தமிழ் மக்களின் சுயாட்சி அல்லது அதிகாரப் பகிர்வுக்கான கோரிக்கை ஏற்கப்படாமை தான் இலங்கையில் ஏற்பட்ட இனமோதலுக்கு அடிப்படைக் காரணமாக அமைந்தது என்பதை தலைவர்கள் உணர்ந்து ஐக்கிய இலங்கைக்குள் தீர்வினை வழங்க வேண்டும்.

அந்த வகையில் அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நான் உட்பட ஒரு பரந்த சர்வதேச சமூகம் ஆதரவளிக்கிறது என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச ஆலோசகரும், முன்னாள் சமாதானத்தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த அவர் வடக்கு,கிழக்கு பகுதிகளுக்குச் சென்று பல்வேறு சந்திப்புக்களை நடத்தியிருந்த நிலையில் வீரகேசரிக்கு பிரத்தியேகமாக வழங்கிய செவ்வியின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார். அவருடைய செவ்வியின் முழுவடிவம் வருமாறு,

கேள்வி: இலங்கைக்கான கடந்தவார விஜயத்தின் போது நீங்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்ததுடன் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு விஜயம் செய்திருக்கின்றீர்கள்? உங்களது விஜயத்துக்கு ஏதாவது சிறப்புக் காரணங்கள் காணப்படுகின்றதா? பயணம் எப்படியிருந்தது?

பதில்: வடக்கு, கிழக்கு மாகாணங்களின் ஆளுநர்கள் தமது மாகாணங்களில் பசுமை மாற்றத்தை எவ்வாறு துரிதப்படுத்துவது என்பது பற்றிக் கலந்துரையாடுவதற்காக அவர்கள் என்னை அழைத்திருந்தார்கள். வடக்கு,கிழக்கு இலங்கையின் மிக அழகான பகுதிகளாகும். அதுவொரு நல்ல பயணமாக எனக்கு அமைந்தது.

கேள்வி: வடக்கு கிழக்கில் உள்ள ஆளுநர்கள், அரசியல் பிரமுகர்கள், சிவில் அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டவர்களை நீங்கள் சந்தித்திருந்த நிலையில் அவர்களின் பிரதிபலிப்புக்களை எப்படி பார்க்கின்றீர்கள்?

பதில்: ஆளுநர் சார்ள்ஸ் மற்றும் தொண்டமான் இருவரும் பசுமைத்துறையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், பசுமை சுற்றுலாவை ஊக்குவிக்கவும், பசுமை வளர்ச்சியை ஒட்டுமொத்த மேம்பாட்டுக்கான பயணத்துக்காக பயன்படுத்தவும் ஆர்வமாக உள்ளனர்.

கிழக்கு மாகாணம் முழுவதிலும் உள்ள மாவட்டச் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளை திருகோணமலையில் சந்தித்தேன். அவர்களுடனான கலந்துரையாடல்களில் முன்னிலைப்படுத்தப்பட்ட விடயங்களில் சூரிய மற்றும் காற்றாலை மின்சாரத் திட்டங்களை முன்னெடுத்தல், சதுப்புநிலங்களை மீட்டெடுப்பதற்கும் காடுகளைப் பாதுகாப்பதற்கும் பூச்சிய கார்பன் திட்டத்தில் பங்கேற்றுள்ள உலகளாவிய தரப்புக்களின் ஆதரவைப் பெறுவதற்கான மிகப்பெரிய சாத்தியக்கூறுகளை பகிர்ந்து கொண்டேன்.

சுற்றுச் சூழலுக்கு உகந்தவாறான விவசாய நடவடிக்கைகள், சிறந்த கழிவகற்றல் முகாமைத்துவம், பிளாஸ்டிக் பயன்பாட்டை முறியடித்தல் உள்ளிட்ட விடயங்கள் சம்பந்தமாக இணக்கப்பாடுகளையும் எட்ட முடிந்தது.

கேள்வி: வடக்கு, கிழக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தபோது நீங்கள் அடிக்கடி விஜயம் செய்த பகுதிகளின் நிலைமைகளை எவ்வாறு உணர்ந்தீர்கள்? குறிப்பாக கிளிநொச்சி மாவட்டத்திற்குச் சென்றபோது உங்களுக்கு மனோநிலை எப்படியிருந்தது? கடந்த காலத்தினை மீட்டிப்பார்த்தீர்களா?

பதில்: இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுலைப்புலிகளுக்கும் இடையிலான சமாதான ஒப்பந்த காலத்திலும் பின்னர் ஏற்பட்ட போர்க்காலத்திலும் விடுதலைப் புலிகளின் தலைமையுடன் பல மணிநேரம் பேச்சு வார்த்தை நடத்திய கிளிநொச்சி மாவட்டத்துக்கு இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர் சென்றமையானது எனக்கு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.

யுத்த காலத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த எனது நண்பர்கள், தமிழர்கள், சிங்களவர்கள் உள்ளிட்ட அனைவரையும் நினைத்தபோது மிகவும் வருத்தமாக இருந்தது. எனினும் அந்த மாவட்டத்தில் மீளுருப்பெற்றிருக்கின்ற கட்டடங்களைப் பார்க்கின்றபோது ஒருவிதமான ஆறுதலாக இருந்தது.

