இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அதிபர் இப்ராஹிம் ரைசி இருந்த ஹெலிகாப்டர் ஞாயிற்றுக்கிழமை தரையில் மோதியதாக அரசு ஊடகம் கூறுகிறது.

அந்த ஹெலிகாப்டரில் இருந்த இரான் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் உள்பட மேலும் பலர் உயிரிழந்துவிட்டனர்.

முன்னதாக, இரான் அதிபர் ரைசி சென்ற ஹெலிகாப்டரைத் தேடுவதற்கு உதவ துருக்கி அனுப்பிய ஆளில்லா விமானம் ஒன்று முக்கிய தடயம் ஒன்றை கண்டுபிடித்தது.

அடுத்தபடியாக, அதிபர் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்ட வெளியான நிலையில், தற்போது இரான் அதிபர் ரைசி உயிரிழந்ததை அந்நாட்டின் அரசு ஊடகம் உறுதிப்படுத்தியுள்ளது.

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக இரான் அதிபர் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் ஆகியோர் தவிர்த்த மேலும் 3 பேர் யார் என்ற விவரம் தெரியவந்துள்ளது.

கடும் பனிமூட்டம் – மீட்புப் பணியில் சிரமம்

கடும் பனிமூட்டம் காரணமாக மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டதாக மீட்புக் குழுவினருடன் இருந்த ஃபார்ஸ் நியூஸ் ஊடகத்தின் செய்தியாளர் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, மலை மற்றும் மரங்கள் நிறைந்த அந்த பகுதியில் 5 மீட்டர் தொலைவு வரை மட்டுமே வெறும் கண்களால் பார்க்க முடிகிறது.
விபத்து நடந்தது எங்கே?

இரான் – அஜர்பைஜான் எல்லையில் கிஸ் கலாசி மற்றும் கோடாஃபரின் அணைகளைத் திறக்கும் நிகழ்ச்சியில் அஜர்பைஜான் அதிபர் இலாம் அலியேவுடன் இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பங்கேற்று விட்டு திரும்பும் வழியில் இந்த விபத்து நேரிட்டுள்ளது.

இரானின் வடகிழக்கு நகரான தப்ரிஸுக்குச் சென்று கொண்டிருந்த போது 50 கி.மீ. முன்னதாக வர்செகான் நகருக்கு அருகே அவர் பயணித்த ஹெலிகாப்டர் தரையில் மோதியுள்ளது.
இரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்து


படக்குறிப்பு, தயார் நிலையில் ஆம்புலன்ஸ்கள்

முக்கிய தடயத்தை கண்டுபிடித்த ட்ரோன்

இரான் அதிபர் ரைசி சென்ற ஹெலிகாப்டரைத் தேடுவதற்கு உதவ துருக்கி அனுப்பிய ஆளில்லா விமானம் முக்கிய தடயம் ஒன்றை கண்டுபிடித்தது.

வெப்பத்தின் மூலம் ஹெலிகாப்டரின் இருப்பிடத்தை கண்டறியும் துருக்கியின் பேரெக்டர் அகின்ஸி (Bayraktar Akinci) என்ற ஆளில்லா விமானம் வெப்பத்தின் மூலத்தை அடையாளம் கண்டுள்ளதாக அனடோலு செய்தி நிறுவனம் தெரிவித்தது.

அந்த செய்தி நிறுவனம் வெளியிட்ட நீண்ட தூர ட்ரோனின் காட்சிகள், இரவில் ஒரு நிலப்பரப்பின் கழுகு பார்வை காட்சியையும், ஒரு மலைப்பகுதியில் தோன்றும் ஒரு இருண்ட புள்ளியையும் காட்டியது.

இதுகுறித்த விவரம் இரானிய அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக அந்த செய்தி நிறுவனம் கூறியது.


ஹெலிகாப்டர் விழுந்த இடம் கண்டுபிடிப்பு

இரான் அதிபர் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக இரான் அரசு ஊடகம் தெரிவித்தது.

பல மணி நேர தேடுதலின் முடிவில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி விழுந்த இடத்தை தேடுதல் குழுக்கள் கண்டுபிடித்ததாக அந்த செய்தி கூறியது.

