரிக்கர் பாதுகாப்பு கற்கைகள் மற்றும் ஆய்வு நிறுவனத்தின் ஆய்வாளர் ஸ்மிருதி பட்நாயக் அண்மையில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மத்தள விமான நிலையத்தை அடுத்த 30ஆண்டுகளுக்கு நிர்வகிக்கும் பொறுப்பை, இந்திய – ரஷ்ய கூட்டு நிறுவனத்திடம் வழங்குவதற்கு இலங்கை அமைச்சரவை தீர்மானித்திருக்கின்ற நிலையில் தான், அவர் இந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார்.

அம்பாந்தோட்டை துறைமுகம் 99 வருடங்களுக்கு சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட பின்னர், இந்தியா அதனைச் சார்ந்த கரிசனைகளை வெளியிட்டு வந்தது.

அதற்குப் பின்னர், இந்த துறைமுகத்துக்கு அண்மையில், சீனாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான சினோபெக், 4.5 பில்லியன் டொலர் கள் செலவில், எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஒன்றை அமைப்பதற்கு, இலங்கை அரசாங்கம் அனுமதி அளித்திருந்தது.

எவ்வாறான எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமைக்கலாம் என்பது பற்றிய சாத்திய ஆய்வு அறிக்கையை சீன நிறுவனம் வரும் ஜூன் மாதம் சமர்ப்பிக்கவுள்ளது.

அதன் பின்னர், மிக குறுகிய காலத்தில் இந்த எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை சினோபெக் நிறுவும் என்று இலங்கை அரசாங்கம் கூறுகிறது.

இதற்குப் பின்னர் தான், மத்தள மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பு இந்திய மற்றும் ரஷ்ய நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த போது, அம்பாந்தோட்டை துறைமுகத்தை அடுத்து, சீனாவின் கடன் உதவியுடன் கட்டப்பட்டது தான் மத்தள விமான நிலையம்.இவையிரண்டும், வெள்ளை யானைத் திட்டங்கள் என்று அறியப்பட்டவை.

அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவுக்கு குத்தகைக்கு விடப்பட்ட பின்னர், தற்போது வரை, மத்தள விமான நிலையம் ‘வெள்ளை யானைத்’ திட்டமாகவே இருந்து வருகிறது.

அங்கு இப்போது எந்தவொரு விமான நிறுவனமும் விமான சேவைகளை நடத்துவதில்லை. ஆனால், ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மத்தள விமான நிலையத்தில் தான் வந்திறங்கியிருந்தார்.

மத்தள விமான நிலையத்துக்கு இப்போது பெரும்பாலும், ரஷ்யாவில் இருந்து வாடகை விமானங்கள் தான் வருகின்றன.

மத்தள விமான நிலையத்தை நல்லாட்சி அரசாங்கம் சிறிது காலம், நெல் சேமிப்புக் கிடங்காகவும் பயன்படுத்தியது நினைவிருக்கலாம். இதற்குத் தான் லாயக்கு என்பதற்காக அங்கு நெல் சேமிக்கப்படவில்லை.

மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் கால திட்டங்களை கொச்சைப்படுத்துவதற்கான ஒரு நகர்வுத் தான் அது.

கோட்டா அதிகாரத்துக்கு வந்த பின்னர் மத்தள விமான நிலையத்தை தூக்கி நிறுத்துவதற்கு முற்பட்டார், விமானப் பயணிகளிடம் அறவிடப்படும் 60 டொலர் கள் வரியில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டது. ஆனாலும் அந்த முயற்சிகள் எல்லாம் வீணாகின.

கடைசியில் பயணிகளின்றிக் காய்ந்து கொண்டிருந்த மத்தள விமான நிலையத்தை வேறு வழியின்றி இந்திய மற்றும் ரஷ்ய நிறுவனங்கள் கூட்டாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது.

இந்த விமான நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு, சீன நிறுவனம் உள்ளிட்ட மொதம் 6 நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன.

அவற்றில் இருந்து ரஷ்ய – இந்திய நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டதற்கு பூகோள அரசியலே காரணமாக இருந்தது.

ஏனென்றால், அம்பாந்தோட்டை துறைமுகத்தை அடுத்து அம்பாந்தோட்டையில் சீனா இன்னொரு பாரிய முதலீட்டைச் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் அனுமதி அளித்திருக்கிறது.

அம்பாந்தோட்டையில் பாரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நிறுவுவதற்கு சீனாவின் சினோபெக் நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் தான், அதனைச் சமப்படுத்தும் வகையில் மத்தள விமான நிலையம் இந்திய- ரஷ்ய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.

அம்பாந்தோட்டையில் சீனாவின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை திட்டம் எவ்வாறு முன்னெடுக்கப்படவுள்ளது என்பதில் தெளிவான முடிவுகள் எடுக்கப்படவில்லை. சாத்திய ஆய்வுக்குப்பின்னரே அது தீர்மானிக்கப்படும்.

நாளொன்றுக்கு ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பரல்கள் மசகு எண்ணெயை சுத்திகரிக்கும் திறன் கொண்ட ஒரு ஆலையை நிறுவுவதா அல்லது, நாளொன்றுக்கு ஒரு இலட்சம் பரல் மசகு எண்ணெயை சுத்திகரிக்கும் இரண்டு ஆலைகளை நிறுவுவதா என்பது சாத்திய ஆய்வு அறிக்கை வெளியான பின்னரே சினோபெக் தீர்மானிக்கவுள்ளது.

