காசா கடற்கரையில் அமெரிக்கா அமைத்திருக்கும் தற்காலிக துறைமுகத்திற்கு முதலாவது உதவி கப்பல் வந்திருப்பதாக அமெரிக்க இராணுவம் குறிப்பிட்டுள்ளது.

இந்த உதவிக் கப்பல் கரையை நோக்கி நகர்ந்ததாக அமெரிக்க மத்திய கட்டளையகம் எக்ஸ் சமூகதளத்தில் உறுதி செய்துள்ளது.

‘இது முழுக்க முழுக்க மனிதாபிமானம் கொண்ட கடல் வழித்தடத்தின் வழியாக காசாவில் உள்ள பாலஸ்தீன குடிமக்களுக்கு கூடுதல் உதவிகளை வழங்குவதற்கான ஒரு பன்னாட்டு முயற்சியாகும்’ என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது. எனினும் எந்த அமெரிக்க துருப்பும் காசா கரைக்கு செல்லவில்லை என்றும் அது சுட்டிக்காட்டியது.

காசாவில் இஸ்ரேல் தொடர்ந்து இராணுவ நடவடிக்கையை முன்னெடுக்கும் நிலையில் அங்கு மனிதாபிமான உதவிகள் செல்வதற்கு வசதியாக இந்த மிதக்கும் தளத்தை அமெரிக்கா சில வாரங்களுக்கு முன் கட்ட ஆரம்பித்தது.

இந்நிலையில் நூற்றுக்கணக்கான தொன் உதவிகள் சைப்ரஸை சென்றிருப்பதாகவும் அவை சோதனைக்கு பின் கப்பலில் ஏற்றப்பட்டு இந்த தற்காலிக துறைமுகத்திற்கு அனுப்பப்படவிருப்பதாகவும் கடந்த புதனன்று செய்தி வெளியானது.

ஆனால், காசாவில் மனிதநேய நெருக்கடியைத் தீர்க்க நில எல்லைகளைத் திறப்பதே சிறந்த வழி என்று ஐக்கிய நாட்டுகள் அமைப்பு கூறி வருகிறது.

Share.
Leave A Reply