இரானின் ரெட் கிரசண்ட் சொசைட்டியின் தலைவர் பிர்ஹோசைன் கோலிவாண்ட், ‘நிலைமை நல்லவிதமாக தோன்றவில்லை என்று அரசு தொலைக்காட்சிக்கு தெரிவித்தார்.
ஹெலிகாப்டரின் சிதைவு புகைப்படம்

இரானிய அரசு செய்தி நிறுவனமான ஐஆர்என்ஏவின் சமூக ஊடக சேனல்களில் ட்ரோன் காட்சிகள் பகிரப்பட்டது. இது அதிபர் ரைசி பயணித்த ஹெலிகாப்டரின் சிதைவைக் காட்டுகிறது என்று நிறுவனம் கூறியது.

ரெட் கிரசன்ட் படமெடுத்த அந்த காட்சிகள், மலைப்பகுதியில் தீப்பிடித்து எரிந்தது போல் காட்சியளிக்கும் தரைப் பர

அதன் தொடர்ச்சியாக, வடமேற்கு இரானில் நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்தில் இரான் அதிபர் இப்ராஹிம் ரைசியும், வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் மற்றும் பலர் உயிரிழந்துவிட்டதாக அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.ப்புக்கு அருகே ஹெலிகாப்டரின் வால் பகுதி தெரிந்தது.


அதிபர், வெளியுறவு அமைச்சருடன் மேலும் 3 பேர் பெயர்கள் அறிவிப்பு

ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததாக இரான் அதிபர் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் ஆகியோர் தவிர்த்த மேலும் 3 பேர் யார் என்ற விவரம் தெரியவந்துள்ளது.

தப்ரிஸ் நகரில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகளை நடத்தும் இமாம் ஆயதுல்லா மொஹமது அலி அல்-இ ஹாஷெம், இரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநரான ஜெனரல் மாலிக் ரஹ்மதி மற்றும் அதிபரின் பாதுகாப்புப் பிரிவு கமாண்டர் சர்தார் செயத் மெஹ்தி மௌசாவி ஆகிய மூவரும் உயிரிழந்துவிட்டதாக இரான் அரசு செய்தி முகமையான ஐ.ஆர்.என்.ஏ. தெரிவித்துள்ளது.

ஹெலிகாப்டரில் இருந்த அதிபரின் மெய்க்காப்பாளர்கள், ஹெலிகாப்டர் ஊழியர்கள் ஆகியோரின் பெயர்கள் இன்னும் வெளியாகவில்லை.
ஹமாஸ் கூறியது என்ன?

அதிபர் இப்ராஹிம் ரைசி, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் மறைவுக்கு பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸ் இரங்கல் தெரிவித்துள்ளது.

ஹமாஸின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், “சகோதர இரானிய மக்களுடன் சோகம் மற்றும் வலியின் உணர்வுகளை குழு பகிர்ந்து கொள்கிறது.

1979 இஸ்லாமியப் புரட்சிக்குப் பின்னர் இஸ்ரேலின் உறுதியான எதிரியாக மாறிய இரான், மத்திய கிழக்கில் பல ஆண்டுகளாக தனது நிதியுதவி, ஆயுதங்கள் மற்றும் பயிற்சி மூலம் ஹமாஸ் உள்ளிட்ட ஆயுதக் குழுக்களை கட்டியெழுப்பியுள்ளது.

ஹமாஸின் அறிக்கை, “ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர்களை இரானின் மறுமலர்ச்சியில் நீண்ட பயணம் செய்த சிறந்த இரானிய தலைவர்களின் குழு” என்று விவரிக்கிறது.

பாலஸ்தீனப் பிரச்னைக்கு அவர்கள் காட்டிய உறுதிப்பாட்டுக்கு மரியாதை செலுத்துவதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

ஹெஸ்புலா கூறியது என்ன?

இரானிற்கு ஆதரவாகச் செயல்படும், தெற்கு லெபனானை தளமாகக் கொண்ட ஹெஸ்புலா, இரான் அதிபரை ரைசி மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து அறிக்கையை வெளியிட்டுள்ளது.

