மூன்று தசாப்தகாலப்போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாகவும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று சனிக்கிழமை (18 ) கொழும்பில் நடைபெற்றது.

மூன்று தசாப்தகாலப்போர் மிகமோசமான மனிதப்பேரழிவுடன் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு இன்றறையதினத்துடன் (18) 15 வருடங்கள் பூர்த்தியடைந்திருக்கும் நிலையில், போரில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் வகையிலான நினைவேந்தல் நிகழ்வுகள் வட, கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளிலும் ஒழுங்குசெய்யப்பட்டிருந்ததுடன், பிரதான நிகழ்வு இறுதி யுத்தம் இடம்பெற்ற முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள நினைவேந்தல் முற்றத்தில் நடைபெற்றது.

அதேவேளை, கடந்த 2022 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகவேண்டும் எனவும், கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்பு ஏற்படுத்தப்படவேண்டும் எனவும் வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் எழுச்சியடைந்த போராட்டங்களின் தளமாக அமைந்திருந்த காலிமுகத்திடல் ‘கோட்டா கோ கம’வில் 2022 மே 18 ஆம் திகதியன்று எவ்வித இன, மதபேதமுமின்றி சகலரும் இணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை அனுட்டித்து போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தனர்.

அதன்படி, கடந்த ஆண்டைப்போன்றே இம்முறையும் கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமைகள் ஆர்வலர்களால் கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வு இன்று சனிக்கிழமை (18) காலை 9.30 மணிக்கு வெள்ளவத்தை புகையிரத நிலையத்துக்கு அண்மையிலுள்ள கடற்கரையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களான ஷ்ரீன் ஸரூர், சுவஸ்திகா அருலிங்கம், சந்தியா எக்னெலிகொட, ராஜ்குமார் ரஜீவ்காந்த், கௌதமன், ரத்னவேல், நுவன் போபகே உள்ளிட்ட பலரும், கத்தோலிக்க மதகுருமாரும், பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்.

கடந்த வருடம் கொழும்பில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் ‘சிங்கள ராவய’ அமைப்பினரால் குழப்பம் விளைவிக்கப்பட்டிருந்த நிலையில், இம்முறையும் பிற தரப்பினரால் இடையூறு ஏற்படுத்தப்படக்கூடும் என்ற சந்தேகம் நிலவியது. அதன்படி, நினைவேந்தல் நிகழ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த கடற்கரைப்பகுதிக்கு அண்மையில் காலையிலேயே பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.

அதனையடுத்து 9.30 மணியளவில் அங்கு கூடியிருந்த அனைவரும் ஈகைச்சுடரேற்றி, அதில் வெண்ணிற மலர்தூவி போரில் உயிர்நீத்தவர்களை நினைவுகூர்ந்தனர்.

இந்நினைவுகூரல் இடம்பெற்றுக்கொண்டிருந்த தருணத்தில், பிறிதொரு குழுவொன்று கொடிகளை ஏந்தி கூச்சலிட்டவாறு கடற்கரைப்பகுதிக்குள் உட்பிரவேசித்து நினைவேந்தல் நிகழ்வுக்கு இடையூறு விளைவிக்க முற்பட்ட வேளையில், அங்கு குவிக்கப்பட்டிருந்த பொலிஸாரால் அவர்கள் தடுத்துநிறுத்தப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து நிகழ்வை விரைவாக முடித்துக்கொண்டு அங்கிருந்து அனைவரையும் வெளியேறுமாறும், தாமதமேற்படின் அதன் பின்னர் நிகழக்கூடியவற்றுக்குத் தம்மால் பொறுப்புக்கூறமுடியாது எனவும் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணி ரத்னவேலிடம் எச்சரித்தார்.

இக்குழப்பங்களுக்கு மத்தியில் நினைவேந்தல் நிகழ்வில் உரையாற்றிய சிவில் சமூக செயற்பாட்டாளர்களான சந்தியா எக்னெலிகொட, மிலானி மற்றும் ராஜ்குமார் ரஜீவ்காந்த் ஆகியோர் போர் முடிவுக்குக்கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், போரில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரவேண்டியதன் தேவைப்பாட்டையும், நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிசெய்யப்படவேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டிப்பேசினர்.

அதேபோன்று வட, கிழக்கு மாகாணங்களில் முள்ளிவாய்க்கால் கஞ்சியை விநியோகிப்பதற்கும், உயிர்நீத்த உறவுகளை நினைவுகூருவதற்கும் தடைவிதிக்கப்பட்டு, இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டமை குறித்து தமது கண்டனத்தையும் வெளிப்படுத்தினர். அதன்பின்னர் அனைவரும் ஒன்றிணைந்து வெள்ளை மலர்களை கடலில் தூவி உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

அதேவேளை, நினைவேந்தல் நிகழ்வுக்கு சற்றுத் தாமதமாக வருகைதந்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் முன்னாள் ஆணையாளரும், சிவில் சமூக செயற்பாட்டாளருமான மிராக் ரஹீம் உள்ளிட்ட செயற்பாட்டாளர்கள் தண்டவாளத்துக்கு அண்மையிலேயே பொலிஸாரால் தடுத்துநிறுத்தப்பட்டனர்.

நிகழ்வில் குழப்பம் விளைவிப்பதற்கென குழுவொன்று வருகைதந்ததாகவும், எனவே தாமதமாக வந்த செயற்பாட்டாளர்களை தாம் அறிந்திருக்காததன் காரணமாக அவர்களையும் உள்ளே அனுமதிக்கவில்லை எனவும் பொலிஸார் விளக்கமளித்தனர். பின்னர் அனைவரையும் வெகுவிரைவாக அங்கிருந்து கலைந்துசெல்லுமாறு பொலிஸார்அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, அனைவரும் கலைந்து சென்றனர்.

Share.
Leave A Reply