“மின் வசதி இன்றி குடிசை வீட்டில் செல்போன் டார்ச் வெளிச்சத்தில் படித்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் திருவாரூர் மாவட்ட அளவில் 2ம் பிடித்த அரசுப்பள்ளி மாணவி துர்காதேவியின் வீட்டிற்கு இலவச மின்சார இணைப்பு வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 10ம் வகுப்பு தேர்வு எழுதிய பாலா மற்றும் சுதா தம்பதியின் மகளான துர்காதேவி 492 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதல் இடத்தையும் மாவட்ட அளவில் 2ம் இடமும் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இவரது தந்தை பாலா மெக்கானிக்காக வேலை செய்து வருகிறார்.மாணவி துர்கா தேவி கூறுகையில், “தனது குடிசை வீட்டில் இதுவரை மின்சார வசதி இல்லாததால் தொடர்ந்து சார்ஜர் விளக்கு மற்றும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் தான் படித்தேன்.

எனவே என்னுடைய வீட்டிற்கு மின்சார வசதி கொடுப்பதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த தகவல் அறிந்த திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் நேரில் சென்று மாணவியின் வீட்டை ஆய்வு செய்தனர்.

பின்னர் மாணவியின் வீட்டின் முன் 3 மின்கம்பங்களை நட்டு மின் இணைப்பு தந்துள்ளனர். இது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த மாணவி, என்னுடைய நோக்கம் மருத்துவராக வேண்டும் என்பதுதான், மின்வசதி இல்லாத போது படித்ததை விட மேலும் சிறப்பாக இனிமேல் படிப்பேன் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். “,

Share.
Leave A Reply