“லெபனானில் உள்ள ஹெஸ்புலா, ரைசியின் மரணத்திற்கு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறது” என்று அந்த அறிக்கை கூறுகிறது. தங்கள் குழு ரைசியை நீண்ட காலமாக, நெருக்கமாக அறிந்திருப்பதாகவும், அவர் ஹெஸ்புலாவின் ‘ஒரு வலுவான ஆதரவாளர்’ மற்றும் ‘தங்கள் பிரச்னைகளை திடமாக எதிர்த்தவர்’ என்றும், எதிர்ப்பு இயக்கங்களின் பாதுகாவலர் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஹெஸ்புலா ஒரு ஷியா முஸ்லிம் அமைப்பாகும். அரசியல் ரீதியாக செல்வாக்கு மிக்க இயக்கமாக இருக்கிறது. லெபனானின் மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதப்படை இந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ளது.

1980களின் முற்பகுதியில், இஸ்ரேலை எதிர்ப்பதற்காக, பிராந்தியத்தின் மேலாதிக்க ஷியா சக்தியான இரானால் இந்த அமைப்பு நிறுவப்பட்டது.

ஹெலிகாப்டர் விபத்தின் பின்னணியில் சதியா?

இரானில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த சில எம்.பி.க்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர் சக் ஷுமர், “அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகளுடனான தனது உரையாடல்கள் இந்த கட்டத்தில் தவறான விளையாட்டுக்கான எந்த ஆதாரமும் இல்லை என்று கூறுகின்றன. ஆனால் நிலைமையை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருப்பேன்” என்றார்.

“ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான வடமேற்கு இரானில் மிகவும் மோசமான பனிமூட்டம் நிலவியது. இது ஒரு விபத்து போல் தெரிகிறது. எனினும் அதுகுறித்து முழுமையாக விசாரிக்கப்படுகிறது,” என்று அவர் செய்தியாளர்களிடையே பேசுகையில் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற அவையின் ஆயுதப்படை சேவை கமிட்டிக்கான குடியரசுக் கட்சி தலைவரான மைக்கேல் வால்ட்ஸ் “இது நல்லதே” என்று கூறியுள்ளார்.

“ரைசி அதிபர் பதவிக்கு வருவதற்கு முன்னும் பின்னும் மனித உரிமைகளை துஷ்பிரயோகம் செய்தவர்” என்று அவர் தனது எக்ஸ் பக்கத்தில் எழுதியுள்ளார்.

“ரைசி இறந்துவிட்டால், உலகம் பாதுகாப்பான மற்றும் சிறந்த இடமாக திகழும்” என்று புளோரிடாவைச் சேர்ந்த குடியரசுக் கட்சி உறுப்பினர் ரிக் ஸ்காட் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளார்.

“அவர் மறைந்து விட்டால், கொலைகார சர்வாதிகாரிகளிடமிருந்து தங்கள் நாட்டை மீட்டெடுக்க இரானிய மக்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

விபத்து குறித்து அதிபர் ஜோ பிடனுக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

யார் இந்த இப்ராஹிம் ரைசி?

•இரான் இப்ராஹிம் ரைசி தீவிர பழமைவாத அரசியல் கருத்துகளைக் கொண்ட மத குருவாகக் கருதப்படுகிறார்.

• 63 வயதான ரைசி, 25 வயதில் இரான் தலைநகர் தெஹ்ரானில் துணை வழக்கறிஞரானார்.
2014ம் ஆண்டில் இரானின் வழக்கறிஞர் ஜெனரலாக நியமிக்கப்படுவதற்கு முன்பு, அவர் அரசு வழக்கறிஞராகவும், பின்னர் மாநில இன்ஸ்பெக்டரேட் அமைப்பின் தலைவராகவும், நீதித்துறையின் முதல் துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.

• ரைசி 2017ம் ஆண்டில் முதல் முறையாக அதிபர் பதவிக்கு போட்டியிட்டு அரசியல் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார். அந்த தேர்தலில் அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
• 2019 ஆம் ஆண்டில், ஆயதுல்லா காமனெயி அவரை நீதித்துறையின் சக்தி வாய்ந்த பதவிக்கு நியமித்தார்.
அவர் ஜூன் 2021 இல் இரான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

 

Share.
Leave A Reply