-இதுவரை 300,000 பேர் வெளியேற்றம்: காசாவில் தாக்குதல் உக்கிரம்
ரபா மீதான வெளியேற்ற உத்தரவை விரிவுபடுத்தி இருக்கும் இஸ்ரேல், காசாவில் நேற்றும் (12) கடும் தாக்குதல்களை நடத்தியது. சனநெரிசல் மிக்க தெற்கு நகரான ரபா மீதான முழு அளவிலான படையெடுப்பு வரலாற்று அழிவுகளை ஏற்படுத்தும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.
மத்திய நகரான டெயிர் அல் பலாஹ்வில் நேற்று இரு மருத்துவர்கள் கொல்லப்பட்டதாக காசாவின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் கூறி இருக்கும் அதேநேரம் காசா நகருக்கு அருகில் உக்கிர மோதல் இடம்பெற்றதாகவும் இஸ்ரேலிய ஹெலிகொப்டர்கள் கடும் சூடு நடத்தியதாகவும் ஏ.எப்.பி. செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
எகிப்து எல்லையை ஒட்டிய ரபா நகரில் உள்ள வீடு ஒன்றை இலக்கு வைத்து இஸ்ரேல் நேற்று நடத்திய வான் தாக்குதலில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது.
இதில் கொல்லப்பட்ட பலரும் சிறுவர்கள் என்பதோடு மேலும் பலம் காயமடைந்துள்ளனர். வடமேற்கு ரபாவின் ஹஷாஷ் குடும்பத்திற்கு சொந்தமான வீட்டின் மீதே இஸ்ரேல் குண்டு போட்டுள்ளது.
இதேவேளை வடக்கு காசாவின் ஜபலியா அகதி முகாம் மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல்களை நடத்தியதாக அங்கிருந்து வரும் செய்திகள் குறிப்பிடுகின்றன.
இஸ்ரேலிய போர் விமானங்கள் ஜபலியாவின் கிழக்கு பகுதியில் கார்ப்பட் – குண்டு தாக்குதல்களை நடத்தி பலரையும் கொன்றதாக உள்ளூர் தரப்பை மேற்கோள்காட்டி வபா செய்தி வெளியிட்டுள்ளது.
ஒரு பகுதியில் இலக்குகளைத் துல்லியமாகக் குறிவைத்து போர் விமானங்கள் மூலம் குண்டு வீசாமல், அப்பகுதி முழுவதையும் குண்டு வீசி அழிப்பது கார்ப்பட் – குண்டுவீச்சு என அழைக்கப்படுகிறது. இதில் கொல்லப்பட்டோர் எண்ணிக்கை உடன் உறுதி செய்ய முடியவில்லை என்று அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
மத்திய ஜபலியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மருத்துவ வசதி ஒன்றுக்கு அருகில் அம்புலன்ஸ்கள் மீதும் இஸ்ரேலிய ஆளில்லா விமானங்கள் தாக்குதல் நடத்தியதாக வபா கூறியது.
ஜபலியாவில் ஹமாஸ் தோற்கடிக்கப்பட்டு விட்டதாக இஸ்ரேல் முன்னதாக கூறிய நிலையிலேயே அங்கு மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சர்தேச எதிர்ப்பையும் மீறி இஸ்ரேலிய துருப்புகள் ரபாவின் கிழக்கு பகுதிக்கு நுழைந்ததோடு அங்குள்ள எகிப்துடனான உதவிகள் வரும் எல்லைக் கடவையையும் மூடியது.
கடந்த வாரம் கிழக்கு ரபாவில் இருந்து மக்களை வெளியேறுவதற்கு இஸ்ரேல் இராணுவம் உத்தரவிட்ட நிலையில் அங்கிருந்து இதுவரை 300,000 பேர் வரை வெளியேறிய நிலையில் அந்த வெளியேற்ற உத்தரவை மேலும் பல இடங்களுக்கு இஸ்ரேல் விரிவுபடுத்தியுள்ளது.
மக்கள் நீர் தொட்டிகள், படுக்கைகள் மற்றும் மற்ற உடைமைகளை வாகனங்களில் ஏற்றி மீண்டும் ஒரு முறை வெளியேற்றத்திற்கு தயாராகி வருகின்றனர்.
“எமக்கு எங்கே போவது என்று தெரியவில்லை” என்று ரபாவில் இருந்து வெளியேறத் தயாராகும் பரீத் அபூ ஈதா தெரிவித்தார். அவர் ஏற்கனவே காசா நகரில் இருந்தே ரபாவுக்கு இடம்பெயர்ந்து வந்தவராவார்.
“காசாவில் பாதுகாப்பான அல்லது மக்கள் நிரம்பாத இடம் ஒன்று இல்லை. நாம் செல்வதற்கு எந்த இடமும் இல்லை” என்றும் அவர் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.
