உலகின் மிகப்பழமையான மரங்களில் ஒன்றான பாபாப் மரங்களின் தோற்றம் பற்றிய மர்மத்தை விஞ்ஞானிகள் தீர்த்து வைத்துள்ளனர்.

மரபணு ஆய்வுகளின்படி, 2.1 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவின் தென்கிழக்கே இருக்கும் மடகாஸ்கர் தீவில் இந்த மரங்கள் தோன்றின.

பின்னர், அவற்றின் விதைகள் கடல் நீரோட்டத்தில் அடித்துச்செல்லப்பட்டு ஆஸ்திரேலியாவிற்கும், ஆப்பிரிக்காவின் பிரதான நிலப்பகுதிக்கும் கொண்டு செல்லப்பட்டு, தனித்தனி இனங்களாகப் பரிணமித்தன.

ஆராய்ச்சியாளர்கள் இந்த மரங்களைப் பாதுகாக்க இன்னும் அதிகமான முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கின்றனர்.

நாம் முன்பு நினைத்ததை விட இம்மரங்கள் அழிவின் விளிம்பில் இருக்கலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
விளம்பரம்

பாபாப் மரங்கள் அவற்றின் விசித்திரமான வடிவம் காரணமாகவும் அவற்றின் நீண்ட ஆயுள் காரணமாகவும் ‘உயிர் மரம்’ (tree of life) அல்லது ‘தலைகீழ் மரம்’ (upside down tree) என்று அழைக்கப்படுகின்றன.

பருவநிலை மாற்றம் மற்றும் பரவலான காடழிப்பு நடவடிக்கைகள் காரணமாக இவை இப்போது அழிந்து வருகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

‘உயிர்களுக்கு ஆதரவாக இருக்கும் மரங்கள் ஆபத்தில் உள்ளன’

பிரிட்டனில் உள்ள ‘ராயல் தாவரவியல் பூங்கா’வைச் சேர்ந்த முனைவர் இலியா லீச், லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அவரது கணவரும் பேராசிரியருமான ஆண்ட்ரூ லீச்சுடன் இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டார்.

“பல்வேறு விலங்குகள், தாவரங்கள், மற்றும் மனிதர்களை ஆதரிக்கும் முக்கியமான உயிரினமான பாபாப் மரங்களின் தோற்றத்தை எங்களால் கண்டுபிடிக்க முடிந்தது,” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

“மேலும் இந்த ஆய்வின் தரவுகள், பாபாப் மரங்களைப் பற்றிய முக்கியமான பல புதிய புரிதல்களை எங்களுக்கு வழங்கியுள்ளது. இது அவைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்க நமக்கு உதவும்,” என்கிறார் அவர்.

இந்த ஆராய்ச்சி தம்பதிகள் பாபாப் மரங்களின் எட்டு இனங்களை ஆய்வு செய்தனர். அவற்றில் ஆறு இனங்கள் மடகாஸ்கரில் காணப்படுகின்றன, ஒன்று ஆப்பிரிக்கா முழுவதும் பரவலாக உள்ளது, மற்றொன்று வடமேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ளது.

மடகாஸ்கரில் உள்ள பாபாப் மரங்களில் மிகப் பெரியதும் மிகவும் பிரபலமானதுமான ‘ராட்சத பாபாப் மரம்’ (giant baobab) உட்பட, மடகாஸ்கரைச் சேர்ந்த அழிந்து வரும் இரண்டு பாபாப் இனங்களுக்கு உயர் பாதுகாப்பு நிலையை வழங்கவேண்டும் என்று அவர்கள் கோருகின்றனர்.


படக்குறிப்பு, பாபாப் மரங்களின் பழங்கள் ஒரு ‘சூப்பர் உணவாகக்’ கருதப்படுகின்றன

உணவு முதல் உடை வரை அனைத்தும் தரும் மரம்

பாபாப் மரங்கள் பூமியில் உள்ள மிகவும் குறிப்பிடத்தக்க மரங்களில் ஒன்றாகும். இவை, பரவியிருக்கும் உள்ளூர் நாகரிகங்கள் மற்றும் மரபுகளுடன் ஆழமாக பின்னிப் பிணைந்துள்ளன.

இந்த மரங்கள் மடகாஸ்கர் மொழியான ‘மலகாசி’ மொழியில் ‘காட்டின் தாய்’ என்றும், ‘தலைகீழ் மரம்’ மற்றும் ‘உயிர் மரம்’ என்றும் அழைக்கப்படுகின்றன.

இந்த மரங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழக்கூடியவை. பெரிய அளவில் வளர்ந்து, வறண்ட காலங்களில் உயிர்வாழ்வதற்காக அதிக அளவு தண்ணீரை அவற்றின் தண்டுகளில் சேமித்து வைக்கின்றன.

இவற்றின் பழங்கள் ஒரு ‘சூப்பர் உணவாகக்’ கருதப்படுகின்றன. அவற்றின் தண்டுகளில் இருந்து கயிறுகள் அல்லது ஆடைகளுக்குப் பயன்படுத்தப்படும் இழைகளை உருவாக்கப் பயன்படுகின்றன.

இந்த மரங்களின் வெள்ளைப் பூக்கள் அந்தி வேளையில் பூப்பவை. இந்தப் பூக்கள் மகரந்தச் சேர்க்கையாக வெளவால்களை ஈர்க்கின்றன. இந்த வௌவால்கள் இந்தப் பூக்களின் தேனை உண்பதற்காக அதிக தூரம் பறந்து வருகின்றன. மேலும் இந்த மரங்கள் பறவைகள் கூடு கட்டும் முக்கியமான இடங்களாகும்.

இந்த ஆய்வை, சீனாவின் வுஹான் தாவரவியல் பூங்கா, பிரிட்டனின் ராயல் தாவரவியல் பூங்கா, மடகாஸ்கரின் அண்டனானரிவோ பல்கலைக்கழகம், மற்றும் லண்டன் குயின் மேரி பல்கலைக்கழகம் ஆகிய அமைப்புகள் இணைந்து நடத்தின.

Share.
Leave A Reply