இங்கு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நிறுவ அரசாங்கம் இணங்கிய பின்னர், மேலதிக முதலீடுகளைச் செய்வதற்கும் சீனா விருப்பம் வெளியிட்டுள்ளதுடன், இதற்காக மேலதிக நிலங்களையும் கோரியுள்ளது.

இவ்வாறான நிலையில் தான் மத்தள விமான நிலையம் இந்திய- ரஷ்ய நிறுவனங்களால் பொறுப்பேற்கப்படவுள்ளது.

இந்த நிறுவனங்கள், மத்தள விமான நிலையத்தை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளப் போகின்றன- அதனை இலாபகரமானதாக முகாமைத்துவம் செய்யப் போகின்றன என்பது காலப்போக்கில் தான் தெரியவரும்.

ஆனால், இந்தியா இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும் என்றே தெரிகிறது.

குறித்த திட்டம் இலாபகரமானதாக இல்லாது போனாலும், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடம் என்பதால், அதில், காலூன்றியிருப்பதற்கு இந்தியா விரும்புகிறது.

அம்பாந்தோட்டை இன்றைக்கு இந்தளவுக்கு பூகோள அரசியல் மையமாக மாறியிருக்கிறது என்றால், சீனா அவற்றைக் கைப்பற்றியதால் என்று கூறுவதைவிட, இந்திய அவற்றைத் தவறவிட்டதால் என்று கூறுவதே பொருத்தம்.

2007இல், அம்பாந்தோட்டையில் துறைமுகத்தை அமைப்பதற்கு முதலில் இந்தியாவிடம் தான் உதவி கேட்டிருந்தார் மஹிந்த ராஜபக்ஷ.

ஆனால் அம்பாந்தோட்டையில் துறைமுகம் அமைப்பதால், பயனில்லை அது இலாபகரமான முதலீடு அல்ல என்று கூறி இந்தியா நழுவிக் கொண்டது.

சீனாவைப் போலவே, இது வெள்ளை யானைத் திட்டமாக இருந்தால் என்ன என்ற கோணத்தில் சிந்தித்து இந்தியா அதனை அமைத்துக் கொடுத்திருக்கலாம். அவ்வாறு செய்யவில்லை. அந்த வாய்ப்பை சீனா பயன்படுத்திக் கொண்டது.

அந்த துறைமுகம், அமைக்கப்பட்ட பின்னர் தான், இந்தியாவுக்கு அது தலைவலியாக மாறியது.

அம்பாந்தோட்டை துறைமுகம், இலாபகரமாக இயங்காத நிலையில், கடனை அடைக்க முடியாத நல்லாட்சி அரசாங்கம் அதனை நீண்டகால குத்தகைக்கு விட முயன்ற போதும், இந்தியா அதனை இரண்டாவது முறையாக தவறவிட்டது.

‘பழம் நழுவி பாலில் விழுந்தது’ போல, சீனாவுக்கே அது 99 வருட குத்தகைக்கு கிடைத்தது. அதுபோன்ற நிலை மீண்டும் வந்து விடக் கூடாது என்பதற்காகத் தான், மத்தள விமான நிலையத்தை இந்தியா விட்டுக் கொடுக்கவில்லை.

இதனால் இலாபம் இல்லாது போனாலும், சீனாவின் முதலீட்டு மையப்புள்ளியாக மாறியுள்ள அம்பாந்தோட்டையில் தனது பிரசன்னத்தை உறுதி செய்ய நினைக்கிறது இந்தியா.

இது ஒருவகையில் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போலத் தான்.

இதில் மாத்திரமல்ல, அம்பாந்தோட்டையில் சினோபெக் நிறுவனம், மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நிறுவும் விடயத்திலும் இந்தியா வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளவில்லை.

இந்தியப் பிரதமராக நரேந்திர மோடி பதவிக்கு வந்த பின்னர், 2015ஆம் ஆண்டு இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவர், தெற்காசியாவின் எண்ணெய் கேந்திரமாக திருகோணமலையை மாற்றப் போவதாக அறிவித்தார்.

திருகோணமலையில் சீனக்குடா எண்ணெய் குதங்கள் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த போதும், கடந்த 9ஆண்டுகளில் திருகோணமலையை, தெற்காசியாவின் எண்ணெய் கேந்திரமாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை.

திருகோணமலையில் இந்தியா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை அமைத்திருந்தால், இலங்கையின் எரிபொருள் சந்தையை கணிசமாக கைப்பற்றியிருக்க முடியும்.

ஆனால் இப்போது சீனா அதனைச் செய்யப் போகிறது. அத்துடன், அம்பாந்தோட்டையில் சுத்திகரிக்கப்படும் எண்ணெயை பிற நாடுகளுக்கும் விற்கப் போகிறது.

இது ஒருபக்கம் சீனாவின் முதலீட்டை வலுப்படுத்தும். இன்னொரு பக்கம், அம்பாந்தோட்டை துறைமுகத்தின் செல்வாக்கை உயர்த்தும்.

ஆக சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் அரசாங்கம் ஒரு சமநிலையை பேண முயன்றாலும், முதலீட்டு அடிப்படையில், சீனா முன்னுக்கு இருப்பதாகவே தெரிகிறது.

– ஹரிகரன்

Share.
Leave A Reply