ரபாவின் வடமேற்குக் கரையில் உள்ள அல் மவாசியின் ‘மனிதாபிமான வலயத்திற்கு’ செல்லும்படியே மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ரபாவின் மத்திய மற்றும் மேற்கு ஆகிய புதிய பகுதிகளுக்கு இஸ்ரேல் தனது ஊடுருவலை விரிவுபடுத்தி இருப்பதாக ஹமாஸ் குற்றம்சாட்டியுள்ள அதேநேரம் கிழக்கு ரபாவில் பல டஜன் பயங்கரவாதிகளை ஒழித்ததாக இஸ்ரேல் இராணுவ பேச்சாளர் டானியல் ஹகரி தெரிவித்துள்ளார்.
ரபாவில் முழு அளவிலான படை நடவடிக்கையை இஸ்ரேல் ஆரம்பித்தால் ‘வரலாற்று மனிதாபிமான நெருக்கடி ஒன்றை’ காசா எதிர்கொள்ளும் அச்சுறுத்தல் இருப்பதாக ஐ.நா தலைவர் அன்டோனியோ குட்டரஸ் எச்சரித்துள்ளார்.
காசாவில் இஸ்ரேலின் போருக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் சுவீடனில் நடைபெற்ற யூரோவிஷன் பாடல் போட்டிக்கும் பரவியது. அந்த நிகழ்வு இடம்பெறும் அரங்குக்கு வெளியில் பெரும் எண்ணிக்கையான ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டனர்.
டெல் அவிவில் உள்ள ரசிகர்களும் பெரிய திரையில் அந்த நிகழ்ச்சியை பார்த்தபோதும், அந்தப் போட்டியில் பங்கேற்ற இஸ்ரேலிய போட்டியாளர் ஈடன் கொலன் வெற்றிபெறவில்லை. ‘ஈடன் சிறப்பாக இருந்தார்… ஆனால் அவர்கள் எம்மை வெறுக்கிறார்கள்’ என்று 20 வயதான இஸ்ரேலிய ரசிகர் ஒருவர் குறிப்பிட்டார்.
வலுக்கும் சர்வதேச எதிர்ப்பு
ரபாவில் இஸ்ரேலிய படை நடவடிக்கை தொடர்பில் சர்வதேச அளவில் சீற்றம் அதிகரித்துள்ளது.
ரபா பொதுமக்கள் பாதுகாப்பற்ற பகுதிக்குச் செல்ல உத்தரவிடப்பட்டிருப்பதாக குறிப்பிட்ட ஐரோப்பிய ஒன்றிய தலைவர் சார்ல்ஸ் மிக்கல், அது ஏற்க முடியாதது என்று சமூக ஊடகத்தில் கண்டித்தார்.
ரபாவில் உள்ள தள மருத்துவமனை ஒன்றில் இருந்து 22 நோயாளிகளை அழைத்துச் செல்லும் பணியை ஆரம்பித்திருக்கும் எல்லைகள் அற்ற மருத்துவர் அமைப்பு, அந்த நகரில் இஸ்ரேலின் படை நடவடிக்கை உயிர்காப்பு மருத்துவ உதவிகளை வழங்குவதை சாத்தியமில்லாததாக்கும் என்று எச்சரித்தது.
இஸ்ரேலின் ஏற்க முடியாத விரிவாக்கத்தை காரணம் காட்டி ரபா எல்லைக்கடவையில் இருந்து உதவிகள் செல்வதில் இஸ்ரேலுடன் ஒத்துழைப்பதற்கு எகிப்து மறுத்துள்ளதாக எகிப்தின் அல்கெஹரா செய்மதி தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
காசா பகுதியில் நிலைமை மோசமடைவதற்கு இஸ்ரேல் பொறுப்பேற்க வேண்டும் என்று எகிப்து மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ரபா எல்லைக் கடவையை கைப்பற்றிய இஸ்ரேல் அதனை மூடியதோடு உதவிகள் செல்லும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள மற்றொரு எல்லைக் கடவையான கெரெம் ஷலோமையும் கட்டுப்படுத்துகிறது. இதனால் முற்றுகையில் உள்ள காசாவுக்கு வெளி உலகில் இருந்து உதவிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்திய தாக்குதலை அடுத்தே காசாவில் போர் வெடித்ததோடு அப்போது கடத்தப்பட்ட சுமார் 250 பணயக்கைதிகளில் தொடர்ந்தும் சுமார் 128 பணயக்கைதிகள் காசாவில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேல் கணித்துள்ளது.