கேள்வி: வடக்கின் அமைதி மற்றும் பாதுகாப்பு பற்றிய நீங்கள் உங்களது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட கருத்துக்களுக்கு கடுமையான விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளமையை அவதானித்து இருப்பீர்கள்.

குறிப்பாக முப்படைகளின் வலுவான ஆக்கிரமிப்புகளும் தொல்லியல் மற்றும் பௌத்தக் கட்டமைப்புக்களின் அபகரிப்புக்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?

பதில்: வடக்கு அமைதியாக உள்ளது. தொல்லியல் தொடர்பான சர்ச்சைகள் உள்ளன. இந்து மற்றும் பௌத்த வரலாறு பற்றி நான் முழுமையாக அறிந்திருக்கிறேன்.

ஆகவே வடக்கில் காணப்படுகின்ற சர்ச்சைகள் வரலாற்று உண்மைகளின் புரிதலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட சமூகங்களுக்கு இடையே அமைதியான உரையாடலின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும்.

கேள்வி: தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணமாகவுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வை தென்னிலங்கைத் தலைவர்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை உங்களுக்கு உள்ளதா? அந்தத் தீர்வு எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

பதில்: 13ஆவது திருத்தச் சட்டத்தின் அடிப்படையில் தீர்வு காண விரும்புவதாக ஜனாதிபதி தெளிவாகத் தெரிவித்துள்ளார். அதற்கு தமிழ் சமூகம், இந்தியா மற்றும் அனைத்து வெளிநாட்டு பங்காளர்களிடமிருந்தும் ஆதரவு வழங்க வேண்டும். அதுவே சரியான வழியாகும் என்று நான் நம்புகிறேன்.

கேள்வி: இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், வடக்கு,கிழக்கில் ஒரு தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்துவதற்கு முயற்சிக்கும் தமிழ் அரசியல் சிவில் சமூகத்தினரின் நடவடிக்கைகளை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: நானொரு வெளிநாட்டு பிரஜை என்ற முறையில் அந்த விடயம் சம்பந்தமாக கட்சிகள் அல்லது சமூகங்களின் பிரசார உத்திகள் குறித்து கருத்து தெரிவிப்பது சரியல்ல. ஆனால், இலங்கையில் வாழும் தமிழ் மக்கள் தமக்குள் ஒற்றுமையாக இருக்கும் காலங்களில் எப்போதும் பலமாகவே இருப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்.

கேள்வி: ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அநுரகுமார ஆகியோர் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அவர்களில் யாரும் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் பகிரங்கமாக உத்தரவாதங்களை வெளிப்படுத்துவதற்குத் தயாரில்லாத நிலை பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: தமிழ் மக்களின் சுயாட்சி அல்லது அதிகாரப் பகிர்வுக்கான கோரிக்கையை நிறைவேற்றாமை தான் இலங்கையில் ஏற்பட்ட மோதலுக்கு அடிப்படைக் காரணம்.

ஆகவே அதனை தலைவர்கள் உணர்ந்து ஐக்கிய இலங்கைக்குள் தீர்வினை வழங்க வேண்டும். அந்த வகையில் அரசியலமைப்பில் உள்ள 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நான் உட்பட ஒரு பரந்த சர்வதேச சமூகம் ஆதரவளிக்கிறது என்ற யதார்த்தத்தினை புரிந்து கொள்ள வேண்டும்.

கேள்வி: இந்தியா, சீனா மற்றும் அமெரிக்கா ஆகியவற்றின் பூகோள அரசியல் போட்டிக்கான மைய புள்ளியாக இலங்கை காணப்படுகிறது.

இந்நிலைமையை நாடு எவ்வாறு கையாள வேண்டும் என்று நீங்கள் கருதுகின்றீர்கள் என்பதோடு இந்த சிக்கலான நிலைமையை தமிழ்த் தலைவர்கள் எவ்வாறு அணுக வேண்டும் என்பதற்கு எவ்விதமான ஆலோசனையை அளிப்பீர்கள்?

பதில்: இந்த விடயத்தில் யாரேனும் என்னிடத்தில் ஆலோசனையைக் கேட்டால் இலங்கையின் வெளியுறவுக் கொள்கையை மீளமைக்க வேண்டும் என்பதே எனது ஆலோசனையாக அமையும். இலங்கை தனது சொந்த நலன்களில், மூலோபாய ரீதியாக, அரசியல் ரீதியாக அபிவிருத்தி ரீதியாக, சுற்றுச்சூழல் மேம்பாடு ரீதியாக கவனம் செலுத்த வேண்டும்.

பூகோள சக்திகள் இலங்கையை ஒருதரப்புக்கான ஆதரவுத் தளமாக்குவதற்கு முயற்சிக்கக் கூடாது. அதாவது, இலங்கையின் வரைபடத்தையோ அல்லது வரலாறு மற்றும் கலாசாரத்தையோ பார்க்கின்றபோது உலகில் உள்ள வேறெந்த நாடுகளை விடவும் இந்தியா எப்போதும் இலங்கையுடன் நெருக்கமாக இருக்கும் என்பது எமக்கு வெளிப்படையாகத் தெரியும் விடயமாகும்.

Share.
Leave A Reply