கிழக்கு ரபா சுற்றிவளைப்பு
பணயக்கைதிகளை விடுவிப்பது மற்றும் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கான மத்தியஸ்தர்களின் முயற்சிகள் ஸ்தம்பித்திருக்கும் சூழலில், இஸ்ரேல் வான் தாக்குதலினால் காயத்திற்கு உள்ளான பணயக்கைதி ஒருவர் கொல்லப்பட்டதாக ஹமாஸ் ஆயுதப் பிரிவு தெரிவித்துள்ளது.
பிரிட்டிஷ் – இஸ்ரேலிய ஆடவரான நவாட் பொபல்வெல் ஒரு மாதத்திற்கு முன் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த நிலையில் உயிரிழந்ததாக இசதீன் அல் கஸ்ஸாம் படை குறிப்பிட்டுள்ளது.
எதிரிகள் காசா பகுதியில் உள்ள மருத்துவமனைகளை அழித்திருப்பதால் அவருக்கு முறையான சிகிச்சை அளிக்க முடியாமல்போனது என்றும் அந்தப் படை கூறியது.
இது தொடர்பில் இஸ்ரேல் உடன் எந்த பதிலையும் அளிக்கவில்லை. பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கு இஸ்ரேல் அரசுக்கு அழுத்தம் கொடுத்து இஸ்ரேலில் தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களைப் பயன்படுத்துவதில் இஸ்ரேல் சர்வதேச சட்டத்தின் விதிமுறைகளை மீறியதாக மதிப்பிடுவது நியாயமானது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் கடந்த வெள்ளிக்கிழமை கூறியது, ஆனால் ஆயுத ஏற்றுமதியைத் தடுக்க போதுமான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்றும் அது சுட்டிக்காட்டியது.
காசா மீதான படை நடவடிக்கையை இஸ்ரேல் முன்னெடுத்தால் குறிப்பிட்ட குண்டுகள் மற்றும் பீரங்கி செல்களை இஸ்ரேலுக்கு வழங்குவதை நிறுத்தி வைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்து இரண்டு நாட்களிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் ரபா மீது படையெடுக்க தயாராகும் நிலையில் பைடன் நிர்வாகம் ஏற்கனவே இஸ்ரேலுக்கான 3,500 குண்டுகளை வழங்குவதை நிறுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானவர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபா மீது படை நடவடிக்கையை முன்னெடுப்பதில் உறுதியாக இருக்கும் இஸ்ரேல் போர் வெற்றிக்கு ரபாவில் உள்ள ஹமாஸ் படைப் பிரிவுகளை ஒழிப்பது அவசியம் என்று கூறுகிறது.
இந்நிலையில் ரபாவின் கிழக்கு மற்றும் வடக்கு பகுதிகளை பிரிக்கும் பிரதான வீதியை இஸ்ரேலிய டாங்கிகள் கடந்த வெள்ளிக்கிழமை கைப்பற்றியது. இதன்மூலம் அந்த நகரின் கிழக்கு பகுதியை சுற்றிவளைப்பதற்கு இஸ்ரேலால் முடிந்துள்ளது.
காசாவில் கடந்த எட்டு மாதங்களாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 35 ஆயிரத்தை தாண்டி இருப்பதாக பலஸ்தீன சுகாதார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தும் தாக்குதல்களில் தகர்க்கப்பட்ட கட்டடங்களின் இடிபாடுகளில் சுமார் 10,000 உடல்கள் சிக்கி இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. காசா சிவில் பாதுகாப்பு நிறுவனம் சி.என்.என். தொலைக்காட்சிக்கு இதனைத் தெரிவித்துள்ளது.
‘பல மாதங்களாக நாம் சாதாரண உபகரணங்களுடன் பணியாற்றி வருகிறோம், அது எமது நேரம் மற்றும் முயற்சிகளை விரயம் செய்கிறது’ என்று அந்த நிறுவனத்தின் பேச்சாளர் மஹ்மூத் பசல் தெரிவித்தார். சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் 70 தொடக்கம் 80 வீதமான திறனை இஸ்ரேல் அழித்து விட்டதாகவும் அவர் கூறினார்.
‘ஐக்கிய நாடுகள் மற்றும் மனிதாபிமான குழுக்கள் உடன் தலையிட்டு தேவையான மீட்பு உபகரணங்கள் வருவதை அனுமதிப்பதற்கு நாம் கோருகிறோம்.
எனவே எமக்கு தொடர்ந்து பணியாற்றவும் இடிபாடுகளின் கீழ் காணமால்போயிருப்பவரை மீட்பதற்கும் சிவில் பாதுகாப்பு வாகனங்கள் இயங்குவதற்கு தேவையான எரிபொருளை வழங்குவதற்கு எம்மால் முடியுமாக இருக்கும்’ என்றும் பசல் தெரிவித்தார்.